இது நோயல்ல எனக்குக் கிடைத்த வரம்!



சுகர் ஸ்மார்ட்

“எனக்கு மிகுந்த வலிமையையும் எதையும் தாங்கும் திறனையும் டயாபடீஸ்தான் அளித்திருக்கிறது. இது வலி மிகுந்ததாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?’’
- ஹாலி பெர்ரி

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் ஹாலி பெர்ரி. ‘மான்ஸ்டர்ஸ் பால்’ படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர். ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட (டை அனதர் டே) நாயகி. உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுபவர். அது மட்டுமல்ல... 46 வயதிலும் குழந்தை பெற்று சாதனை படைத்தவர்! ‘‘நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீரிழிவே காரணம்’’ என்று தயங்காமல் கூறுகிற ஹாலியை, 22 வயதில் டைப் 1 டயாபடீஸ் தாக்கியது.

‘‘அழகு என்பது காலப்போக்கில் குறைந்து மறைந்துவிடும். ஆரோக்கியம் அப்படி அல்ல. அதை நாம் வாழ்நாள் முழுவதும் பேணிக்காக்க முடியும். அதற்கான அற்புத வாய்ப்பை டயாபடீஸ்தான் எனக்கு வழங்கியது’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் பேசுகிற ஹாலி, ‘40 வயது என நம்ப முடியாத பிரபலங்கள்’ பட்டியலிலும் இடம் பெற்றவர்!

1989 முதல் இடைவிடாது நடித்துக்கொண்டே இருக்கிறார் ஹாலி. ‘‘நான் சிறுமி யாக இருந்த போது, ‘நீ ஒரு நல்ல தோல்வியாளராக இல்லையென்றால், ஒரு நல்ல வெற்றியாளராவதற்கு வழியே இல்லை’ என என்னுடைய அம்மா கூறினார்’’ என்கிற இந்த அழகுப்பெண், வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகப் பாவிக்கிறார்.

ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்பட பல முக்கியமான விருதுகளை நடிப்புக்காக பெற்றிருக்கும் ஹாலிக்கு, ஒருகட்டத்தில் ரஸ்ஸி விருது வழங்கப்பட்டது. மிக மோசமான நடிப்புக்கு வழங்கப்படும் விருது இது என்பதுதான் விஷயமே...

அந்த விருதை யும் ஹாலி நேரிலேயே சென்று பெற்றுக்கொண்டார். இதுவே அவரது சிறப்பான மனநிலைக்கான அறிகுறி. இப்படி எல்லா விஷயங்களையும் நதியின் போக்கிலேயே செல்வது போல இயல்பாக எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தவர் ஹாலி. இதுவே, அவரது மன அழுத்தத்தையும் நீரிழிவையும் சிறப்பாகக் கையாளத் தூண்டுகோலாக அமைகிறது.

ஹெல்த் மட்டுமல்ல... சுற்றுச்சூழல் விஷயங்களில் ஹாலிக்கு மிகுந்த அக்கறை உண்டு. 2006ல், அமெரிக்காவிலுள்ள மாலிபூ கடற்கரைப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த கேப்ரில்லோ போர்ட் திரவ இயற்கை வாயு வசதியை எதிர்த்துப் போராடினார் ஹாலி. ‘‘நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி நான் அக்கறை கொண்டுள்ளேன்.

 கடல் சார்ந்த வாழ்க்கை மற்றும் கடலின் சூழலியல் பற்றியும் நான் அக்கறை கொண்டுள்ளேன்’’ என்றார். ஹாலி உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்கு அம்மாகாண ஆளுனர் அர்னால்ட் ஸுவாஸ்நேகர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

‘‘நீரிழிவு இருப்பதாலேயே நான் சத்தான உணவு சாப்பிடுகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருப்பதால்தான் 46 வயதிலும் கர்ப்பம் அடைந்து, சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது’’ என்கிற ஹாலிக்கு, டயாபடீஸ் அறியப்பட்டதே ஓர் அதிர்ச்சிக் கதைதான்...

ஹாலியின் 22 வயதில், அவரது உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு வார காலம் கோமாவிலேயே கிடந்தார். அப்போது செய்யப்பட்ட சோதனைகளில்தான் அவருக்கு டைப் 1 டயாபடீஸ் இருப்பதே தெரிய வந்தது. அதன் பிறகு 26 ஆண்டுகளாக அவர் நீரிழிவையும் ஒரு தோழன் போல பாவித்து வருகிறார்!

குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலின் போட்டுக்கொள்வது ஹாலிக்கும் கஷ்டமான காரியமாகவே இருந்தது. ஆனாலும், ‘வேறு வழி இல்லை’ என அறிந்த பிறகு, இன்சுலினை அவர் விட்டுவிடவே இல்லை. ‘‘தாய்ப்பாலை மறப்பது போல இன்சுலினையும் எப்படியாவது மறந்துவிடத்தான் நினைத்தேன். ஆனால், அதுதானே நான் நானாக இருக்க உதவி செய்கிறது. அது இப்போது என் குழந்தை போல!’’ என்று சிரிக்கிற ஹாலிக்கு இப்போது 2 குழந்தைகள்.

‘‘எங்கள் குடும்பத்தில் யாருக்குமே நீரிழிவு கிடையாது. பள்ளியில் படிக்கும்போது நான் கொஞ்சம் குண்டாகவே இருந்தேன். அப்போது அதுதான் ஆரோக்கியம் என்று நம்பினேன். 22 வயதில் ரொம்பவும் சோர்வாக உணர்ந்து, ஒரு கட்டத்தில் டயாபடீக் கோமாவில் விழுந்த போதுதான் என் வாழ்க்கை வேறு மாதிரி என்கிற விஷயமே எனக்குப் புரிந்தது.

 ‘நீ உன் பார்வையை இழக்கக்கூடும்... உன் காலைக்கூட வெட்டி விடுவார்கள்... சிறுநீரகம் பழுதாகும்... இதயம் சிக்கலாகும்’ என பலரும் பலவிதமாக மிரட்டிய போது, உலகமே தலைகீழானது போல உணர்ந்தேன். ‘இனி நீ சாக வேண்டியதுதான்’ என்று மட்டும்தான் அவர்கள் கூறவில்லை.

அப்போது என் கண்களில் மரண பயம் இருந்தது. என்னுடைய டாக்டர் நல்லபடியாக விளக்கிய பிறகுதான் எல்லாமே தெளிவானது. என்னையும் என் உடலையும் நன்றாகக் கவனிக்க வேண்டிய தருணம் இது என முடிவெடுத்தேன்.

 உண்மையைச் சொல்வதானால், டயாபடீஸ் என்னைப் பிடிப்பதற்கு முன் இருந்ததை விடவும்,. இப்போது மிகவும் ஹெல்த்தியாக இருக்கிறேன்!’’ என்கிற ஹாலி, இப்போது முறையான உணவு மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தில் இருக்கிறார்.

ஹாலியின் டயட் ‘லோ ஃபேட் அண்ட் சுகர்’ முறையில் அமைந்திருக்கிறது. இனிப்பு வகைகள், ஜங் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு விடை கொடுத்தாயிற்று. ஏராளமாக பச்சைக் காய்கறிகள் சாப்பிடுகிறார். கொஞ்சம் சிக்கன், மீன், பாஸ்தா உண்டு. சிவப்பு மாமிசம் வேண்டவே வேண்டாம் என்கிறார்.

இனிப்பு அதிகமுள்ள பழங்களும் கிடையாது. வழக்கமான உடற்பயிற்சிகளோடு யோகாவும் செய்கிறார் ஹாலி. அடிக்கடி ரத்த சர்க்கரையை சோதித்து, அதற்கேற்பவே இன்சுலின் எடுத்துக் கொள்கிறார். இதற்கான கிட் பேக் எந்த நேரமும் ஹாலியுடனேயே பயணிக்கிறது.

டயாபடீஸ் போலவே வாழ்வின் சகல பிரச்னைகளையும் ரிலாக்ஸாக சமாளிக்கிறார் ஹாலி. முன்னாள் பாய்ஃப்ரெண்ட் ஹாலியை அடித்த போது காதில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. அன்று முதல் அவரது ஒரு காதில் 80 சதவிகிதம் மட்டுமே கேட்கும் சக்தி உண்டு. ஆனால், அந்தக் குறையே தெரியாமல் செயல்படவும் அவர் வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறார்.

நீரிழிவு என்பது ஒரு நோய் அல்ல... அதனால் எந்தக் குறையும் இல்லை... மொத்தத்தில் அது ஒரு வாழ்க்கைமுறை. இதற்கு ஏற்பவே இம்மண்ணில் வாழ்ந்து காட்டும் நட்சத்திரம்தான் ஹாலி!

‘‘‘இனி ந¦சாக வேண்டியது தான்’ என்று மட்டும்தான் அவர்கள் கூறவில்லை. அப்போது என் கண்களில் மரண பயம் இருந்தது...’’‘‘நான் ஆரோக்கியமாக இருப்பதால்தான் 46 வயதிலும் கர்ப்பம் அடைந்து, சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது!’’

பாதமும் தலை போல முக்கியம்தான்

நீரிழிவாளர்கள் மற்ற உறுப்புகளுக்கு அளிக்கக்கூடிய அதே அளவு முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்களில் புண், வலி போன்றவை ஏற்பட்டால், ‘கால்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி கண்டுகொள்ளாமல் விடுவதுதான் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடுகிறது.

நீண்ட காலம் படுக்கையில் கிடப்பதற்கும், ஊனம் ஏற்படக்கூடிய அபாயத்தையும் கூட ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அதனால் ஏற்படும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான சிகிச்சைக்கான செலவுகள் சிரமம் தரக் கூடியவை.

பாதங்களில் சீழ்ப்புண் இருந்தால் உரிய நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, அந்நோய் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை சரிவர உணர்ந்து, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். பாதங்களை தினம் தினம் பராமரித்துக் கண்காணித்தாலே இச்சிக்கல்களை தவிர்க்க முடியும். அல்லது கடுமையான விளைவுகள் ஏற்படுவதை தாமதப்படுத்தவாவது முடியும்.

அபாயத்தை கண்டறியுங்கள்

நீண்ட காலமாக சர்க்கரைநோய் உள்ளவர்கள், குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வைக் கோளாறு
உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதங்களில் சீழ்ப்புண் ஏற்படவும், அது அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயமும் அதிக அளவில் உள்ளது. பின்னர் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்னரே அறிவதன் மூலமே, பாதங்களை பயனுள்ள விதத்தில் பராமரித்து, பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

பாதங்களை பரிசோதியுங்கள்

*நீரிழிவு உள்ள அனைவருமே அபாய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள, ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் தங்கள் பாதங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

*ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அளவில் பாதங்களில் அதிக அபாய நிலவரங்கள் உள்ளவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*நரம்புக் கோளாறு உள்ள நோயாளிகள், தங்கள் பாதங்களை அடிக்கடி மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

அதிக அபாய நிலவரங்களை சமாளிப்பது எப்படி?

*நரம்புக் கோளாறு இருக்கும் நோயாளிகள் சரியாக பொருந்தும் ஷூ அல்லது அத்லெடிக் ஷூ அணிய வேண்டும்.

*உணர்ச்சியின்மையுடன் சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணர்வற்று மரத்துப்போன நிலைமை இருப்பதை உணர்ந்தால் மருத்துவரை உடனே தொடர்புகொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து மிகவும் உன்னிப்பாக இருப்பது மிக முக்கியமாகும். இதை ஒருபோதும் உதாசீனம் செய்யக் கூடாது.

*வீட்டில் இருக்கும்போது கூட, அப்படியே வெறும் காலோடு நடக்கக் கூடாது. பாதங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, அவற்றை அடிக்கடி
கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

*க்ளடிகேஷன் (நடக்கும்போது கால்களில் வலி மற்றும் பலவீனம் மற்றும் ஓய்வாக உட்கார்ந்துவிட்டால் நிவாரணம் ஏற்படும் நிலை) அறிகுறிகளை உணர்ந்தால், மருத்துவர் ஆலோசனையுடன் ‘செல் நாளக்குழாய் பரிசோதனை’ மேற்கொள்ள வேண்டும். க்ளடிகேஷனுக்கு உடற்பயிற்சி மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது உகந்தது.

*பல காலமாக அல்ஸர் (சீழ்ப்புண்) உள்ள நோயாளிகளும் அல்ஸர் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வைக் கோளாறு உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு பாத அபாயம் அதிக அளவில் உள்ளது.

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

ஸ்வீட் ரிசர்ச்

நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், கால்சியமும் வைட்டமின் டியும் எடுத்துக்கொள்வதன் மூலம், டைப் 2 டயாபடீஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

தாஸ்