ஜெனிட்டல் வார்ட்ஸ்



முகத்திலோ, கழுத்திலோ, வெளியில் தெரியும் உடலின் வேறு எந்தப் பகுதிகளிலோ தோன்றும் மருக்களை அழகு சம்பந்தப்பட்ட பிரச்னையாக நினைத்து அவசரமாக சரி செய்ய நினைக்கிறார்கள் பலரும்.

அதுவே அந்தரங்கப் பகுதிகளில் வரும்போது அலட்சியப்படுத்துகிறார்கள். அந்தரங்க உறுப்புகளில் தோன்றும் மருக்கள்தான் அதிக ஆபத்தானவை. ‘ஜெனிட்டல் வார்ட்ஸ்’ எனப்படுகிற அவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.

‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்கிற கிருமியால் உண்டாகிற பிறப்புறுப்பு மருக்கள், பால்வினை நோய்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றை சிகிச்சையின் மூலம் அகற்றாவிட்டால் பின்னாளில் புற்றுநோய்க்கும் காரணமாகலாம்.உலகின் இரண்டாவது பெரிய பால்வினை நோயான இந்த வகை மருக்களால் வருடம் தோறும் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

‘சிபிலிஸ்’ எனப்படுகிற ஒருவகையான கிருமித்தொற்று நோயின் இரண்டாவது கட்டத்திலும் கிருமித்தொற்று இல்லாமலே முத்து முத்தாக, செல்களின் வளர்ச்சிகளில் தோன்றும் மாறுபாட்டாலும் மருக்கள் தோன்றும். பிறப்புறுப்பு, ஆசனவாய், ஆணுறுப்பு, கருப்பை வாய்ப்பகுதி, பிறப்புறுப்பின் முன்பகுதி, முன்தோலின் அடிப்பகுதி போன்ற இடங்களில் தோன்றி, பிற இடங்களுக்குப் பரவும் மருக்கள் அனைத்தும் கிருமித் தொற்றி, 2 அல்லது 3 வருடங்களில்தான் வளர்ச்சி அடையும். நாள்பட்ட நிலையில் புற்றுநோயாகவும் மாறும்.

இவை தட்டையாக இருக்கும் போது தேமலாகத் தெரியும். பிறப்புறுப்பு சருமத்தின் மேல் வளர்ச்சி அடையும் போது காலிஃபிளவர் போல காட்சியளிக்கும். ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், வளர்ந்து பெரிய பிரச்னைகளுக்குக் காரணமாவதைத் தவிர்க்கலாம்.

மருக்கள் இருப்பதாக சந்தேகப்படுகிற திருமணமானவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கால்போஸ்கோப்பி என்ற கருவியின் மூலம் அல்லது பாப்ஸ்மியர் எனப்படும் கருப்பைத் திசுச் சுரண்டல் சோதனை மூலம் மருக்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

மருக்கள் வந்திருந்தால் அவற்றைக் கிள்ளவோ, நசுக்கவோ கூடாது. அதற்கான பிரத்யேக ஆயின்மென்ட் மற்றும் திரவ நைட்ரஜன் போன்றவற்றாலும், லேசர் முறையிலும் நீக்கி விடலாம். கிருமித் தடுப்புக்கும் மருந்துகள் உள்ளன.

மருக்கள் வந்து உதிர்ந்துவிட்டால் கூட தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’கள் எப்போதும் முற்றிலுமாக அழிவதில்லை.

அழிந்து விட்டனவா, இல்லையா எனக் கண்டுபிடிப்பதும் சிரமம். தொடர்ந்து பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நோய் தாக்கம் மறுபடி தொடரும். இந்த வைரஸ்கள் வெளியிடும் ரசாயனத்தால் கறைகள் உண்டாகி கருப்பை வாய் பகுதியில் படிந்திருக்கும். அதனுள்ளே கிருமிகள் வாழும். இவை செல்களில் மாற்றத்தை உண்டாக்கி, நாளடைவில் புற்றுநோயை உருவாக்கும்.

கருத்தரிப்பதற்கு முன்பே பால்வினை மருக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்து, அவற்றை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவை குழந்தைக்கும் தொற்றும். தொண்டையைச் சேதப்படுத்தி, குழந்தையை ஊனமுற வைக்கும். கருப்பை ஹார்மோன்களின் தூண்டுதலால் வளர்கின்ற மருக்கள் பிறப்புறுப்பைக் கூட மூடிவிடுகின்றன. இதனால் குழந்தை பிறப்பதே சிரமமாகும் அபாயமும் உண்டு.

பிறப்புறுப்பு மருக்கள் என்பவை பால்வினை நோய்கள் என்பதால் சிகிச்சை பெறும் போது பாதிக்கப்பட்டவரும், அவரது வாழ்க்கைத் துணையும் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். நோய் குணமாகும் வரை அந்தரங்க உறவையும் தவிர்க்க வேண்டும்.உலகின் இரண்டாவது பெரிய பால்வினை நோயான இந்த வகை மருக்களால் வருடம் தோறும் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

- வி.லஷ்மி