டியர் டாக்டர்



ஆலோசனைன்னு டாக்டரிடம் போனாலே இருநூறு, முந்நூறு கறந்து விடுகிறார்கள். 15 ரூபாயில் அனைத்து டாக்டர்களின் ஆலோசனைகளை ஒன்றுவிடாமல் நம் இல்லத்துக்கே கொண்டு வருவது குங்குமம் டாக்டர்தான். கடந்த 10 இதழ்களும் வாங்காமல் இருந்து விட்டேனே என்று மனம் வருந்துகிறது. இன்றிலிருந்து டாக்டரின் வாசகியாகி விட்டேன்.-
 ரா.கீதா சாமுவேல்ராஜ், சம்சுதீன் காலனி, ஒட்டன்சத்திரம்.

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோர் பலர். இந்நேரத்தில் டாக்டர் கு.கணேசனின் ஆலோசனைகள் மிக முக்கியமானவை. வருமுன் காக்க உதவியாக இருந்தது கட்டுரை.
சின்ன நோயாக இருந்து படிப்படியாக பெரிய நோய்க்கு கொண்டுபோய்விடும் என சொல்லி சர்க்கரையை எங்களை ஒதுக்கிவிடச் செய்து விட்டீர்கள்.
- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை.

‘வெள்ளையில் இருக்கும் வில்லங்கம்’ சர்க்கரை கசக்குற சர்க்கரை கவர் ஸ்டோரி, நல்ல விழிப்புணர்வைத் தந்திருந்தது. உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன், டாக்டர் சுப்புலட்சுமி ஆகியோரது விளக்கங்கள் சர்க்கரை நோய் குறித்துஏ டூ இஸட் விளக்கியிருந்தன.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.

நாராயணரெட்டியின் ‘காதலுக்குக் கண்ணுண்டு’ கட்டுரையும், ‘சைக்கிள் ஓட்டும் பெண்ணை காதலியுங்கள்’ என்ற கட்டுரையும் ‘காதலர் தின’த்தில் வெளிவந்த ‘குங்குமம் டாக்ட’ருக்கு மேலும் பெருமை சேர்த்தது!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

தமிழ்நாட்டில்தான் மிக அதிக பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் என்ற விஷயம் மிகவும் வருத்தத்தை தந்தது.‘அந்த நாள்’ - குடியிலேயே புரளுபவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை அளித்து திருத்தும்.

மது மயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளீர்கள்!மருத்துவர்கள் தங்கள் லெட்டர் பேடில் எழுதும் கிறுக்கலான ப்ரிஸ்க்ரிப்ஷன் புரியாமல் போனாலும் நீங்கள் தரும் ப்ரிஸ்க்ரிப்ஷன் பயனுள்ளதாகவே உள்ளது.எவ்வளவு ஈர(ம்) மனதுடன் குழந்தைகள் நலத்தில் கவனம் காட்டியிருக்கிறீர்கள். வரவேற்கத்தக்க விஷயம்!
- மஞ்சுளாபாய், வியாசர் நகர், சென்னை.

‘நீரிழிவுக்காரர்களுக்கு வலியுடன் இருக்கிற பாதிப்பைவிட வலியில்லாத புண்கள் ஆபத்தானவை. தொற்றுநோய் ஏற்பட்டு அதன் விளைவாக உடல் உறுப்புகளை இழக்கும் நிலை ஏற்படலாம்’ என்று குங்குமம் டாக்டரை படித்ததும் ஊனமுற்றவன் போல உணர்ந்து பிறகு உஷாராகி விட்டேன்!
 - முருகேசன், மேட்டுப்பாளையம், கோவை.

‘தொற்றினால் வரும் தொல்லை’ கட்டுரையில் பெண்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை பற்றி டாக்டர்
ஜெயராணி கூறிய கருத்துகள் பயனுள்ளவை.
- ஜெயசித்ரா, புதுக்கோட்டை.

எனக்கு தாடை வலி வரும்போதெல்லாம் அலட்சியமாக இருந்திருக்கிறேன். மாரடைப்புக்கு தாடை வலியும் காரணமாக இருக்கலாம் என்பதை டாக்டர் கிருபாகரன் கட்டுரையைப் படித்த பிறகுதான் தெளிவு பிறந்தது.- சுதாகரன், நெய்வேலி.