பேச்சு மொழித் திறன் குறைபாடுகள்



மனசே... மனசே...

ஒருவர் தான் நினைப்பதையும் தன் அறிவுத்திறனையும் தனது உணர்ச்சியையும் வெளிக்காட்டுவதற்கு பேச்சு / மொழித்திறன் மிகவும் அவசியம். படிப்பு மற்றும் வேலையிலும், சமூகத்துடன் பழகிச் சிறந்து விளங்குவதற்கும் பேச்சாற்றல் மிகவும் தேவை. இதில் தாக்கம் ஏற்பட்டால் அது ஒருவருடைய தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பீட்டை வெகுவாகப் பாதித்து, வாழ்வில் நிறைவையும் வெற்றியையும் குலைக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு மொழியைப் பேசுவதிலோ, பிறர் பேசுவதைப் புரிந்து கொள்வதிலோ பிரச்னை ஏற்பட்டால், அது நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் ஒன்றான பேச்சு/மொழித் திறன் குறைபாடாக இருக்கலாம்.

இவ்வகை குறைபாடுகள் குழந்தைகளின் வளரும் பருவத்திலேயே காணப்படும். மொத்தம் 4 வகைகள் உள்ளன.மொழித்திறன் குறைபாடு (Language Disorder)குழந்தைகள் மொழியை கற்பதிலும், புரிந்து கொள்வதிலும் சக வயதினரைக் காட்டிலும் பின்தங்கி காணப்பட்டால், மொழித்திறன் குறைபாடாக இருக்கலாம்.

வார்த்தைகளின் அர்த்தம், அவற்றின் இலக்கணத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் வாக்கியம் அமைப்பதில் திணறக் கூடும். மொழித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றவர்களின் பேச்சு/எழுத்து மொழியைப் புரிந்து கொள்வதிலும் (Receptive), பிறருக்கு புரியும்படி அல்லது தெளிவாக பேசுவதிலும்/ எழுதுவதிலும் (Expressive) தன் வயதொத்த குழந்தைகளை விட பின்தங்கி இருப்பார்கள்.

சில குழந்தைகள், தாமதமாகவே மொழித்திறன் வளர்ச்சியை அடையக்கூடும். ஆனாலும், பேச்சு மற்றும் புரிந்து கொள்ளும் திறன், வயதொத்த குழந்தைகள் போலவே இயல்பாக இருக்கும். கேட்பது, பார்ப்பது, புரிந்து கொள்ளு தல், நினைவில் கொள்ளுதல் போன்ற போதிய திறன்கள் பெற்றிருந்தும், மொழித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளால், மொழியை சாதாரணமாக மற்றக் குழந்தைகள் போல கற்க இயலாது. இக்குறைபாடின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளுக்கு ஒன்றோ அதற்கு மேற்பட்ட அறிகுறிகளோ காணப்படலாம்.

அறிகுறிகள் மற்றும் விளைவுகள்

புரிந்து கொள்ளும் திறன் குறைபாடு (Receptive Language Disorder) உள்ள குழந்தைகளிடத்தில் காணப்படும் அறிகுறிகள்...
மற்றவர் சொல்வதைப் புரிந்து கொள்வதில் சிரமம்.
மற்றவர் சொல்வதைப் பின்பற்று வதில் பிரச்னைகள்.
எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதில் சிக்கல். பொதுவாக, குழந்தை  4 வயதை அடையும் முன்னரே, இக்குறைபாட்டின் அறிகுறிகள் காணப்படும்.
சொல்திறன் குறைபாடு

(Expressive Language Disorder)
வார்த்தைகளை வாக்கியமாக அமைப்பதில் சிரமம்.
இவர்கள் உபயோகிக்கும் வாக்கியம் எளிதாகவும் சிறியதாகவும் சரியாக வரிசைப்படுத்தப்படாமலும் இருக்கும்.
பேசும் போது, சரியான வார்த்தைகளை உபயோகிப்பதில் சிரமம்.
வயதொத்த குழந்தைகளை காட்டிலும், குறைந்த சொற்களே தெரிந்திருக்கும்.
பேசும் போது வார்த்தைகளைத் தவற விடுவது.
கேள்வியையோ கேள்வியின் பகுதியையோ திரும்பத் திரும்ப சொல்வது.
சொற்களின் காலத்தை (நிகழ் காலம், கடந்த காலம், எதிர் காலம்) தவறாக பயன்படுத்துவது.

மேற்கண்ட இருவகை மொழித்திறன் குறைபாடுகளில் (Expressive and Receptive), குழந்தைகளுக்கு ஒருவகை குறைபாடு அல்லது இரண்டும் சேர்ந்தும் காணப்படலாம்.
வகுப்பில் பொதுவாக ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் எழுதுவது, படிப்பது, கேள்வி கேட்பது மற்றும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றச் சொல்வது வழக்கம். மொழித்திறன் பாதிப்பிருக்கும் குழந்தைகளுக்கு, இதுபோன்ற பள்ளியில் தினசரி நடக்கும் சாதாரண செயல்பாடுகள் கூட மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இதனாலேயே இவர்கள் கற்பதில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது. பேசுவதிலும், புரிந்து கொள்வதிலும் பிரச்னை என்பதால், இக்குழந்தைகள் சமுதாயத்தில் பழகுவதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

காரணி மற்றும் சிகிச்சைவளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மொழித்திறன் குறைபாடின் சரியான காரணம்இன்றும் கண்டறியப்படவில்லை. சிறுவயதில் ஏற்படும் காது கேளாமை, நரம்பியல் கோளாறு, அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிசம், போதை மருந்து போன்ற பிற பாதிப்புகள் உள்ளவர்களிடத்தும் இவ்வகை கோளாறு காணப்பட லாம். பக்கவாதம், வலிப்பு, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய மூளைச் சேதத்தினால் கூட ஒருவரின் மொழித்திறன் பாதிக்கப்படலாம்.

இக்குறைபாடுக்கு, பேச்சு மொழி வல்லுனர்களின் (Speech Language Pathologists) சிகிச்சை மிகவும் முக்கியம். பேச்சு மொழி வல்லுனர்கள், குழந்தைகளின் பெற்றோர்  மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து குழந்தையின் முன்னேற்றத்துக்காகச் செயல்படுவார்கள். குழந்தைகளின் தேவைக்கேற்ப சில வசதிகளை வகுப்பில் செய்து தருவதன் மூலம் இக்குழந்தைகள் பெரிதும் பயன் பெறுவார்கள். இக்குழந்தைகளுக்கு, சிறப்பான தனிக்கவன வாசிப்பு மற்றும் எழுத்து வழிமுறைகள் கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக, குழந்தைகள், உயர் நிலை பள்ளிக்கு செல்லும் தருணத்தில், இவர்களின் மொழித்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பேச்சு ஒலி குறைபாடு (Speech Sound Disorder)சிறு குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்ளும் போது சில தவறுகளை செய்வது இயல்பு. மழலை சொற்கள், வளர வளர தானாகவே சரியாகி உச்சரிப்பு தெளிவாகி விடும். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும், குழந்தை பேசும் வார்த்தைகளின் ஒலிப்பு மற்றும் உச்சரிப்பில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டால் பேச்சு ஒலி குறைபாடு இருக்கலாம். இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சின் ஒலி மற்றும் பேசும் முறைகளை புரிந்து கொள்வதில் சிக்கலிருக்கும்.

இது ஆண் குழந்தைகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது. குழந்தையின் பேச்சை 3 வயதை அடையும் போதே, (பெற்றோர் தவிர) பிறராலும் பாதிக்கு மேல் புரிந்து கொள்ள முடியும். 5 வயது குழந்தை பேசுவதை, அந்நியர்களால் கூட பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட 8 வயது ஆகும்போது, முழுவதுமாக வார்த்தையில் உள்ள கடினமான ஒலிகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இக்குறைபாடுள்ள குழந்தைகள் பேசும் போது ஒலிகளில் தவறு செய்வதால், குடும்பத்தினர் தவிர பிறர் அக்குழந்தையின் பேச்சை புரிந்து கொள்வது கடினம்.
 
பொதுவான அறிகுறிகள்

வார்த்தையில் மெய்எழுத்து சேர்ந்து வரும்போது, அதை உச்சரிப்பதில் சிரமம் (உதாரணம்... ஈர்ப்பு - ஈப்பு).குறிப்பிட்ட ஒலி உள்ள வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமப்பட்டு அதை விட்டுவிடுவது (உதாரணம்: பழம் - பலம்; ரத்தம் - தத்தம்...)வார்த்தையில் ஒரு ஒலிக்கு பதில் வேறு ஒலியைப் பயன்படுத்துவது (குளி - சுளி;தண்ணி - அண்ணி...)காரணி மற்றும் சிகிச்சை

பெரும்பாலும் பேச்சொலி குறைபாட்டின் காரணங்கள் என்னவென்று கண்டறியப்படவில்லை. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் நெருங்கிய உறவினருக்கு பேசும் திறனில் பிரச்னைகள் இருக்கக் கூடும். நிறைய பேர் கொண்ட குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு இக்குறைபாடு தாக்கும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைக்கு பேச்சொலி குறைபாடு உள்ளதா எனக் கண்டுப்பிடிப்பதற்கு முன்னர், முதலில் அக்குழந்தைக்கு அறிவுத்திறன் குறைபாடு, காது கேளாமை, பெருமூளைவாதம் (Cerebral Palsy), பிளவுபட்ட மேல்வாய் (Cleft Palate) போன்ற பிற பிரச்னைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற கோளாறு உள்ளவர்களுக்கும், பேசுவதில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பேச்சொலி குறைபாடு லேசாக பாதிக்கப்பட்டிருந்தால், 6 வயது ஆகும் போது தானே சரியாகி விடும். தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தைகளுக்கு பேச்சு சிகிச்சை அவசியம். ஸ்பீச் தெரபிஸ்ட் (Speech Therapist)குழந்தைக்கு எப்படி நாக்கை வைத்து உதட்டை மடித்து ஒலியெழுப்ப வேண்டுமென, சிறப்புப் பயிற்சி அளிப்பார். குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகள் இயல்பாக பேசவும்/கிட்டத்தட்ட இயல்பாக பேசவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

திக்குவாய் குறைபாடு (Childhood Onset Fluency Disorder)

குழந்தைப் பருவத்தில், பொதுவாக சரளமாக பேச முடியாமல், குழந்தைகள் சொன்ன வார்த்தை/ஒலியைத் திரும்ப திரும்ப சொல்வதைப் பார்த்திருப்போம். 2லிருந்து 5 வயது வரை உள்ள பெரும்பாலான குழந்தைகள் பேச திக்குவது சகஜம்.

அதற்குப் பின்னரும் 3-6 மாத காலம் வரை தொடர்ந்து திக்கினாலோ, பேசுவதில் சிக்கல்களை எதிர்கொண்டாலோ, சிகிச்சை அவசியம். இவ்வகை குறைபாடு ஆண் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. பின்வரும் அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை அடிக்கடி காணப்பட்டால், குழந்தைக்கு திக்குவாய் பிரச்னை இருக்கலாம்.

அறிகுறிகள் மற்றும் விளைவுகள்

வார்த்தையை நிறுத்தி நிறுத்தி பேசுவது (வார்த்தையின் ஒரு பகுதியை சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிடுவது/மீதி வார்த்தையை சொல்லி முடிக்க முடியாமல் திணறுவது).பேசும் போது நடுநடுவே ஏற்படும் மௌன இடைவெளி அல்லது அவ்வித இடைவெளியில் வேறு ஒலியை (அ, ஆ, உ) பயன்படுத்துவது.

ஒரு வார்த்தைக்கு நடுவே நீண்டநேரம் உயிர்மெய் ஒலிகளை ஏற்படுத்துவது.வாக்கியத்தில் அடுத்தடுத்த வார்த்தைகளை சொல்லாமல் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்வது.பேசும் போது அதிகப்படியான உடல் பதற்றம் ஏற்படுவது.

கடினமான வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது.திக்குவாய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் உடல்ரீதியான அறிகுறிகள் பேசும் போது அதிகமாக கண்ணை சிமிட்டுவது. தலை மற்றும் கை, கால்களை ஆட்டுவது. முக நடுக்கம். குரல் நடுக்கம்... குழந்தை உணர்ச்சிவசப்படும் போதோ /சோர்வாக இருக்கும்போதோ
இவ்வித அறிகுறிகள் மேலும் மோசமடையும்.

இதுபோன்ற குழந்தைகள் பழக்கமில்லாத புது ஆட்களுடன் பேசுவதை தவிர்த்துவிடும். அப்போது, அவர்களைப் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினால், அறிகுறிகள் அதிகப்பட்டு, அதீத பதற்றத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி விடும். அதனால், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பேச வைப்பதன் மூலம் இவ்விதக் குறைபாடை, சரிசெய்ய முடியாது. குழந்தை பேசத் திணறும் போது, பெற்றோர்அவர்களுக்கு நேரம் கொடுத்து பேச ஊக்குவிக்க வேண்டும்.

பிறர், குழந்தையின் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை அனுமதிக்கவே கூடாது. இவ்வித குறைபாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதால், கல்வி, வேலை, சமூக வாழ்க்கை போன்றவற்றை வெகுவாக பாதிக்கிறது.

காரணி மற்றும் சிகிச்சை

திக்குவாய் குறைபாடு, குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால், இதற்கு மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம். இக்குறைபாடு, ஒருசில மாதங்கள் நீடிக்கலாம். அல்லது பல வருடங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். ஒருசில குழந்தைகளுக்கு, திக்குவாய் பிரச்னை வாழ்நாள் முழுவதும் நீடித்து, பெரும்பாலும் மோசமும் அடையலாம்.திக்குவாயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தை குறைத்து, சரளமாக பேச உதவ முடியும். இதற்கு ஸ்பீச் தெரபிஸ்ட் (Speech Therapist) மற்றும் உளவியல் ஆலோசகர்களின் (Psychologist)
பங்கு மிகவும் அவசியம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் திக்குவாய் குறைபாடு வாழ்நாள் பிரச்னையாக ஆவதைத் தடுக்க முடியும்.

சமூக பேச்சுத் திறன் குறைபாடு (Social Communication Disorder)குழந்தைகள், இடம், பொருள் அறிந்து, சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பேசவோ/புரிந்து கொள்ளவோ தெரியாமல் இருந்தால், சமூக பேச்சுத் திறன் குறைபாடு இருக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை, சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படக்கூடும்.

 இக்குறைபாட்டின் அறிகுறிகள், குழந்தைப் பருவத்திலேயே தொடங்கினாலும், சமூகத்திறன்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்போதுதான் வெளித்தெரிய வரும். இதைக் கண்டறியும் முன்னர், நரம்பியல் கோளாறு, ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு அல்லது வேறு மனநல கோளாறுகள் போன்ற கோளாறுகளால் இந்த அறிகுறிகள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தன்னிடம் பேசுபவரின் தன்மை/பின்னணி, பேசும் இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பேசும் பாணியை மாற்றிக் கொள்ள இயலாமை. (உதாரணம்... விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பில், வெவ்வேறு விதமாக பேசுவது மற்றும் குழந்தை/பெரியவரிடத்தில் வெவ்வேறு விதமாக பேசுவது).

உரையாடலின் போது பின்பற்றப்படும் வழிமுறைகளைக் (உதாரணம்... மற்றவர் பேசுவதற்கு அடுத்தடுத்து வாய்ப்பளிப்பது, சொல்வதை மற்றவர் தவறாக புரிந்து கொண்டால், அதைத் திரும்பவும் புரியும்படி சொல்வது மற்றும் உரையாடலை ஒழுங்குப்படுத்தக்கூடிய வாய்மொழி மற்றும் சைகை சமிக்ஞைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல்) கடைப்பிடிப்பதில் சிரமம். மற்றவர்கள், மறைமுகமாக/சூசகமாக சொல்வதை புரிந்து கொள்ள முடியாத தன்மை.

காரணி மற்றும் சிகிச்சைசமூக பேச்சுத் திறன் குறைபாட்டின் சரியான காரணம் கண்டறியப்படவில்லை. இவ்வகை குறைபாடுகள் உள்ளவர்களின் குடும்ப நபர்கள் பெரும்பாலும், கற்றல் குறைபாடு/ஆட்டிசம்/மொழித்திறன் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இக்குறைபாடு ஏற்படுவதற்கு மரபணு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.குழந்தையின் தேவைக்கேற்ப அவர்களுக்கான சிகிச்சையை மனநல நிபுணர் வடிவமைப்பார்.

பொதுவாக, இக்குழந்தைகளுக்கு சமூகத் திறன் (Social Skills) பயிற்சி தரப்படும். இவர்களின் அதீத உணர்ச்சிகளை சமாளிக்க அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy) அளிக்கப்படும். மொழிப் பயிற்சி (Speech Therapy) மூலம் நடைமுறைக்கேற்றவாறு பேசக் கற்றுக் கொடுக்கப்படும்.

இவ்வகை குறைபாட்டுக்கு நிரந்தர தீர்வு கிடையாதென்றாலும், பயனுள்ள சிகிச்சை மூலம், குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள முடியும். சிகிச்சை மூலம் கற்ற திறன்களை தொடர்ந்து பயிற்சி செய்தால், தங்களுக்கு சவாலாக இருக்கும் சமூகச்சூழலை இவர்களால் சமாளிக்க முடியும்.

8 வயது ஆகும்போது, முழுவதுமாக வார்த்தையில் உள்ள கடினமான ஒலிகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.சமூக பேச்சுத் திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை,  சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படக்கூடும்.

(மனம் மலரட்டும்!)

டாக்டர் சித்ரா அரவிந்த்