புன்னகை என்ன விலை?



சினிமா, டி.வி. நட்சத்திரங்களைத் திரையில் பார்க்கும்போது அவர்களின் வசீகர சிரிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தும். பளிச்சிடும் வெண்மை என்ற சோப் விளம்பரம்போல் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த கவர்ச்சிகரமான சிரிப்பு சாத்தியம் என்று தோன்றும். சாமானியர்களும்  தங்களது புன்னகையை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியுமா?

புன்னகை இளவரசி சிநேகா முதல் ‘ஐ’ எமி ஜாக்சன் வரை பல நட்சத்திரங்களின் புன்னகை ரகசியத்துக்குக் காரணமான பல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஹரிஹரனிடம் கேட்டோம்.
‘‘கவர்ச்சியான புன்னகை எல்லோருக்கும் பிறப்பிலேயே வந்துவிடுவதில்லை. இதற்கு சினிமா நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல.

அழகான நேர்த்தியான பல்வரிசை அமைந்த பிரபலங்கள் குறைவுதான். ஆனால், தங்களின் குறை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சில வழிமுறைகளையும் சிகிச்சைகளையும் பிரபலங்கள் கையாள்கிறார்கள். அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாமும் நட்சத்திரம்தான்!’’ என்பவர், முதலில் பற்களின் நேர்த்தியான அமைப்பு பற்றி விளக்குகிறார்.

‘‘மூக்கு இப்படி இருக்க வேண்டும், காது இப்படித்தான் இருக்க வேண்டும் என உடல் உறுப்புகளின் அழகுக்கென்று ஒரு விதி இருக்கிறது. அதேபோல், கடைவாய்ப்பல் இப்படி இருக்க வேண்டும், கோரைப்பல் இப்படி இருக்க வேண்டும் என பற்களுக்கும் ஒரு விதி இருக்கிறது. இந்த வடிவமைப்பு மாறியிருக்கும்போதுதான் அழகு கெட்டுப் போனது போன்ற உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இது போன்ற குறைபாட்டுக்குக் காரணமான பல்லை சரி செய்யும்போது அந்த அழகு திரும்பக் கிடைத்துவிடும். சொத்தைப் பல்லாக இருந்தால் அந்த சொத்தையை அகற்றிவிட்டு Filling முறையில் சரிசெய்துவிடலாம். பல் அடிபட்டிருந்தால் Root canal treatment இருக்கிறது.

பற்கள் தூக்கினாற் போலவோ, உள்ளடங்கிப் போயிருந்தாலோ க்ளிப் மாட்டிக்கொண்டால், 6 மாதத்தில் சரியாகிவிடும். க்ளிப் போடுகிற இந்த Orthodontic treatmentஐ வளர்கிற  காலத்திலேயே   செய்துவிட்டால், 20 வயதில் அழகான புன்னகையைப் பெற முடியும். அதற்காக 20 வயதுக்குப் பிறகு சரி   செய்ய முடியாதோ என்ற சந்தேகம் தேவையில்லை.  சின்ன வயதில் அறியாமையாலோ அல்லது பண வசதி குறைபாட்டாலோ பலரால் செய்ய முடியாது.

அதனால் 20 வயதுக்கு மேலும் க்ளிப் முறையில்   சரிசெய்ய முடியும். இந்த க்ளிப் டிரீட்மென்ட்டுக்கு 18 முதல் 22 ஆயிரம் வரை செலவாகும். க்ளிப் அணிந்திருப்பது வெளியில் தெரியக் கூடாது என்றால் செராமிக் தொழில்நுட்பத்தின்மூலம் க்ளிப் அணிந்துகொள்ளலாம். அதற்கு 30 ஆயிரம் ஆகும்.

இதில் Lingual treatment மூலம் பற்களின் உள்பகுதியில் க்ளிப் அணிந்துகொள்ளும் முறையும் இருக்கிறது. இந்த லிங்குவல் முறையில் க்ளிப் அணிந்திருப்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கு 50 முதல் 60 ஆயிரம் வரை ஆகும்.

க்ளிப் மூலம் சரிசெய்ய முடியாத பட்சத்தில், குறிப்பிட்ட பல்லை முழுமையாக அகற்றிவிட்டு Implant முறையில் சீரமைத்துவிடலாம். சங்கடப்படுத்தும் வகையில் ஒரு பல் தூக்கிக் கொண்டிருந்தாலோ, ஒரு பல்லால் எந்தப் பயனும் இல்லை என்று   தெரிகிற அளவு அடிபட்டிருந்தாலோ அந்தப் பல்லை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வேர் பதித்து, செயற்கையான பல் வைத்துவிடுவோம்.

அது செயற்கை பல் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இம்ப்ளான்ட் செய்துகொண்டவருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. அந்த அளவு உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். இந்த இம்ப்ளான்ட் சிகிச்சைக்கு 10 நிமிடம் தான் ஆகும். கட்டணம் 25 முதல் 28 ஆயிரம் வரை’’ என்றவரிடம், ‘விளம்பரங்களிலும் சினிமாவிலும் நட்சத்திரங்களின் புன்னகை ஜொலிப்பதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டோம்.

‘‘அது Laser bleaching தொழில்நுட்பத்தின் கைவண்ணம். இந்த வெண்மை6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். நிரந்தரமானது அல்ல. அதனால், வருடம் ஒருமுறை ப்ளீச்சிங் செய்துகொள்வார்கள். இது தலைக்கு டை அடித்துக் கொள்வது போலத்தான். திருமணத்துக்குத் தயாராகிறவர்களும் இந்த ப்ளீச்சிங்கை விரும்பி செய்து கொள்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின்மூலம் செய்யப்படும் இந்த லேசர் ப்ளீச்சிங்கை அரை மணிநேரத்தில் செய்துவிடலாம். பற்களில் பாதிப்பு எதுவும் ஆகாது.

ப்ளீச்சிங் செய்திருந்தாலும் இரவில் தூங்கச் செல்லும்முன் தவறாமல் பல் துலக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், இரவில் நாம் உண்ணும் உணவின் துகள்கள் பல்லிலும், பல் இடுக்கிலும் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக   எனாமல் அரிக்கப்படும், கறை படியும், துர்நாற்றம் ஏற்படும். அதனால், ப்ளீச்சிங் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும். லேசர் ப்ளீச்சிங்குக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை கட்டணம்.

இந்தக் கட்டணத்துக்கு வயது வித்தியாசமெல்லாம் இல்லை’’ என்பவர், ‘‘பிறப்பால் நேர்த்தியான பற்கள் அமைந்தவர்கள் அந்த அழகைப் பராமரித்தாலே போதும். பிறப்பிலேயே பற்களின் அமைப்பு சரியில்லை என்றாலோ, இடையில் பற்களின் அழகு கெட்டுவிட்டது என்றாலோ, வருத்தப்பட வேண்டியதில்லை. பற்களில் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் இன்று சிகிச்சை இருக்கிறது!” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார்.பல்லில் என்ன குறை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சில வழிமுறைகளையும் சிகிச்சைகளையும் கையாண்டால் நாமும் நட்சத்திரம்தான்!

பற்களின் பராமரிப்புக்கு சில எளிய வழிகள்...

பற்களின் பராமரிப்பை வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். முதல் கட்டமாக இரண்டு வேளை கண்டிப்பாகப் பல் துலக்க வேண்டும். பற்கள் அடிபட்டிருக்கிறதா, சொத்தை உருவாகியிருக்கிறதா போன்ற குறைபாடுகளை நாமே கண்டுபிடித்துக்கொள்ளும் வகையில் நல்ல சூரிய வெளிச்சத்தில் கண்ணாடியை வைத்து நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது, ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை க்ளீனிங் (Cleaning) செய்துகொள்ள வேண்டும்.

‘நான்தான் இரண்டு வேளை பல் துலக்குகிறேனே... எனக்கு எதற்கு க்ளீனிங்’ என்று சிலர் நினைக்கலாம். நாம் வழக்கமான பல் துலக்கும் முறையின் மூலம் இண்டு, இடுக்குகளை சுத்தம் செய்ய முடியாது. அதற்காக க்ளீனிங் அவசியம். க்ளீனிங் செய்ய 10 நிமிடம்தான் ஆகும். கட்டணம் 500 ரூபாய் முதல் 700 வரை இருக்கும். கடுமையான கறைகளாக இருந்தால் 1,000 முதல் 1,200 வரை கட்டணம் மாறும்.

பற்களை ப்ளீச்சிங் செய்துகொள்வது வெளித்தோற்றத்துக்கு மட்டுமே உதவும். க்ளீனிங் செய்துகொள்வதுதான் நம் பற்களை சுகாதாரமாகப் பராமரிக்க உதவும். எல்லோரும் ப்ளீச்சிங் செய்துகொள்ள முடியாது. ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. ஆனால், க்ளீனிங் எல்லோருக்கும் அவசியம், சாத்தியம். சிகரெட், பாக்கு வகைகளைப் பயன்படுத்துவது போன்ற தவறான பழக்கங்களால் ஏற்பட்டிருக்கும் கறையை ப்ளீச்சிங் செய்துதான் அகற்ற வேண்டும். ப்ளீச்சிங் குழந்தைகளுக்குத் தேவையில்லை. 14 வயதுக்கு மேல் எந்த வயதிலும் க்ளீனிங் செய்துகொள்ளலாம்!

ஞானதேசிகன்
படம்: எம்.சதீஷ்குமார்