குறைந்த விலையில் மருந்துகள் சாத்தியமா? கண்துடைப்பா?



விவாதம்

மருந்து, மாத்திரைகளின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. ‘குறைந்த விலையில் மருந்துகள்’... திட்டத்துக்குப் பெயர் ‘ஜன் அவ்ஷதி’. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு பழைய திட்டத்தை தூசு தட்டி, துடைத்து, புதுசாகத் தர இருக்கிறது மத்திய அரசு.

உயிர் காக்கும் மருந்துகள், ஆன்டி பயாடிக், வலி நிவாரணி, வைட்டமின் என 504 மருந்துகள் அத்தியாவசியமானவை என கணக்கிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாடு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

‘ஜூலை 1 முதல் முழு வீச்சில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 100 முக்கிய மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது அரசு. இதற்காக டெல்லியில் 800 மருந்துக் கடைகள் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தக் கடைகள் கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்படுமாம். குறைந்த விலைக்கு மருந்துகள் தயாரிக்க டெண்டர் விடும் பணியும் மும்முரமாகியிருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் நல்ல திட்டம்தானா? இதனால் பலன் உண்டா? ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயனடைவார்களா?

மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்... ‘‘‘ஜன் அவ்ஷதி’ முழுமையானது அல்ல... மாற்றத்துக்கான முதல்படி’’ என்று ஆரம்பிக்கிற புகழேந்தி ஏற்கனவே இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். ‘‘கிராமப்புற மருத்துவப் பிரச்னைகளும் தீர்வை நோக்கிய பாதையும்’ - இதுதான் புத்தகத்தோட தலைப்பு. இந்தியாவுல 70லிருந்து 80 சதவிகித மக்கள் சொந்த செலவுல மருத்துவம் பார்க்கறாங்க. அப்படி செலவழிக்கிற தொகையில 75 சதவிகிதம் மருந்து, மாத்திரைக்கே செலவாகுது.

மொத்தவிலை, சில்லறை விலைன்னு மிகப்பெரிய அளவுல விலையில வித்தியாசம் இருக்கு. ‘சரி... மருந்து கம்பெனிகளும் ஒரு வகையில தொழில் நிறுவனங்கள்தானே... அவங்க லாபம் பார்க்கக் கூடாதா’ன்னு கேள்வி கேட்கலாம்.

லாபம் பார்க்கலாம்... அது கொள்ளை லாபமா இருக்கக் கூடாது! ‘ஃப்ளுகோனாஸோல்’னு (Fluconazole) ஒரு மாத்திரை... 2008ல அந்த மாத்திரை பதிவு பெற்ற மருத்துவர்களுக்கும் பதிவு பெற்ற ஃபார்மசிஸ்டுகளுக்கும் விற்கப்பட்டது 3 ரூபா ஐம்பது காசுகளுக்கு (ஒரு மாத்திரை). அதே மாத்திரை சில்லறை விற்பனையில் (எம்.ஆர்.பி.) 32 ரூபா. இது கொள்ளை லாபம்தானே? இப்போ விலை கொஞ்சம் குறைஞ்சிருக்கு... டாக்டர்களுக்கும் ஃபார்மசிஸ்டுகளுக்கும் 3 ரூபா 75 காசு. சில்லறை விற்பனையில் 16 ரூபா.

மருந்துகள் ரெண்டு வகை. காப்புரிமை (Patented) மருந்து... வர்க்க (Generic) மருந்து. ஜுரத்துக்குக் குடுக்கற ‘பாரசிட்டமால்’னு ஒரு மருந்து... ‘பாரசிட்டமால்’ங்கறது ஜெனரிக் மருந்து... இதையே பல கம்பெனிகள் வெவ்வேறு பெயர்கள்ல விற்பனை செய்யறாங்க.

 அது காப்புரிமை மருந்து. ஏதோ ஒரு நோய்க்கு ஒரு கம்பெனி மருந்து கண்டுபிடிச்சா, அந்த மூலக்கூறை பயன்படுத்தி மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள், அந்த கம்பெனிக்கு20 வருஷங்கள் அல்லது பேட்டன்ட் காலம்  முடியற வரைக்கும்   ராயல்டி குடுக்கணும். அதனால அதையும் கணக்குல எடுத்துக்கிட்டு, விற்கிறோம்னு மருந்து தயாரிக்கிற கம்பெனிகள் சொல்றாங்க. ஆனாலும், அநியாய லாபத்துக்கு விற்கலாமா?

‘அமிக்காசின்’னு (Amikacin) ஒரு மாத்திரை. அதை மருந்து கம்பெனிகள், டாக்டருக்கும் ஃபார்மசிஸ்டுக்கும் 12 ரூபாய்க்கு (ஒரு மாத்திரை) தர்றாங்க. ஆனா, மெடிக்கல் ஷாப்புல சாதாரண ஜனங்களுக்கு 85 ரூபாய்க்கு விற்கப்படுது. 12 ரூபான்னா, அதை தயாரிக்க ஆகும் செலவு 8 ரூபா. மொத்த விற்பனையாளர்களுக்கு 9 ரூபாய். நான் என் புத்தகத்துல ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கறவங்களுக்கு அந்த மாத்திரையை ஏன் 12 ரூபாய்க்குக் கொடுக்கக் கூடாது?’ன்னு குறிப்பிட்டேன்.

உற்பத்தியாளர்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் லாபம். இடைத்தரகர்களுக்குத்தான் நஷ்டம். அவங்களை கணக்கில் எடுத்துக்காம, அரசே ஏன் இதை விற்கக்கூடாது? நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, அவங்க மூலமாகவும் விற்கலாம். விற்பனை செய்யறதுக்கு ஒரு இடமும், விற்பனை செய்ய பயிற்சி பெற்ற ஒரு நபரும், இதை கண்காணிக்கறதுக்கு ஒருவரும் வேணும். இப்படி உடனே சாத்தியமாகிற பல வழிகளை அரசு யோசிக்கலாமே!

பெண்களுக்கு ரத்தசோகைக்கான மருந்து ஒண்ணு டாக்டர்களுக்கும் ஃபார்மசிஸ்டுகளுக்கும் விற்கப்படும் விலை 23 ரூபா 50 காசுகள். அதே மருந்து சில்லறை விற்பனையில் 78 ரூபா. ஏன் இவ்வளவு வித்தியாசம்? இதையெல்லாம் அந்தப் புத்தகத்துல குறிப்பிட்டிருந்தேன். புத்தகத்தைப் பல பேருக்கு அனுப்பினேன்.

அப்போ இருந்த ஒரு மத்திய அமைச்சர் அந்தப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் பண்ணினார். அதுக்கப்புறமா மத்திய அரசும்3 மாநிலங்கள்ல ‘ஜன் அவ்ஷதி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனா, சரியா அமல்படுத்தாம நின்னு போச்சு.

அம்மா மருந்தகங்கள்ல விற்கப்படும் விலையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. சில்லறை விற்பனையில ஒரு மருந்தோட விலை 80 ரூபான்னா, 10 சதவிகித தள்ளுபடியில 72 ரூபாய்க்கு தர்றாங்க. டாக்டர்கள்லயே பெரும்பாலானவங்க ஜெனரிக் மருந்தை ப்ரிஸ்க்ரிப்ஷன்ல எழுதறதில்லை. பேடன்ட் மருந்தைத்தான் எழுதுறாங்க. கேட்டா, ‘அந்த ஜெனரிக் மருந்தோட தரம் நல்லா இருக்காது. தரம்தான் முக்கியம்’னு குற்றம் சாட்டிடுவாங்க.

 ஒரு மருந்து ஜெனரிக் மருந்துங்கறதாலயே உற்பத்தி செய்யக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதா? ஒரு மருந்து தரக்குறைவா இருக்குன்னா, அதுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கலாமே? தரக்கட்டுப்பாட்டை கடுமையா அமல்படுத்தலாமே! சில மருந்து கம்பெனிகள் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்யறாங்கன்னா அரசுதான் அதை சரிப்படுத்தணும். அதனால, ஜெனரிக் மருந்தை அரசே ப்ரொமோட் பண்ணலாமே?

இந்தியாவுல இதெல்லாமே வழிகாட்டுதல்களா இருக்கு. ஆனா, எதையுமே சட்டமாக்காலை. அரசின் ‘நேஷனல் ஃபார்மசூட்டிக்கல் ப்ரைசிங் அத்தாரிட்டி’தான் மருந்தின் விலையை நிர்ணயம் செய்யுது. ஆனா, எல்லாத்தையும் வழிகாட்டுதலாத்தான் வச்சிருக்காங்க.

அதாவது, மருந்து கம்பெனி உற்பத்தி செய்யற மருந்து, மாத்திரையின் விலையோட ஆதாய அளவு (Profit Margin) 15 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது... சில்லறை விற்பனையாளர்களின் ஆதாய அளவு 30 சதவிகிதத்துக்குள் இருக்கணும்... இதெல்லாம் சட்டமாக இல்லை. மருந்து விற்பனையில் இடைத்தரகர்கள் இல்லாமல் இருக்க அரசுதான் முயற்சி செய்யணும்.

இந்தியாவுல அரசு மருத்துவமனைகளும்  இலவச மருந்துகளும் இருக்கு. அப்புறம் ஏன் ஜன் அவ்ஷதி? அங்கே பல மருந்துகள் தரம் குறைவா இருப்பதுதான் காரணம்.   ‘ஜன் அவ்ஷதி’ முதல் படிதான். அதையும் சில மாநிலங்கள்லதான் பண்ணியிருக்காங்க. மருந்துக்கான விலை உச்ச வரம்பை சட்டமாக்கினாத்தான் முழுமையான தீர்வு கிடைக்கும். மருந்தின் பெயர், விலையை லேபிள்லயே தெளிவா குறிப்பிடணும்.

இடைத்தரகர்களை நீக்குவதை ஒரு கொள்கை முடிவாகவே ஆக்கணும். எந்த மருந்தாக இருந்தாலும் அது மக்களின் வாங்கும் திறனுக்குள்ள இருக்கணும். ஆரோக்கியமும் தரமான மருந்தும் அடிப்படை உரிமை. ‘ஜன் அவ்ஷதி’யை நீண்டகால திட்டமா நடைமுறைப்படுத்தணும். ஜெனரிக் மருந்துகளின் தரத்தை மேம்படுத்தணும். அவை விற்கப்படும்போது அதுல ஊழல் நடக்காம பாத்துக்கணும்...’’

‘ஜன் அவ்ஷதி’ திட்டம் குறித்து அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனத்தின் மாநில செயலாளர் ரமேஷ் சுந்தர் சொல்கிறார்... ‘‘இந்தத் திட்டம் 2008லதான் ஆரம்பிச்சுது. டெல்லி, குஜராத் மற்றும் சில இடங்கள்ல மட்டும் செயல்படுது. ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் விற்கப் போறதா அரசு அறிவிச்சிருக்கு. ஆனா, அரசு இந்த மருந்துகளை வாங்கப் போறது பொதுத்துறை மற்றும் தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்துதான்.

ஏற்கனவே ஐ.டி.பி.எல்., ஹிந்துஸ்தான் ஆன்டிபயாட்டிக் லிமிடெட் போன்ற மருந்து நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையால் உற்பத்தியிலேயே ஈடுபடாம இருக்கு. அதனால, இந்த அறிவிப்பே கண்துடைப்பாதான் தெரியுது. இனி வரும் காலங்கள்ல புதுசா வரக்கூடிய மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்கள்கிட்ட இருந்துதான் வாங்கணும். பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளா வச்சிருக்கிறப்ப இது எப்படி சாத்தியமாகும்?

இப்போ அறிவிச்சிருக்கற 100 பிராண்டையும் யார்கிட்ட வாங்கணுங்கறதை ஒரு கமிட்டிதான் முடிவு செய்யப் போகுது. அதுலயும் ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி எந்த மருத்துவரும் ஜெனரிக் மருந்தை ப்ரிஸ்க்ரிப்ஷன்ல எழுதறதில்லை. கம்பெனி பெயரைத் தான் எழுதறாங்க. இந்த அடிப்படையை முதல்ல சரிப்படுத்தணும். ‘ஜன் அவ்ஷதி’ திட்டத்தை அரசு ஏற்று நடத்துவது தவறில்லை. ஆனா, நம்பகத்தன்மையோடு இருக்கணும்...’’

மருந்து உற்பத்தியாளர் மற்றும் சமூக ஆர்வலர் பாலாஜி... ‘‘ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் தமிழக அரசின் மெடிசின் ப்ரொக்யூர்மென்டை அடிப்படையா கொண்டுதான் 2008ல இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாங்க.

‘ஜன் அவ்ஷதி’ சிறப்பான திட்டம். அப்போவே 12 ஆயிரம் மருந்துக்கடைகளை திறக்கப் போறதா சொன்னாங்க. 2015 வரை 615 கடைகள்தான் இருக்கு. இந்தத் திட்டம் முறையா செயல்படணும்னா ஜெனரிக் மருந்துகளின் பெயர்களை உள்வாங்கிக்க எல்லா டாக்டர்களும் பயிற்சி எடுத்துக்கறது அவசியம். உச்ச நீதிமன்றமே ப்ரிஸ்க்ரிப்ஷனை கேபிட்டல் லெட்டர்ஸ்ல எழுதணும்னு ஆலோசனை சொல்லியிருக்கு. அதனால இந்த ஜெனரிக் மருந்துகளையும் அப்படியே எழுதலாம்.

‘ஆதார் அட்டை’, ‘ஸ்வச் பாரத்’ போன்ற திட்டங்களை முழு வீச்சா அமல்படுத்தற மாதிரி ‘ஜன் அவ்ஷத்’ திட்டத்தையும் அமல்படுத்தலாமே! இது போன்ற பிரச்னைகளை விவாதிக்க அரசுதான் மக்கள்கிட்ட வரணுமே தவிர, மக்கள் தேடிப் போகக் கூடாது. வளர்ந்த நாடுகள்லயே சுகாதாரத்துக்காக 4லிருந்து 6 சதவிகிதம் நிதி ஒதுக்கறப்போ, இங்கே 1 சதவிகிதம்தான். இப்போ அதுவும் 0.8 சதவிகிதமாகிடுச்சு. மக்களுக்கு இலவசமா மருந்து, சிகிச்சை தர வேண்டியது அரசோட கடமை.

ஆனா, இந்தத் திட்டத்தின் மூலமாக காசு குடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில இருக்கோம்கிறது வேதனையான விஷயம்...’ ‘‘மருந்து விற்பனையில் இடைத்தரகர்கள் இல்லாமல் இருக்க அரசுதான் முயற்சி செய்யணும்...’’ எந்த மருத்துவரும் ஜெனரிக் மருந்தை ப்ரிஸ்க்ரிப்ஷன்ல எழுதறதில்லை. கம்பெனி பெயரைத்தான் எழுதறாங்க...

 மேகலா