காலணிகளிலும் கவனம் செலுத்துங்கள்



எச்சரிக்கை

பரவலாகி வரும் நீரிழிவு நோயால் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. உணவுமுறை, உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் கவனம் செலுத்து கிறோம். இதேபோல காலணிகளிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நீரிழிவு ஏற்பட்டால் பாதங்களிலும் பல்வேறு பிரச்னைகள்

உண்டாகின்றன. எப்படியெனில் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் உணர்வு இழப்புகளால் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன.

இதன் காரணமாக பாதங்களில் புண்களும் தொற்றுகளும் ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்னைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு காலணிகள் பல வகைகளில் உள்ளன.

இந்தக் காலணிகளை தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நம் உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, நீரிழிவு நோய் மருத்துவர் மற்றும் பாதநோய் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது.

- கௌதம்