விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்



நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

‘குங்குமம் டாக்டர்’ கடந்த இதழின் கவர் ஸ்டோரியைப் படித்திருப்பீர்கள். இன்னும் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டிராத பார்க்கின்ஸன் பற்றிய முக்கிய கட்டுரை அது. அதைப் படித்ததும் ஒரு நரம்பியல் மருத்துவராக எனக்குள்ளும் அதுகுறித்த சில சிந்தனைகளும், பார்க்கின்ஸன் தொடர்பான அனுபவங்களும் நினைவுக்கு வந்தது.

எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஒருவர் திடீரென்று எந்த சலனமுமற்று ஸ்தம்பித்துவிடுவார்கள். இது ஏன் இப்படி?  நரம்பியல் படிப்பதற்கு முன்பு இந்த கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், நரம்பியல் துறை முதுகலை மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்தபோது நான் தினமும் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிலை என்னை மிகவும் பாதித்தது...

30 வருடங்களாக தனி வீட்டில் இருந்துவிட்டு, சென்னையின் அபார்ட்மென்ட் வாழ்க்கை எனக்கு புது அனுபவம்தான். முதல் நாளே கீழ் வீட்டில் இருந்து கணீரென்று ஒலித்த கந்த சஷ்டி கவசம்தான் தூக்கத்தில் இருந்து எழுப்பியது. எட்டிப் பார்த்தபோது கீழ் போர்ஷனின் வாசலில் போடப்பட்டிருந்த அழகான கோலம் கண்ணில் பட்டது.
சற்றே ஆர்வத்துடன் கீழிறங்கி பார்த்தபோது 60 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா, சுவாமிக்கு சூடம் காண்பித்துக் கொண்டே கந்த சஷ்டி கவசம் பாடிக்கொண்டிருந்தார். தனது மகன், மருமகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். படுசுறுசுறுப்பானவராகத் தெரிந்தார்.

காலை 4 மணிக்கே எழுந்து அப்பார்ட்மென்ட் வாசலை கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு, தனது வீட்டுபோர்ஷன் வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டு, குளித்து பிரார்த்தனை முடித்து, சமையல் செய்து, பேரக்குழந்தைகளை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, மகன், மருமகளுக்கு டிபன் ரெடிசெய்து, மதிய உணவை கேரியரில் கட்டிக்கொடுத்து வேலைக்கு அனுப்புவது என பம்பரமாக சுழன்றுவிட்டு பிறகுதான் சற்றே ஓய்வார். இது தினமும் நான் பார்க்கும் காட்சி.

காலை 4 மணி முதல் 10 மணி வரை அவர் வேலை செய்வதை பார்க்கும்போது, அவருக்கு 10 கைகள் இருப்பது போன்று நமக்கு தோன்றும். அவ்வளவு சுறுசுறுப்பு. அவரை எண்ணி வியந்தபடியே, எனது நாள் தொடங்கும். நரம்பியல் முதுகலைப் படிப்பென்பது ஒரு ஆராய்ச்சி படிப்பு போன்றதுதான். முழு நேரமும் மூழ்கிக் கிடக்க வேண்டியிருந்ததால், கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருக்கும். நடுவில் அவர்களை மறந்தேவிட்டேன்.

மார்கழி மாதம், பனி சூழ்ந்த காலைப்பொழுது. ஜாக்கிங் போகலாம் என்று கீழே இறங்கியபோதுதான் எப்போதும் திறந்திருக்கும் அந்தப் பெண்மணி வீட்டு வாசற்கதவு திறக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. சற்று குழப்பத்துடன் ஜாக்கிங் போய் வந்தபிறகுதான் என் மனைவி சொன்னாள் அந்த அம்மாவிற்கு இப்போதெல்லாம் உடம்புக்கு முடிவதில்லை. யாருடனும் சரியாக பேசுவதில்லை. அவள் தன்னுடைய வேலையை செய்வதற்கே யாராவது துணை தேவைப்படுகிறது என்றாள். என்னதான் இருக்கும் என்று யோசித்துக்கொண்டே கீழ் வீட்டிற்கு சென்றேன்.

அவர் மகனிடம்  பேசிக்கொண்டே அவரை அழைத்து வாருங்கள் என்னவென்று பார்க்கலாம் என்றேன். அவர் உள்ளே சென்று மாமியை கைத்தாங்கலாக அழைத்து வந்தார். மாமியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை; எந்த வித உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இல்லை; ஒரு ரோபோவைப் போல் சிறுசிறு அடியாக எடுத்துவைத்து நடந்து வந்தார். அருகில் வந்தபோது இரவு புடவையிலேயே சிறுநீர் கழித்திருந்ததால் நாற்றம் அடித்தது. கைகள் மணி உருட்டுவது போன்று நடுங்கிக்கொண்டிருந்தது. பார்த்தவுடனேயே அந்தப்பெண்மணிக்கு வந்துள்ளது பார்க்கின்ஸன்ஸ் நோய் என்று தெரிந்து விட்டது.

நடுக்குவாதம் அல்லது பார்க்கின்ஸன் நோய் என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பினால் வருவது. நமது மூளையில் சப்ஸ்டான்ஷியா நைக்ரா(Substantia Nigra) என்னும் ஓர் சிறிய இடம் உள்ளது. ‘நைக்ரா’ என்றால் கருப்பு என்று அர்த்தம். டோபமைன் என்னும் ஹார்மோன் அவ்விடத்தில் இருப்பதாலே சப்ஸ்டான்ஷியா நைக்ரா கருப்பாக காட்சியளிக்கிறது. உடலின் இயக்கத்திற்கு டோபமைன் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. இந்த ஹார்மோனின் குறைபாடு ஏற்படும்போது உடலின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. டோபமைன் ஹார்மோன் சுரப்பு குறையும் போது உண்டாகும் நோயே பார்க்கின்ஸன் நோய்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான காரணம் இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வயதாவது, சுற்றுச்சூழல் மாறுபாடு, அசாதாரணமான மரபணுக்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்நோயானது ஆங்கில மருத்துவரான ஜேம்ஸ் பார்க்கின்ஸன் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் 1817-ம் ஆண்டு தனது ஆய்வுக் கட்டுரையில் ஷேக்கிங் பால்சி என்று இந்நோயைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நோய்க்கான அறிகுறிகள்

1) நடுக்கம்
2) உடல் உறுப்புக்கள் இறுக்கமடைதல்
3) உடல் இயக்கங்கள் மெதுவாதல்
4) நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம்
5) முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் வெளிக்காட்டாமல் சலனமற்று இருத்தல்
6) சிறிய கையெழுத்து
7) நுகர் திறன் இழப்பு
8) தூக்கப் பிரச்னைகள்
9) மலச்சிக்கல்
10) அடிக்கடி சிறுநீர் கழிப்பது
11) குரலில் மாற்றம்
12) கவனம் செலுத்துவதில் குறைபாடு
13) நினைவுத்திறன் குறைவது
14) மனநிலைக் கோளாறு
15) அதிகமாக எச்சில் சுரந்து வாயிலிருந்து ஒழுகுதல்.

நடுக்கம்

இதுதான் பார்க்கின்ஸன் நோயின் முதன்மையான அறிகுறி. பெரும்பாலும் ஒரு கையில் மட்டுமே நடுக்கம் ஆரம்பிக்கும். சில வருடங்கள் கழித்து அடுத்த கைக்கு இந்நடுக்கம் பரவும். பார்க்கின்ஸன் நோயில் காணப்படும் நடுக்கம் தனித்துவமானது கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே ஒரு மணியை வைத்து உருட்டுவதைப் போன்று இருக்கும். ஆங்கிலத்தில் இதனை Pill rolling tremor என்று கூறுவோம்.

பெரும்பாலும் ஓய்வில் இருக்கும் சமயத்திலேயே இந்நடுக்கம் அதிகமாக காணப்படும். ஒரு செயலைச் செய்யும்போதோ அல்லது கையை முன்நோக்கி நீட்டும்போதோ நடுக்கத்தின் வீரியம் குறையும். எனவே இந்நடுக்கத்தை Resting tremor என்றும் கூறுவோம்.

உடல் உறுப்புக்கள் இறுக்கமடைதல்

ஓய்வில் இருக்கும்போதும் தசைகள் இலகுவாக இல்லாமல் இறுக்கமாகக் காணப்படும். அவர்களது கைகளை அல்லது கால்களை மடக்கி நீட்டிப்
பார்த்தால் ஒரு இரும்பு கம்பியை வளைப்பது போன்று இறுக்கமாக இருக்கும். அவர்களது தலையை இரு கைகளால் பிடித்து வலது புறமும் இடது புறமும் அசைத்துப் பார்த்தால்தான் தெரியும், கழுத்தை பக்கவாட்டில் இரு புறமும் திருப்புவது அவ்வளவு கடினமானதாக இருக்கும். தசைகளின் இறுக்கமே இதற்கான காரணம்.

உடல் இயக்கங்கள் மெதுவாகுதல்

நாம் சாதாரணமாக நடக்கும்போது கால்களுக்கு இணையாக கைகள் இரண்டும் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருக்கும். பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்கள் நடக்கும்போது கைகள் இரண்டையும் உடம்போடு ஒட்டி வைத்துக்கொண்டு கையை அசைக்காமல் ஒரு ரோபோவை போல் நடப்பார்கள். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அவர்களால் மிக மெதுவாகவே செய்ய முடியும். குளியல் அல்லது உணவருந்துதல் போன்ற எளிய வேலைகளை செய்வதற்கும் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும் அதனை புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கு அதிக நேரமாகும். செயல் மற்றும் புத்தியின் வேகம் குறைந்து போகும்.

நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம்

நிற்கும்போது நடக்கும்போது பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுவது பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்களுக்கு சகஜமான ஒன்று. நடக்கச் சொன்னால் முதல் 10 அடிகளை சிறுசிறு அடிகளாக கால் பாதத்தை தரையில் தேய்த்தபடி நடக்க ஆரம்பிப்பார்கள். சிறிது நேரத்திலேயே ஓடுவதைப் போன்று வேகமாக நடக்க ஆரம்பிப்பார்கள். சடாரென்று அவர்களால் திரும்ப முடியாது. உடம்பையும், கழுத்தையும் ஒருசேரத்தான் அவர்களால் திருப்ப முடியும். சேரில் உட்கார முயலும்போது சேரின் நுனி எங்கே இருக்கிறது, மத்திய பகுதி எங்கே உள்ளது, எவ்வாறு உட்கார வேண்டும் என்று புரியாமல் பொத்தென்று உட்கார்வார்கள். பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்களின் மூளையில் சமநிலைக்கான(Balance) பகுதிகள் செயலற்றுப் போவதால் இவ்வாறு நிகழ்கிறது.

சிறிய கையெழுத்து

பார்க்கின்ஸன் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எழுத்துக்கள் சிறியதாக இருக்கும். எழுத்துக்கள் தெளிவில்லாமல் ஓர் எழுத்தின் மீது இன்னொரு எழுத்து இருக்கும்.

நுகர்திறன் இழப்பு

பார்க்கின்ஸன் நோயாளிகளுக்கு செயல்திறன் பாதிப்படைவதற்கு முன்பே நுகர்திறனை இழக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தூக்கப் பிரச்னைகள்

பொதுவாக நாம் படுத்து 20 நிமிடத்திற்குள் தூக்கம் வரவேண்டும். அப்படி இல்லாமல் தூக்கம் வருவதற்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்வதற்கு தூக்கத் தாமதம்(Sleep latency defect) என்று பெயர். அப்படியே படுத்தவுடன் 20 நிமிடத்திற்குள் தூங்கி விட்டாலும் தூக்கத்தின் நடுநடுவே முழித்து கொள்வதும் தூக்கத்தின் சீரான தன்மையை பாதிக்கும். இதற்கு Sleep Maintenance defect என்று பெயர். இவ்விரு தூக்கப் பிரச்னைகளும் பார்க்கின்ஸன் நோயாளிகளிடம் இயல்பாக காணப்படும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கம் பாதிக்கப்படுவது, தூக்கத்தில் கனவுகளுக்கு ஏற்ப சத்தம் போடுவது, எழமுயற்சி செய்வது, தூக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டே இருப்பது கை, கால்கள் இறுக்கமாக இருப்பதால் எழ முடியாமல் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது, சரியான தூக்கம் இல்லாமையால் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் தூங்கி வழிவது ஆகிய அனைத்து தூக்கம் சார்ந்த பிரச்சினைகளும் பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

பேசும்போது மெதுவாக முனகுவது போன்று பேசுவது, மலச்சிக்கல் வருவது, ஞாபக சக்தி குறைந்து போய் தான் எங்கிருக்கிறோம், எங்கே செல்கிறோம், யாரிடம் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமல் இருப்பது, மன குழப்பம் ஏற்பட்டு உளறுவது, இல்லாத உருவங்கள் தன் கண்களுக்கு மட்டும் தெரிவது போன்று பேசுவது, வாயில் இருந்து எச்சில் வழிவது, நோயின் வீரியம் அதிகமாக அதிகமாக எந்த ஒரு வேலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவது, கடைசியில் படுத்த படுக்கையாகி போவது என்று பார்க்கின்ஸன் நோயின் அறிகுறிகளை வகைப்படுத்த முடியும்.

இந்த அறிகுறிகளை தாண்டி இந்நோயை கண்டறிய வேறு ஏதும் பரிசோதனைகள் உள்ளனவா? என்னென்ன சிகிச்சைகள் உள்ளன, தற்போதைய புதிய சிகிச்சை முறைகள் என்னவென்பதை அடுத்த இதழில் காண்போம்.

( நலம் பெறுவோம் )