தனி தீர்ப்பாயம் தேவை



செய்திகள் வாசிப்பது டாக்டர்

மருத்துவத் துறை சார்ந்த வழக்குகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பிரத்யேக தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு சட்ட விதிகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக பணியின்போது மருத்துவர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. இது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும். இவை ஒருபுறமிருக்க, மருத்துவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் உள்நோக்கத்துடன் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அத்துடன் மருத்துவ கவுன்சில், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் ஒரே மனுதாரரால் தனித்தனி வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.

ஒரே வழக்கை வெவ்வேறு நீதிமன்றங்களிலும், விசாரணை அமைப்புகளிலும் தொடுப்பதால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. சொல்லப்போனால், அதன் காரணமாக ஏற்படும் காலதாமதத்தால் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனுதாரராகத்தான் இருப்பார்.பொதுவாக மருத்துவத் துறை சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களுக்குப் போகும்போது துறை சார்ந்த கலைச் சொற்களும், நுட்பமான விஷயங்களையும் தெளிவாக எடுத்துரைத்து தீர்வு பெறுவது அவசியம்.

எனவே, நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவ தீர்ப்பாயத்தை அமைத்து, மருத்துவத் துறை சார்ந்த வழக்குகளை கையாள வேண்டும் என்று இதுபற்றி அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

- இதயா