காதலே சிகிச்சைதான்!



கவர் ஸ்டோரி

மனது செய்யும் மாயாஜாலங்களை இன்னும் அறிவியலாளர்களாலேயே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் கரை காண முடியாத உளவியல் பிரவாகத்தில் ஒரு துளியைப் பருகியிருப்பது போல விஞ்ஞானம் ஒரு முக்கிய உண்மையை கண்டறிந்திருக்கிறது.

அன்பு, மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதையும், இல்லாதவர்கள் ஏதேனும் ஒருவகையில் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் கண்டு வியந்திருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்களாயினும் அன்பு, ஆதரவு, நம்பிக்கை கிடைக்கும் மனிதர்கள் தங்கள் பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டும் வருகிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் இதுகுறித்துப் பேசினோம்…

‘‘மனதின் சக்தி மகத்தானது என்பதைவிட அன்பின் சக்தி அதிகம் என்பதை இந்த தருணத்தில் புரிந்துகொள்ளலாம். ஏனெனில், இன்று அன்புக்குத்தான் அதிக பஞ்சமாகிவிட்டது. தேவையான அன்பு கிடைக்கும் ஒருவர் ஆரோக்கியமாகவே இருப்பார். இதிலிருந்து அன்பே சிகிச்சை அல்லது ‘காதலே சிகிச்சை’ என்றும் சொல்லலாம். காதலிக்கும் தருணத்தில் மனமும், உடலும் எப்படியெல்லாம் உற்சாகமாக இருக்கிறது. மனதில் எப்படியெல்லாம் மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.

பார்ட்னரை ரசிப்பது, அவருக்காக நேர்த்தியான உடைகளை அணிவது, பாராட்டுவது, பரிசளிப்பது என்று காதலின் நாட்கள் மகத்தானவை என்பது எல்லோருக்குமே புரிந்ததுதான். இந்த காதல் நாட்கள் வாழ்நாள் முழுவதுக்கும் நீடிக்க வைக்கும் தந்திரம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையும் ஆரோக்கியமானதாகவே நீடிக்கும்.

இதில் குறிப்பிட வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன.காதல் என்பதன் நேரடி அர்த்தம் அன்பு என்பதுதான். நாம் உடனேயே அதை பாலியல் ரீதியிலான இனக்கவர்ச்சியுடன் மட்டுமே மேலோட்டமாகத் தொடர்புபடுத்திக் கொள்கிறோம். அதேபோல் ‘காதல்’ இளவயதினருக்கானது மட்டுமே என்ற தவறான எண்ணமும் நம்மிடம் உள்ளது.

செக்ஸ் தேவை கூட எல்லா வயதினருக்கும் உண்டு. முதுமை அடைந்துவிட்டால் எல்லாவற்றையும் மூட்டை கட்டி பரணில் போட்டு விட வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. சந்தர்ப்பம், சூழல், பார்ட்னரின் விருப்பத்துக்குட்பட்டு தாம்பத்ய இன்பத்தை எப்போதும் அனுபவிக்கலாம். அது இன்னும் தம்பதியரிடையே நெருக்கத்தை வளர்க்கும். பலநோய்களுக்கும் செக்ஸ் என்பது மருந்தாகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்துள்ளது.

ஆமாம்... அனைத்து வயதினருக்கும் தேவைப்படும் அருமருந்து ‘காதல். பெற்றோர் தங்கள் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மீது நிபந்தனையற்ற அன்பை வழங்குவதைப் போலவே இளைய தலைமுறையினரும் பெற்றோருக்கு அன்பை அதிகம் வழங்க வேண்டும். ஏனெனில், நோய்வாய்ப்படும் வயது என்பது பொதுவாக நாற்பதுகளுக்குப் பிறகுதான். இளவயதில் இருக்கும் உடல்திறனும், தன்னம்பிக்கையும் முதுமையில் காணாமல் போயிருக்கும்.

உலகம் முழுவதும் தனிமையால் முதியவர்கள் மன அழுத்தப் பிரச்னைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகப் பல புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சில பெரியவர்கள் முதியோர் இல்லங்களில் வாழும் கொடுமை. சில பெரியவர்கள் எல்லோரையும் பிரிந்து பிரம்மாண்ட பங்களாக்களிலும் கேட்பாரற்று வாழ வேண்டிய நிலைமை. இப்படி அன்பிற்காக ஏங்கி, ஏங்கியே முதியோர் இன்னும் நோய்வாய்ப்படுகிறார்கள். பிள்ளைகளும் தங்களால் காசு, பணத்தில் உதவி செய்ய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் பெரியவர்களுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலமாகவாவது சந்தோஷப்படுத்த
முயற்சிக்கலாம். அது இன்னும் ஆறுதலாகவும், மகத்தான மருந்தாகவும் மாறும்.

தற்போதுள்ள இயந்திர உலகில் எல்லோருமே அன்பிற்காக ஏங்கும் நிலையில் இருக்கிறோம். அனைவருமே உளவியல்ரீதியான பிரச்னைகளில் சிக்குண்டு இருக்கிறோம் என்பது புரிந்தால் இந்த கட்டுரையின் நோக்கம் இன்னும் தெளிவாகிவிடும். எப்படி மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பதெல்லாம் அடிப்படைத் தேவையோ, அன்பும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது என்பது சில ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

முதுமையில் இருப்பவர்களும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள் தேடும் இன்றைய அவசர உலகில் இளைய தலைமுறையினர் தங்களுக்கான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் நெருக்கடியில் இருக்கிறார்கள். எனவே, இளைய தலைமுறையினரைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பதும் முக்கியம். எல்லோருக்கும் அன்பு கிடைக்கட்டும்!

- இந்துமதி

கேலி, கிண்டல் உறவை பலப்படுத்தும்!

ஜெர்மனியில் உள்ள ஹாலே-விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் மார்ட்டின் லூதர் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு, திருமணம் அல்லது காதல் உறவை வலுவாக வைத்திருக்க ஒரு ஆச்சரியமான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது. ஒருவருக்கொருவர் கிண்டல், கேலி செய்தும் அல்லது கலாய்த்துக் கொள்ளும் தம்பதிகள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 154 ஜோடிகளில், ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்கள் உறவுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிக திருப்தி அடைந்துள்ளனர் என்றும் கண்டறியப்பட்டது.

கிண்டல் பண்ணுகிறேன் பேர்வழி என்று பார்ட்னரின் மனதைப் புண்படுத்திவிடாமல் இருப்பதும் முக்கியம் என்பது ஆய்வில்
சொல்லாத தகவல்.

அட்டை  மற்றும் படங்கள்: ஜி.சிவக்குமார்