முரட்டு சிங்கிள்னு சொல்றதெல்லாம் பழசு...



கவர் ஸ்டோரி

வேலன்டைன்ஸ் டே அன்று காதலர், காதலியோடு சிலர் சுற்றித்திரியும்போது, ‘நான் முரட்டு சிங்கிள்’ என்று கௌரவமாக ஸ்டேட்டஸில் போட்டுவிட்டு கெத்தாக சுற்றுகிறவர்களும் அதிகமாகிவிட்டார்கள். ‘சிங்கிள் சிங்கம்’ என்பதை இப்போது ‘Self Partnered’ என்றும் பெருமையுடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த செல்ஃப் பார்ட்னர்ட் விஷயம் இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகவும் மாறிவருகிறது. அது என்ன செல்ஃப் பார்ட்னர்ட், எப்படி பிரபலம் ஆனது, இதில் என்ன சுவாரஸ்யம் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்...

‘ஹாரிபாட்டர்’ புகழ் ஹீரோயின் எம்மா வாட்சன் தெரியுமா? இந்த எம்மா வாட்சன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தான் சிங்கிளாக இருக்கிறேன் என்பதை Being self-partnered என்று பறைசாற்றிக் கொண்டார். அட... இது நல்லாருக்கே என்று இதை மற்ற முரட்டு சிங்கிள்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். விளைவு.... இந்த வார்த்தை உலகம் முழுவதும் உள்ள ‘சிங்கிள்’களிடம் காட்டுத்தீயாக பற்றிக் கொண்டது.

பாலிவுட் நடிகை தபு, பாலிவுட் காமெடி நடிகை மல்லிகா டூவா மற்றும் பிரபல எழுத்தாளரும், வக்கீலுமான பிரியா அலைக்கா எலியாஸ் என பலரும் #Self-partnered என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் செய்து பரபரப்பாக்கிவிட்டார்கள்.

சரி... எம்மா வாட்சன் ஏன் அப்படி சொன்னார்?!

‘நான் தனிமையில் இருப்பதை Single என்று சொல்வதைவிட, Self-partnered என்று சொல்வதை விரும்புகிறேன்’ என்று தன்னைத்தவிர வேறு யாரும் கூட்டாளி இல்லாத ஒரு நபராக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லும்போது, முதலில் ஆச்சர்யம் ஏற்பட்டது. அவரது அந்த நிலையை பல பிரபலங்களும் ஆமோதித்து, தங்களையும் Self-partnered என்று பிரகடனப்படுத்திக் கொண்டவுடன்தான் அந்த வார்த்தையின் வீரியம் புரிந்தது.

Single-க்கும், Self-partnered-க்கும் அப்படி என்ன வித்தியாசம்?

இப்போது நிறைய பேர் Self-partnered என்ற இந்த வார்த்தையை தேவையற்ற விளம்பரம் என்றும், பழைய வார்த்தையான Single என்பதில் என்ன தவறு என்றும் நினைக்கலாம். இருப்பினும், ‘ஒற்றை’ என்ற பொருளைக் குறிக்கும் Single என்ற சொல் எதிர்மறையான அர்த்தத்தையும் அதனுடன் களங்கத்தையும் கொண்டுள்ளது.

உண்மையில், Single என்ற சொல் தனியான, அவநம்பிக்கையான, அழகற்ற மற்றும் சமூக விரோதமாக இருப்பதற்கு சமமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதுவே, Self-partnered என்ற சொல், ஒற்றுமைக்கான நேர்மறையான அணுகுமுறையாக இருக்கிறது. Self-partnered என்பது, தனிமையை விட மனநிறைவு உணர்வோடு ஒத்திருக்கிறது’ என்கிறார்கள் உளவியலாளர்கள்.

சரி எப்படி Self-partnered-ஆக இருப்பது?

Self-partnered என்பது ஏதோ இன்றைய தலைமுறையினரின் கருத்து என்று நினைக்க வேண்டாம். இதற்கு முன்னால், துணையின்றி தனிமை வாழ்வை ஏற்றுக்கொண்ட பலர் நாட்டிற்கும், குடும்பத்திற்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புதிய அடையாளச் சொல் மட்டுமே. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், Self-partnered ஆக இருப்பது என்பது உங்களுடன் இருப்பதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்பதே ஆகும்.

உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள கூடுதல் நபர் தேவையில்லை எனவே உங்களை நீங்களே இறுகப் பற்றிக் கொள்ள, கற்றுக் கொள்வதன் மூலம் இதைத் தொடங்கலாம். நீங்கள் எப்போதும் செய்ய விரும்பும் ஒரு செயலைச் செய்வது அல்லது உங்கள் தொழில் வளர்ச்சியில் உங்களுக்கு உதவ ஏதாவது கற்றுக்கொள்வது குறித்தும் அது இருக்கலாம். நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அடிப்படையில் உருவாக்கலாம், நீங்கள் விரும்பும் பயணங்களை செய்யலாம். மேலும், உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வலுவான பிணைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் செய்வதால் நீங்கள் யாரோ ஒருவருடன் காதல் செய்வதை விட்டுவிடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. தற்போதைக்கு, உங்களை நீங்களே நேசிக்கிறீர்கள், உங்கள் கையில் இருக்கும் நேரத்தை முழுவதுமாக பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை நீங்களே கண்டுபிடிக்கும் நேரம் இது என்பதால் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். மேலும், இவை உங்களுடைய சுயத்தை நோக்கி, உங்களை நெருங்கச் செய்யும். ‘உண்மையில், மற்ற எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன் சுய வளர்ச்சியானது உளவியல் வளர்ச்சியின் இறுதி நிலை’ என்கிறார் புகழ்பெற்ற உளவியலாளர் ஏ. மாஸ்லோ.

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு ஆண்/பெண் ‘சிங்கிளாக’ இருந்தால் தவறாகவும், சமூகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் பார்க்கிறார்கள். தங்கள் சொந்த வீட்டிலேயே பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். தொழில்முனைவோராக, நிதி உதவியைப் பெறுவது கூட அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.

இதில் பெண்கள் சிங்கிளாக இருக்கும்பட்சத்தில் நிலைமையைக் கையாள்வது இன்னும் சிக்கல். இந்தியாவில் ஏறக்குறைய 74.1 கோடி பெண்கள் சிங்கிளாக இருக்கிறார்கள். அவர்களில் விவாகரத்து செய்யப்பட்டவர்கள், கணவனைவிட்டு பிரிந்தவர்கள், விதவைகள் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள் என இருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.

எனவே, செல்ஃப் பார்ட்னர்ட் என்ற டிரெண்டுக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். இனிமேல் சிங்கிளாக இருக்கும் உங்களை, ‘நீ யாரையாவது டேட்டிங் செய்கிறாயா’ என்று யாராவது கேட்டால், ‘ஆமாம்... இந்த உலகின் மிகச்சிறந்த நபருடன் டேட்டிங் செய்கிறேன். அது யார் தெரியுமா? நானேதான், நானே என்னை டேட்டிங் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள்’.

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கிளாக இருப்பதில் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. அன்பில்லாதவர்கள் என்ற அர்த்தமும் கிடையாது. எதிர்பாலிடத்தில்தான் காதல் வரவேண்டுமா? நம் குடும்பத்தினர், நண்பர்கள், ஏன் செல்லப்பிராணிகளிடத்திலும் காதல்
கொள்ளலாம்.

குறிப்பாக ‘சுய காதல்’ ஒருவரின் வெற்றிக்கு மிக முக்கியமான மூலப்பொருள். தனிமையில் இருக்கும்போது, ​​‘காதல் நமக்கு நேரிடும்’ என்று நாம் காத்திருக்கவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நம்மைப்பற்றிய விளக்கம் தருவதையோ அல்லது நம் விருப்பங்களை மறைக்க வேண்டிய நிர்பந்தத்தையோ நாம் எதிர்க்க வேண்டும். ‘சிங்கிளாக’ இருப்பது என்பது நாம் சுயமாக எடுத்த முடிவு என்பதை உறுதியாக வெளிப்படுத்துவது சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்’ என்றும் இப்போது முழங்குகிறார்கள் பல ‘சிங்கிள்’
பிரபலங்கள்.

‘உயரத்தில இருக்கறவங்க தனியாத்தான் இருக்க வேண்டியிருக்கும்னு சொல்வாங்க. என்னைப் பொருத்தவரைக்கும் தனியா இருக்கறதாலதான் நான் உயரத்துலயே இருக்கேன்’ - என்று ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா சொல்கிற வசனம் இப்போது நினைவுக்கு வந்தால் நீங்களும் முரட்டு சிங்கிள்தான்.... ஸாரி... Self Partnered-தான்!

- உஷா நாராயணன்