கண்ணாடி அணிபவர்களின் கவனத்துக்கு...
கேமரா 576 மெகாபிக்ஸல்
‘என் மகனுக்கு அவங்க அப்பாவை மாதிரியே நீள மூக்கு’‘என் பேத்திக்கு தலைமுடியை பார்த்தீங்களா? எனக்கும் சின்ன வயசுல இப்படித்தான் கருகருன்னு நீளமா இருக்கும்’, ‘தாத்தா ரத்தம் அப்படியே பேரனுக்கு இருக்கு. அதான் விளையாட்டில கில்லாடியாக இருக்கான்’.- இப்படி எல்லாம் பெருமைப்படுபவரா நீங்கள்? ஆம்... என்றால் நீங்கள் கண்ணாடி அணிந்து இருந்தால் உங்கள் குழந்தைக்கோ பேரன் பேத்திக்கோ கண்ணாடி அணியும் அவசியம் இருக்கலாம். இதையும் நீங்கள் பெருமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளிப்பருவத்தில் கண் பிரச்னை கண்டறியப்பட்டு கண்ணாடி பரிந்துரைக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக இதை ஏற்றுக் கொள்வதில்லை. ‘நான் காலேஜ் படிக்கும்போதுதான் கண்ணாடி போட்டேன். இவனைப் பாருங்க டாக்டர், சரியா சாப்பிடுறது இல்லை.
காய்கறிகள் எதையுமே தொடுறதில்லை.. எப்பப்பாரு செல்போன், டிவிதான்.. அதான் கண்ணு கெட்டு போயிடுச்சு’ என்பார்கள் சிலர். ஒரு படி மேலே போய் ‘இனிமேல் காய் எல்லாம் கொடுத்து சரி பண்றேன். இப்ப கண்ணாடி வேண்டாமே டாக்டர்’ என்றும் கூறுவார்கள். கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறப்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை பிரச்னைகளை காய்கறி மூலமாகவோ கண் பயிற்சிகள் மூலமாகவோ சரி செய்ய முடியாது. ‘காய்கறி வேண்டாமா? என்ன இப்படி சொல்றீங்க டாக்டர்?’ என்று கேட்கிறீர்களா... காய்கறிகள், சத்துள்ள உணவுகள், திரைப்பயன்பாட்டை குறைப்பது கண்ணுக்கான பயிற்சிகள் இவை எல்லாமே நல்ல விஷயங்கள்தான். ஆனால், ‘நோய் முதல் நாடி’ என்று முன்னோர் கூறியிருக்கிறார்கள் அல்லவா... கண்ணாடி அணிய வேண்டியதன் பின்னிருக்கும் காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
பெரும்பாலும் கண்களின் அமைப்பு சற்று மாறுபட்டு இருப்பதாலேயே பலருக்கும் கண்ணாடி அணியும் அவசியம் ஏற்படுகிறது. வெகு சிலருக்கே பொதுவான உடல்நலக் குறைபாடு, அதிகபட்ச ஊட்டச்சத்தின்மை இவற்றால் பார்வை பாதிப்பு தோன்றுகிறது.
கண் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது கண் பந்தின் முன்பின் நீளம். நீளத்தைப் போலவே கருவிழி, விழித்திரை இவற்றின் அமைப்பு மற்றும் அவற்றின் வளைவில்(Curvature) ஏற்படும் சிற்சில மாற்றங்கள் இவற்றாலும் கண்ணாடி அணிய வேண்டியதிருக்கும். எப்படி நம் ஒவ்வொருவருக்கும் உயரம், விரல்களின் நீளம், காதின் அளவு, மூக்கின் அளவு இவை எல்லாம் ஒரே போல் இருப்பதில்லையோ அதேபோல கண்களின் அமைப்பும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது.
இத்தகைய சிறிய அளவிலான மாற்றங்கள் இயற்கையின் அமைப்பில் மிகவும் இயல்பானவை. இவை வழக்கமான நோய்களோ தொற்றுநோய்களோ அல்ல. வெறும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள அச்சுநீள மாறுபாட்டினால் 3.00 டயாப்டர் அளவுக்கு கண்ணாடி தேவைப்படுகிறது. இதுவே வளைவில் ஏற்படும் ஒரு மில்லிமீட்டர் மாறுபாட்டில் 6.00 டயாப்டர் அளவிற்கு கண்ணாடி தேவைப்படுகிறது.
கிட்டப்பார்வை என்றழைக்கப்படும் மையோபியா(Myopia) பிரச்னையில் கண் பந்தின் நீளம் சற்று அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய குழிவு லென்சை(Concave lens) பயன்படுத்துவார்கள். தூரப்பார்வை பிரச்சனை(Hypermetropia) உடைய நோயாளிகளுக்கு குவிவு லென்ஸ் (convex lens) தேவைப்படும். சிதறல் பார்வைக்கு(Astigmatism) சிலிண்டர் வடிவிலான லென்ஸ்கள்(Cylindrical lens) பொருத்தப்படுகின்றன. 40 வயது வரை கண்ணாடி அணியாத நபர்களுக்கும் அதன் பின் படிப்பதில் சிரமம் ஏற்படும். பிரஸ்பயோபியா என்ற இந்த நிலையையும் குவிவு லென்ஸ் மூலமாகச் சரி செய்யலாம்.
சிலருக்கு அச்சு நீளம் மற்றும் வளைவு இரண்டிலும் வித்தியாசம் இருப்பதால் இரண்டு வகையான லென்ஸ்களும் சேர்ந்து கொடுக்க வேண்டியதிருக்கும். ‘சரி, கண்ணாடி போட்டு விட்டேன், இப்போது பார்வை நன்றாகத் தெரிகிறது, தலைவலியும் வருவதில்லை. ஆனால் வருடாவருடம் செக்கப்புக்கு வரச் சொல்கிறீர்களே ஏன்?’ எனக்கு அந்தக் கண்ணாடியே சரியாகத்தான் இருக்கிறது.
அந்தச் சீட்டை வைத்து கடையிலோ ஆன்லைனிலோ கண்ணாடி வாங்கிக் கொண்டால் போதாதா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். குழந்தை வளர வளர கை கால்கள், விரல்கள் இவற்றின் நீளம் மாறுபடுகிறதல்லவா? அதைப் போலவே கண்களின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். இதனால் கண்ணாடியின் லென்சில் நாம் பொருத்தி இருக்கும் அளவும் மாறுபடும். இதைக் கண்டறிய வருடாந்திர பரிசோதனை அவசியம்.
கிட்டப்பார்வை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு கண்ணின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் கண்களின் ஓரங்களில் அதாவது விழித்திரை பகுதியில் சிறிய ஓட்டையோ(Hole) விரிசலோ(Degeneration) ஏற்படலாம். இந்த ஓட்டைகளின் வழியாகக் கண்களின் உட்புறம் இருக்கும் நீர் புகுந்து கொண்டால் விழித்திரை விலகல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றை சீரான பரிசோதனையின் மூலம் விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். விழித்திரை விலகல் போன்ற பெரிய தொந்தரவுகள் வரும் முன்னரே இந்த ஓட்டைகளை லேசர் மூலமாகச் சரி செய்துவிடலாம்.
சிதறல் பார்வையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்குக் கண்களின் கருவிழியில் குறைபாடுகள் உள்ளதா என்றும் அவ்வப்போது கவனிக்க வேண்டும். இத்தகைய நபர்களுக்கு கருவிழியில் கெரட்டோகோனஸ்(Keratoconus) போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.கண் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளோருக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் அவ்வப்போது செய்யும் பரிசோதனையின்போது கண்டுபிடித்து எளிதிலேயே குணமாக்கி விட முடியும். வழக்கமான கண் பரிசோதனையின் போது சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள், சில தொற்று நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும்.
கண்ணாடியை முறையாக பராமரிக்க...
* கண்ணாடியைத் துடைப்பதற்கு கண்ணாடியுடன் கொடுக்கப் பட்டிருக்கும் துணியை பயன்படுத்துவது நல்லது. உடையையோ கையில் கிடைக்கும் துணியையோ பயன்படுத்தினால் கண்ணாடியில் கீறல்(ஸ்க்ராட்ச்) ஏற்படும். * மூக்கின் மேல் கண்ணாடி பொருந்தும் பகுதியான nose pad ஐ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் தோலில் தடம் ஏற்படுவது குறையும். * கண்ணாடியைக் கண்களில் அணிந்துகொண்டு தூங்கக் கூடாது. ஃப்ரேமில் சிறிது வளைவு ஏற்பட்டாலும் பார்வையில் பிரச்னை ஏற்படும். * குழந்தைகளுக்கு கண்ணாடியை பாதுகாப்பாகப் பெட்டியில் வைப்பது, இரண்டு கைகளாலும் கழற்றி மாட்டுவது போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். * சிலருக்கு உலோகங்களால் ஆன கண்ணாடிகளால் தோலில் ஒவ்வாமை ஏற்படலாம். அதற்கேற்றார்போல் ஃபிரேம்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
(தரிசனம் தொடரும்!)
|