மருத்துவமனைகளில் மறைக்கப்படும் உண்மைகள்
க்ரைம் டைரி
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கீர்த்திகா என்பவருக்கும், சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகா, கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊரான ஆர்.எஸ்.
மடைக்கு வந்துள்ளார். பகலில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டுவிட்டு வந்தபின், கீர்த்திகாவுக்கு மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு கீர்த்திகாவிற்கு குழந்தை இறந்து பிறந்ததாகவும், சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் குழந்தை மற்றும் கீர்த்திகாவின் உடல்களை டாக்டர்கள் வற்புறுத்தி விடியும் முன்னரே உறவினர்களிடம் கொடுத்துவிட்டனர். மறுநாள் கீர்த்திகாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
பிரசவத்திற்கு கீர்த்திகாவை அனுமதிக்க வந்தபோது டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், நர்சுகள் மட்டுமே இருந்ததாகவும், தாமதமாக டாக்டர்கள் வந்ததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.
அவர்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியலிலும், போராட்டத்திலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் முடிந்தபின்னர் 5-ந் தேதிக்குள் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கீர்த்திகா குடும்பத்தினருடன் நேரடி விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கீர்த்திகா குடும்பத்தினர் கலெக்டர் வீரராகவராவை நேரில் சந்தித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளனர். கலெக்டரும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட கீர்த்திகாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், அவருக்கு Anaphylactic shock ஏற்பட்டதால் இறந்ததாக எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
Anaphylactic shock என்றால் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்வோம். நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்தால் உண்டாகும் அதிதீவிர ஒவ்வாமையால் 15 நிமிடங்களுக்குள் மரணம் ஏற்படுவதையே குறிப்பிடுகிறோம். அதாவது ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது கொடுக்கப்படும் ஏதாவதொரு மருந்து ஒத்துக்கொள்ளாமல் போவதால் Anaphylactic shock வரும்.
குறிப்பிட்ட இந்த நோயாளிக்கு பிரசவ வலியை தூண்டுவதற்காக கொடுக்கப்பட்ட ஆக்சிடாசின்(Oxytocin) மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருப்பதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தையும் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். மரணம் நிகழ்ந்த உடனேயே தெரிவிக்காமல், சிறிது நேரம் கழித்துதான் உறவினர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
நோயாளிகளின் உறவினர்கள் கீர்த்திகாவிற்கு பிரசவம் பார்த்தபோது மருத்துவர்கள் யாரும் இல்லை. செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக சொல்கிறார்கள். ஆனால், மருத்துவமனை தரப்பில் மருத்துவர்கள் அப்போது பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் எது உண்மை என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
உண்மையில் Anaphylactic shock -ஆல்தான் நோயாளி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? Anaphylactic shock எப்படி ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த Case Sheet-ஐ மருத்துவமனை காண்பிக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை கையால் எழுதப்பட்ட கேஸ் ஷீட் முறைதான் பின்பற்றுகிறார்கள். வெளிநாடுகளைப்போல E- Case Sheet (Electronic Case Sheet) முறை இங்கு பின்பற்றப்படுவதில்லை என்பதால் அதிலும் நம்பகத்தன்மை கிடையாது. கேஸ் ஷீட்டையே மாற்றி எழுத முடியும்.
Anaphylactic shock அறிகுறிகள் என்ன?
மருந்தை ஊசி வழியாக செலுத்தியவுடன் மூச்சுத்திணறல் வந்து, ரத்த அழுத்தம் உடனடியாக குறைந்து விடும்; பல்ஸ் ரேட்டும் குறைந்துவிடும். உடனடியாக நினைவு போய், சிலருக்கு மரணம் கூட ஏற்படலாம். மரணத்திற்கு முக்கிய காரணம் மூச்சுத்திணறல். அதைவிட ரத்தக்குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் நின்றுவிடும் என்பதால் உடனே மரணம் நிகழும். IGE - என்னும் ஆன்டிபாடிஸ்தான் Anaphylactic shock’-ஐ ஏற்படுத்துகின்றன.
Anaphylactic shock ஏற்பட்டவுடன் அட்ரினலைன் (Adrenaline) .55CC அளவில் நரம்பு வழியாகவோ அல்லது டிரிப்ஸ் வரியாகவோ கொடுக்க வேண்டும். பொதுவாக Avil போன்ற ஒவ்வாமையை முறிக்கும் மருந்தை கொடுக்கிறார்கள். Avil உயிரை காப்பாற்றக்கூடிய எந்த ஒரு வினையும் புரியாது. இதற்கு அட்ரினலைன் மட்டுமே தீர்வு. குறிப்பிட்ட இந்த நோயாளிக்கு சின்தோசினான்(Synthocinon) என்னும் மருந்து கொடுக்கப்பட்டு Anaphylactic Shock ஏற்பட்டிருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்து Anaphylactic shock-தான் வந்ததா? என்று எப்படி கண்டறிவது? இதற்கு, Aorta என்னும் பெரும் ரத்தநாளத்தில் உள்ள ரத்தத்தை எடுத்துப் பார்க்கும்போது அதில் இருக்கக்கூடிய Mast cell tryptase (MCT) என்ற என்சைம் அளவு 1 லிட்டருக்கு 110 மைக்ரோகிராமிற்கு மேல் இருந்தால், Anaphylactic Shock அந்த நோயாளிக்கு வந்திருக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
இந்த கேஸைப் பொறுத்தவரை இதுவும் உறுதி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. நோயாளியின் உறவினர்கள் கலெக்டருக்கு மனு கொடுத்ததால், கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், தெளிவான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை.
எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் மயக்க மருந்து கொடுப்பதற்குமுன், அந்த நோயாளிக்கு அந்த மருந்து ஒத்துக் கொள்கிறதா என்று ஒரு மாதிரி ஊசி போட்டு பார்த்த பின்பே கொடுக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் இதை பின்பற்றுவதில்லை. இந்த பரிசோதனையையும் இந்த நோயாளிக்கு செய்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. Anaphylactic shock- இறப்பிற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்ததா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும். மருந்துகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், மருந்து கெட்டுப்போகாமல் இருக்க சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். அதையும் சரியாக பின்பற்றினார்களா என்பதும் கேள்விக்குறியே.
பொதுவாக மருத்துவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதே மருந்தை மற்ற நோயாளிகளுக்கும் போட்டோமே, அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று சொல்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும் மருந்து மற்றவருக்கு ஒத்துக்கொள்ளும் என்று கிடையாதே. இது மருத்துவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக சொல்லும் பொய்யான சமாளிப்புதான்.
குழந்தையை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தார்களா என்பதும் தெளிவாக சொல்லவில்லை. தாய் இறந்த உடனேயே தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்க முயற்சித்திருந்தால் குழந்தையை காப்பாற்ற முடிந்திருக்கும்.
எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கே இந்த விஷயத்தில் எந்த தகவலையும் புரிந்துகொள்ள முடியவில்லை எனும்போது, படிப்பறிவில்லாத சாதாரண பாமர மக்களுக்கு இதையெல்லாம் எங்கிருந்து விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்?
அடுத்து Anaphylactic shock மரணங்களுக்கு போஸ்மார்ட்டம் செய்யும்போது, அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், அதிலும் முக்கியமான பகுதியை எடிட் செய்து மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது. அதில் எடிட் செய்வதும் தெரிய வராது. சிசிடிவி கேமிராவில் பதிவு செய்தால் மட்டுமே டைம் லைன் இருக்கும். எடிட் செய்வது கடினம். நேரடியாக பார்க்க முடியும் என்பதும் என் கருத்து. இதையும் வலியுறுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், இதுபோல் Anaphylactic shock-ஆல் ஏற்படும் இறப்புகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் நீதிபதிக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அதை எப்படி படிப்பறிவில்லாத மக்கள் புரிந்துகொள்ள முடியும்? எந்த ஒரு விஷயமும் வெளி உலகிற்கும் தெரிய வருவதில்லை. மருத்துவமனைகள் மறைக்கும் இந்த முக்கிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- உஷா நாராயணன்
|