தமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்



அதிர்ச்சி

தமிழக மக்களிடம் Bipolar disorder, Schizophrenia ஆகிய பாதிப்புகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக The Lancet Psychiatry இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனச்சோர்வு காரணமாக 1 லட்சம் மக்களில் 325 பேரின் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீட்டில் கோவா மற்றும் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் வைக்கப்பட்டுள்ளது.

மனச்சோர்வுக் கோளாறுகளின் (Depressive disorders) தாக்கம் இந்தியாவில் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்த நோயால் ஏற்படும் இயலாமை மக்களை சோகமாக்குகிறது. மேலும் இதனால் களைப்பாக இருப்பது, எந்தவொரு செயலிலும் அக்கறை காட்டாதது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (Sleep apnea) மற்றும் பசியின்மை போன்ற பிரச்னைகள் உண்டாகிறது.

இந்திய மாநிலங்களில் 1990 முதல் மனநல கோளாறுகளின் போக்குகள் மற்றும் தற்போது வரை அதனால் ஏற்பட்டுள்ள நோய் சுமை குறித்த விரிவான மதிப்பீடுகள் The Lancet Psychiatry இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மக்களில் 1 லட்சம் பேரில் குறைந்தது 836 பேர் மனச்சோர்வுக் கோளாறுகளால் ஒருவித குறைபாட்டை சந்தித்துள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதும் இந்த இதழில் விளக்கப்பட்டுள்ளது.

1990 மற்றும் 2017-க்கு இடையில் மனநல கோளாறுகளின் நோய் சுமை இரட்டிப்பாகியுள்ளது. 2016-ம் ஆண்டில் 4.3 சதவீத இயலாமை(Disability) மற்றும் இறப்புகளுக்கு, தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளும் குணமான சுய தீங்கு(Self-harm) என்பது காரணமாக இருக்கிறது. இதுவே 1996-ல் 3.6 சதவீதமாக இருந்தது. 2017-ல் ஏழு இந்தியர்களில் ஒருவர் மனச்சோர்வு, பதற்றம், Schizophrenia, Bipolar disorders, Idiopathic developmental intellectual disability, நடத்தை கோளாறுகள், மாறுபட்ட தீவிரமான ஆட்டிசம் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகம் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளை பெற்றுள்ளது. மேலும் நாட்டில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் மனநல நோய்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.தேசிய சுகாதாரப்பணி திட்டத்தின் ஒருபகுதியாக அரசு ஒரு மனநலக் கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மனநல சுகாதார நிறுவனங்களை அணுகுதல், நோயறிதல் மற்றும் இது குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் 3000 மனநல மருத்துவர்கள் உள்ளனர். இதில் 200 பேர் அரசுப் பணியில் உள்ளனர். சென்னை மற்றும் தேனியில் அரசு நடத்தும் மனநல மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் இதற்காக 10 படுக்கைகள் உள்ளன. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுள் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அவசரகால மறுவாழ்வு மையத்தை அணுக வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநோயாளிகளை முதன்மை பராமரிப்புக்காக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்கிற தன்னார்வலர்கள் மக்களின் வீட்டு வாசலுக்கே அனுப்பப்படுகிறார்கள். எனவே மனநல பாதிப்புடையவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம்.

மனநலனைத் தீர்மானிக்கும் இன்னும் சில காரணிகள்

*அதிக அளவு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகவோ அல்லது தற்கொலை செய்துகொள்ளவோ வாய்ப்புள்ளது என்று 16 நாடுகளின் தரவுகளை மதிப்பாய்வு செய்த ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு சுற்றுச்சூழல் சுகாதாரம் சார்ந்து, காற்று மாசுபாடு மற்றும் பல விதமான மனநல பிரச்னைகளை இணைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள, ஆதாரங்களின் அடிப்படையிலான முதல் முறையான ஆய்வாக உள்ளது. உலகளவில் இந்த காற்று மாசுபாடுகளை, ஒரு கன மீட்டருக்கு 44 லிருந்து 25 மைக்ரோ கிராம் அளவுக்கு குறைப்பதன் மூலம் உலகளவிலான மனச்சோர்வு அபாயத்தை 15 சதவீதம் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள University College London (UCL) என்கிற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்.

*இந்தியர்கள் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1800 மணி நேரங்களுக்கு மேல் ஸ்மார்ட்போனில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்று சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மற்றும் ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தொலைபேசியை பரிசோதித்து பார்க்காமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் உரையாட முடியவில்லை என்று மூன்று பேரில் ஒருவர் உணர்ந்துள்ளனர். 5 பேரில் 3 பேர் மொபைல்போனிடம் இருந்து தனித்து வாழ்வது முக்கியம் என்றும், அது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் என்றும் கூறியுள்ளனர்.

41 சதவிகிதம் பேர் பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன்னர் உயர்நிலைப் பள்ளியில் இருந்தே தொலைபேசிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் போதை என்பது, 30 சதவிகிதத்துக்கும் குறைவான மக்கள் தங்கள் குடும்பத்தையும், அன்பானவர்களையும் ஒரு மாதத்திற்கு பலமுறை சந்திப்பதைப் போன்றது என்றும் இந்த ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலக் கோளாறுகள் அதிகரிக்க இத்தகைய அதீத செல்போன்  பயன்பாடும் காரணமாகிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

* மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளால் ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரத்திற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 71 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தலைமையிலான ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

* ஏழு இந்தியர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளின் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அதில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற பாதிப்புகள் பொதுவானவையாக உள்ளன என்று 2017-ல் Lancet Psychiatry என்கிற மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

* மனச்சோர்வு பிரச்னை இல்லாத பெற்றோரின் இளம் குழந்தைகளைவிட, மனச்சோர்வு பிரச்னை உள்ள பெற்றோரின் இளம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் உருவாகும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று American Academy of Child & Adolescent Psychiatry ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: க.கதிரவன்