மலேரியாவை ஒழிக்க முடியும்!மகிழ்ச்சி

மலேரியாவை முற்றிலும் ஒழிப்பது என்பது நீண்டகாலமாகவே கைக்கெட்டாத கனவாக இருந்து வந்தது. ஆனால், மருத்துவம், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், அந்த நோக்கத்தை அடைவது சாத்தியம் என்பது தெரிய வந்துள்ளது.

2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் மலேரியா நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரிட்டனிலிருந்து வெளியாகும் The Lancet அறிவியல் இதழில் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்படப்பட்டுள்ளது.

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்ததைவிட தற்போது 36 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் 60 சதவீதம் குறைந்து விட்டன. இந்தப்போக்கு நீடித்தால் மலேரியாவை முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்று அந்தக்கட்டுரையில் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மலேரியா ஆய்வாளர்கள் உயிரி-மருத்துவ ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சுகாதார கொள்கை நிபுணர்கள் என சுமார் 40 வல்லுநர்கள் அடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிப்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவாலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மலேரியாவை ஒழிக்க தொழில்நுட்ப ரீதியிலான வழிமுறைகளில் இந்த நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புறங்களில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமுள்ளது. மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்துக்கான வாய்ப்புகள் நகர்ப்புறங்களில் அதிகமுள்ளதே இதற்குக் காரணம். நகர்ப்புறங்களில் மலேரியாவை ஒழிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் சிறப்பு கவனமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- அ.வின்சென்ட்