யூகலிப்டஸ் சந்தேகங்கள்



விளக்கம்

மருத்துவ குணமிக்க ஒரு தாவரம் என்ற ஓர் எண்ணம் யூகலிப்டஸ் பற்றி எப்போதும் உண்டு. ஜலதோஷம், காய்ச்சல் ஏற்பட்டால் வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளைப் போட்டு கொதிக்க வைப்பதும், அந்த தண்ணீரில் குளிப்பதும் இன்றும் பரவலாக பின்பற்றப்படும் ஒரு வைத்திய முறை. அதேபோல், யூகலிப்டஸ் தைலம், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவையும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இந்த மரத்தைத் தைல மரம் என்ற பெயராலேயே குறிப்பிடுகிறார்கள்.யூகலிப்டஸுக்கு அப்படி என்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவரான தீபாவிடம் கேட்டோம்...

‘‘பல்வேறு மருத்துவ பலன்கள் ெகாண்ட யூகலிப்டஸ்(Eucalyptus), இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய அருங்கொடை என்று சொல்லலாம். நமக்குத் தெரிந்த யூகலிப்டஸ் மரம் உள்பட யூகலிப்டஸில் மொத்தம் 700 வகை இனங்கள் உள்ளன. மனிதன் எதிர்கொள்ளும் உடல்ரீதியான அனைத்து உடல்பிரச்னைகளிலிருந்தும் வலிநிவாரணியாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது மருத்துவரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே. சளி, இருமல், வீஸிங் (இலுப்பு) தசை மற்றும் எலும்புகளில் ஏற்பட்ட வலிகளுக்கு ஒரு நல்ல நிவாரணம் தருகிறது. யூகலிப்டஸ் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஆன்டிசெப்டிக் எண்ெணய்(Anti septic) வாசனை திரவியம், அழகு சாதனம், பல் உறுதிப் பொருட்கள் மற்றும் தைலங்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.

இந்த இலையிலிருந்து ஆவி மூலமாக எண்ெணய் எடுக்கப்படுகிறது. இதில் 1,8 Cineole (சினியோலி) எனப்படும் யூகலிப்டால் உள்ளது. இந்த இலையில் ஃப்ளேவனாய்ட்ஸ் (Flavonoids) மற்றும் டானின்ஸ்(Tannins) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் நிறைந்துள்ளது.

இந்த இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதால் ஜலதோஷம், இருமல், சைனஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வும் காணலாம். இந்த இலையைத் தண்ணீரில் ெகாதிக்க வைத்து ஆறியவுடன் அந்தத் தண்ணீரை வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் பலன்களும் நிறைய உண்டு. தொண்ைடப் புண், தொண்டை வறட்சி, தொண்டையில் சதை வளர்வதும் இதனால் தடுக்கப்படுகிறது.

யூகலிப்டஸ் எண்ணெய்வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்களில் யூகலிப்டஸ் எண்ணெய் முக்கியமானது. யூகலிப்டஸில் Anti bacterial மற்றும் Anti microbial தன்மை இருப்பதால் பற்குழி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. ஈறுகளிலிருந்து ரத்தக்கசிவையும் தடுக்கிறது.

யூகலிப்டஸ் சளி நீக்க மருந்தாக இருப்பது நுரையீரலுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். நுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற பகுதியில் இருந்து சளி மற்றும் இன்னும் பிற கழிவுகளை அகற்றுவதற்கு பயன்படும் ஒரு மருந்தாகவும் குறிப்பாக சளி நீக்கும் மருத்துவராகவும் இருக்கிறது. தைல எண்ணெய் நுரையீரலில் உள்ள சளியை மெலிதாக்கி வெளியில் தள்ளுகிறது.

மேலும், சுவாசப் பாதையில் சளியால் பாதிக்கப்பட்ட இடத்தை சீராக்குகிறது. தைல இலைகளில், சினால் (Cineole) என்ற மூலப்பொருள் உடலில் இருக்கும் சளியை நீக்க மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை அழிக்க தைல எண்ணெய் நல்ல நிவாரணத்தை தருகிறது.யூகலிப்டஸ் இலையை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அந்த தண்ணீரை வீடு முழுக்கத் தெளித்து வந்தால் வீட்டினுள் எந்த கிருமிகளும், பூச்சிகளும் நுழையாமல்(Insect repellent) விரட்டிவிடும் நல்ல பலனையும் கொடுக்கும்.

யூகலிப்டஸ் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாக பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. இதில் Methyl salicylate உள்ளதால் தசை பிடிப்பு மூட்டு வாதம், கழுத்து மற்றும் இடுப்பு வலி, சுளுக்கு போன்ற வலிகளுக்குச் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

யூகலிப்டஸ் எண்ணெய் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள் மட்டுமல்லாமல் சரும நோய்களுக்கும் நல்ல தீர்வாகும். இதில், கிருமிநாசினி தன்மை உள்ளதாலும் இந்த இலையை சருமத்தில் தேய்ப்பதாலும் மற்றும் எண்ணெய் தடவுவதாலும் சருமம் ெபாலிவடைய உறுதுணை செய்கிறது.

யூகலிப்டஸ் எண்ெணய் மற்றும் இலையில் இயற்கையான மனத்தளர்வு மற்றும் அமைதி நிலையை ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருள் இருப்பதாலும், நல்ல ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிப்பதாலும் மன அமைதியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

மூக்கடைப்பு(Nasal congestion)மூக்கில் ஏற்பட்ட அடைப்பைப் போக்க யூகலிப்டஸ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. மூக்கிலுள்ள ரத்தக் குழாய்களைக் குறுக்கி வீக்கம் மற்றும் அழற்சியை குறைப்பதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்க இந்த மருந்து சுகம் தருகிறது. இதனால், காற்றோட்டம் எளிதாக இருப்பதால், சளி வெளியேற உதவுகிறது.

யூகலிப்டஸ் தேநீரை தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை அருந்துவதால் நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுத்து போர் வீரனைப்போல் நம் உடம்பை காத்து செயல்படுகிறது.

யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது?

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது. யூகலிப்டஸ் எண்ெணயை சருமத்தில் தடவுவதற்கு முன்பு சிறிதளவு கைகளில் தடவிப்பார்த்து சோதனை செய்வது நல்லது. அப்படித் தடவும்போது சரும அரிப்பு வீக்கம் மற்றும் சிவந்து காணப்பட்டால் இதை பயன்படுத்தக்கூடாது.

மனச்சோர்வு

சில நரம்பியல் நிலைமைகள் (Nervous disorder) மற்றும் சீர்குலைவுகளால் பாதிக்கப்படுபவர்களின் மூளை உகந்த முறையில் வேலை செய்வதில்லை. மூளை செயலாற்றலை ஊக்குவிக்கும். ஒரு விசேஷ கருவியாக யூகலிப்டஸ் எண்ணெய் செயல்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

காய்ச்சல் எண்ணெய்

காய்ச்சலைப் போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய் காய்ச்சல் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு அற்புதமான குணங்கள் கொண்ட யூகலிப்டஸ் பாரம்பரியமாக பாதுகாத்து, பயன்படுத்தி வந்தால் நோய் நொடி இல்லாமல் வாழ முடியும்.

கடைசியாக ஒரு எச்சரிக்கை...

யூகலிப்டஸிக் டானின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் நம் உடலில் ஏற்படக்கூடிய காயங்கள் விரைவில் ஆறக்கூடிய ன்டிமைக்ரோபியல்(Anti-microbial) மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி(Anti inflammatory) தன்மை உள்ளது. யூகலிப்டஸ் எண்ணெய்க்கு மருத்துவ குணம் கொண்ட நல்ல தன்மைகள் இதற்கு இருந்தாலும் இதை ெவளிப்புறத்திற்கு மட்டும் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

யூகலிப்டஸ் வெந்நீர் குளியல்

நாட்டு வைத்தியம் போல யூகலிப்டஸ் இலையை வெந்நீரில் கொதிக்க வைத்துப் பயன்படுத்தும் குளிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதனால் தவறு ஒன்றும் இல்லை. சருமம் தொடர்பான பல நன்மைகளை யூகலிப்டஸ் குளியல் தரும்.  வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

 உடலின் காயங்கள், சரும நோய்கள், ெதாற்று, அழற்சி, படுக்கையிலேயே இருப்பதால் ஏற்படும் புண்(Bed sores), கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஏற்படும் புண்(Cold sores) போன்றவை விரைவில் ஆறுவதற்கு ஏற்ற எதிர்ப்பு சக்தியை உடல் பெறும்.

மேலும் நெஞ்சில் சளி கட்டி இருப்பது, மார்பு சளி, சுவாசத்தில் வரக்கூடிய பிரச்னைகள் போன்றவற்றுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் சளி ஏற்படும்போது இது போன்று யூகலிப்டஸ் கலந்த வெந்நீரில் குளிக்க வைப்பதால் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள். சளித்தொல்லையும் கட்டுக்குள் வரும்.

- அ.வின்சென்ட்