இதம்... சுவை... நலம்...



உணவே மருந்து
 
குளிர்காலங்களில் சளி, இருமல் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் வாய்க்கு இதமாக சில சூப் வகைகளை சாப்பிடுவது நல்ல அனுபவமாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் இருக்கும். சூப் வகைகள் குறைவான கார்போஹைட்ரேட் கொண்டவையாகவும் மற்றும் அதிக ஊட்டச்சத்து மிகுந்தவையாகவும் இருப்பதால் ஆரோக்கியம் தருவதோடு உடல் எடையையும் குறைக்கும்.

எனவே, குளிர் காலங்களில் வீட்டில் இருக்கும் நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்டு சத்தான மற்றும் சுவையான சைவ சூப்கள் செய்து பருகி சிறந்த பயன் பெறுங்கள். சளி இருமல் இவற்றிலிருந்து நிரந்தர குணம் பெறுங்கள்.

பருப்பு சூப்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம் (1/2 கப்)
நடுத்தரமான அளவு கேரட் - இரண்டு
தக்காளி -  ஒன்று
தண்ணீர் - 150 மிலி  (1 1/2 கப்)
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு   

செய்முறை

துவரம் பருப்பு 100 கிராம், கேரட் - இரண்டு, தக்காளி ஒன்று, மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி இவற்றுடன் தண்ணீர் - 150 மில்லி ஊற்றி, நன்கு வேக வைத்து மசிக்கவும். இதனை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி இதில் மிளகுப் பொடி-1 தேக்கரண்டி, உப்புத் தேவையான அளவு போட்டு கலந்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

துளசி சூப்

தேவையான பொருட்கள்

உளுந்து வேகவைத்த தண்ணீர்- ஒரு கப் (100 மிலி)
சீரகப் பொடி- 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
வெள்ளை மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு சூடானவுடன் சீரகப் பொடி 1/2 தேக்கரண்டி சேர்த்து, பின் தண்ணீர் ஒரு கப் மற்றும் உப்பு தேவையான அளவுச் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, அதில் வெள்ளை மிளகுப் பொடி 1/2 தேக்கரண்டி, ஒரு கைப்பிடி துளசி இலை சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்

வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப் (100 மிலி)
சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மஞ்சள்ப் பொடி - 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை - 5 அல்லது 6 இலைகள்
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
புளி கரைசல் - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
சிவப்பு மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்) ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், தூதுவளை இலை ஒரு கைப்பிடி, புளி கரைசல் ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), இஞ்சி ஒரு துண்டு, தக்காளி பழம் ஒன்று, சிவப்பு மிளகாய் ஒன்று மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

கிராம்பு ஏலக்காய் சூப்

தேவையான பொருட்கள்

ஏலக்காய் - 3
கிராம்பு - 4
லவங்கப் பட்டை- 2
பிரிஞ்ஜி இலை - ஒன்று
மிளகு - 8
தண்ணீர் 2 கப் (200 மிலி)
இஞ்சி- ஒரு துண்டு
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
தேன் - 2 தேக்கரண்டி (டீஸ்பூன்)

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் 2 கப் (200 மில்லி) விட்டு சூடானவுடன் ஏலக்காய் - 3, கிராம்பு - 4, லவங்கப்பட்டை - 2, பிரிஞ்ஜி இலை ஒன்று, மிளகு 8, இஞ்சி ஒரு துண்டு இவற்றை பொடி செய்து தண்ணீரில் போட்டு இவற்றுடன் ஒரு கை துளசி  இலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த நீரை இறக்கி அதில் தேன் - 2 தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பை பரிமாறவும்.

அதிமதுரம் சுக்கு சூப்

தேவையான பொருட்கள்  

அதிமதுரம் பொடி - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
சுக்குப் பொடி - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
பனை வெல்லம் பொடி - 1 ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
எலுமிச்சைப் பழம்  - ஓன்று
தண்ணீர் 2 கப் (200 மிலி)

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் இரண்டு கப் (200 மில்லி) தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), சுக்குப் பொடி ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), பனை வெல்லம் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கும்போது அதில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து இறக்கவும். சூடான சூப்பை பரிமாறவும். இந்த சூப் தூக்கமின்மையை போக்கும் சிறந்த மருந்து ஆகும்.

- சக்தி