Funny Bone



எலும்பே நலம்தானா?!

இத்தனை நாட்களாக எலும்புகளின் ஆரோக்கியம் குறித்தும், அவற்றை பாதிக்கிற பிரச்னைகள் குறித்தும் நிறைய தகவல்களைப் பார்த்தோம். உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் எந்தளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள் என தெரிந்துகொள்ள இந்த அத்தியாயம் உதவும்.

வளர்ந்த ஒருவருக்கு உணவின் மூலம் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிற கால்சியத்தின் அளவு என்ன?

ஆரோக்கியமான, சரிவிகித உணவுகளிலிருந்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் உடலில் சேர வேண்டும். இந்த அளவானது ஒரு வேளை உணவிலிருந்து கிடைக்காமல் வேறுவேறு இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலம் கிடைக்கலாம்.
இன்னும் சொல்லப் போனால் ஒரு வேளை உணவிலேயே அதிகப்படியான கால்சியம் சத்து உடலுக்குள் போகும்போது அதை உட்கிரகிப்பதில் உடலுக்கு சிரமம் ஏற்படலாம். 50 வயதுக்கு மேலான பெண்களுக்கும், 70 வயதுக்கு மேலான ஆண்களுக்கும் 1200 மி.கி. அளவு கால்சியம் அவசியம். இந்த அளவைவிட அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கால்சியம் சப்ளிமென்ட்டுகள் எல்லா வயதினருக்கும் அவசியமா?

எல்லோருக்கும் தேவையில்லை. கால்சியம் குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு மட்டும்தான் மருத்துவர்கள் அதற்கான சப்ளிமென்ட்டை பரிந்துரைப்பார்கள். மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு
சப்ளிமென்ட் தேவைப்படலாம். ஆனால், அதையுமே மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையே படாமலும், தேவைக்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்கிற கால்சியம், வயதான பெண்களுக்கு டிமென்ஷியா பிரச்னைக்குக் காரணமாகலாம் என்றும் சொல்லப்படுவதால் கவனம் தேவை.

எந்தெந்த உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்?

தயிரில் கால்சியம் அதிகம். அது மட்டுமல்லாமல் அதில் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையான வைட்டமின் டி சத்தும் இருப்பதால் கூடுதல் சிறப்பானது. உடலின் வைட்டமின் தேவையில் 20 சதவிகிதத்தையும், கால்சியம் தேவையில் 30 சதவிகிதத்தையும் தயிரின் மூலம் பெறலாம். ஆனால், இந்தத் தயிரானது சர்க்கரையோ, வேறு கெமிக்கல்களோ கலக்காததாக இருக்க வேண்டியது முக்கியம்.

ஒருமுறை எலும்பு உடைந்தால் அது மீண்டும் வளரும்போது முன்பைவிட பலமாக இருக்கும் என்பது உண்மையா?

உண்மையில்லை. எலும்பு உடைந்து, மீண்டும் சேரும்போது முன்பைவிட அதன் பலம் அதிகரிக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அதில்
துளியும் உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் வயதானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, அது சரியாகும்போது அந்த எலும்பின் பலமானது முன்பைவிட மோசமாகவே இருக்கும். காரணம் முதுமையின் காரணமாக ஏற்கனவே எலும்புகளின் ஆரோக்கியம் குறையத் தொடங்கியிருப்பதுதான்.

உடல் பருமனுக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா?

உடல்பருமன் தலை முதல் பாதம் வரை எல்லா உறுப்புகளிலும் பிரச்னைக்குக் காரணமாவது போலத்தான் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உயரத்துக்கேற்ற எடையைக் குறிக்கிற பி.எம்.ஐ அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டுமென்றால் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். அது உடல்
பருமனையும் கட்டுப்படுத்தும்.

வயதானவர்களுக்கு ஏற்படுகிற பொதுவான ஃபிராக்சர் எந்தப் பகுதியில் அதிகம்?

வயதானவர்கள் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது, அதன் விளைவாக உயிரிழப்பது போன்றவற்றுக்கு முதல் காரணமாகச் சொல்லப்படுவது இடுப்பெலும்பு முறிவு. அதிலும் 80 சதவிகித இடுப்பெலும்பு முறிவுகள் 65 முதல் 85 வயதிலான பெண்களையே பாதிக்கின்றன. 90 வயதுக்குப் பிறகு 3-ல் ஒரு பெண்ணுக்கு இடுப்பெலும்பு முறிவு ஏற்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியமும், வைட்டமின் டியும் மட்டுமே போதுமா?

இவை இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானவை. ஆனால், அவை மட்டுமே போதாது. துத்தநாகம், மக்னீசியம் மற்றும் புரதம் போன்றவையும் எலும்புகளின் நலம் காப்பவை. பால், பால் பொருட்கள், புரோக்கோலி, பாதாம், சோயா, எள், ஆரஞ்சு சாறு, டோஃபு எனப்படுகிற சோயா பனீர் போன்றவை அடிக்கடி உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

Funny Bone என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

முழங்கையை எங்கேயாவது இடித்துக்கொண்டால் ‘சுளீர்’ என்ற வலி ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். முழங்கையில் உள்ள அது உண்மையில் எலும்பே இல்லை. நரம்பு. கையின் மேற்பகுதியிலிருந்து முழங்கையின் உள்பகுதிக்குச் செல்லும் இதற்குத் தான் ஃபன்னி போன் என்று பெயர்.

எலும்பு முறிவை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

கீழே விழுந்தோ, விபத்தின்போதோ எலும்பு முறிவு ஏற்படுவது சகஜம்.வலி, வீக்கம் மற்றும் வடிவம் மாறுதல் போன்றவை எலும்பு முறிவுக்கான பொதுவான அறிகுறிகள். இவை தவிர, எலும்பு முறிந்த இடத்தில் வித்தியாசமான சத்தம், சிவந்துபோவது, அந்த இடத்தைத் தொட்டாலே வலி உயிர் போவது, சருமப் பகுதியின் மேல் உடைந்த எலும்பு துருத்திக்கொண்டு நிற்பது போன்றவற்றை வைத்தும் இதை உறுதிசெய்யலாம். சிலருக்கு மயக்கமும் வரலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி