கொழுப்பு என்பது வேண்டாத விஷயம் அல்ல!



கவுன்சிலிங்

ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது நல்ல விஷயம்தான். ஆனால், அது தவறான புரிதலாக பரவிவிடக் கூடாது என்ற கவலை ஒவ்வொரு மருத்துவருக்கும் உண்டு. இதைச் சொல்வதற்கு முக்கியமான காரணம் கொழுப்பு பற்றி மக்களிடையே ஏற்பட்டிருக்கும் தவறான நம்பிக்கைதான்.

எடை குறைப்பு பற்றிய கவலையாலும், நோய்கள் பற்றிய அச்சத்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் கொழுப்பு என்றாலே வேண்டத்தகாத விஷயம் போல் ஆகிவிட்டது. சில உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் அந்த உணவை அறவே ஒதுக்குபவர்களும் உண்டு. ஆனால், நம் உடல் இயல்பாக செயல்பட கொழுப்பின் பணி இன்றியமையாதது. மூட்டுகள் எளிதாக இயங்குவதற்கும் ரத்தக்குழாய் நரம்புகள் சீராக செயல்படுவதற்கும் கொழுப்பு ரொம்ப முக்கியம். அதே கொழுப்பு ‘அளவுக்கு மீறினால்தான் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப மாறிவிடுகிறது.

கொழுப்பு பற்றிய இந்த தவறான பார்வை முதலில் மாறுவதும், அளவான கொழுப்பைப் பெறும் வழிகளையும் தெரிந்துகொள்வதும் அவசியம்.நம்முடைய ரத்தத்தில் வரையறுக்கப்பட்ட அளவைவிட கொலஸ்ட்ரால் மேம்பட்டாலோ அல்லது அகப்படும் திசு கொழுப்பு என்று அழைக்கப்படக்கூடிய ஒரு வகை கொழுப்பு உடல் பாகங்களில் அதிகளவு சேர்ந்தாலோ அது பல்வேறு தீமைகளைத் தரும். அதே வேளையில் கொழுப்பின் அளவு உடலில் குறைந்தாலும் பல்வேறு தீமைகளைத்தான் தரும். எனவே, அளவான கொழுப்பு ஆரோக்கியத்துடன் கொண்டாட்டத்தைத் தரும் என்பதையும், அளவுக்கு மீறிய அல்லது குறைந்த கொழுப்பு கொடுமையைத் தரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனித உடல் சீரான கட்டமைப்பிற்கு 7 தாதுக்கள் மூல காரணமாக இருக்கின்றன. மாமிசம், கொழுப்பு, அஸ்தி என்ற எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்தம் என்ற விந்து இவைகளில் இதர தாது இருக்கும் இந்த 7 தாதுக்களும் ஒரு நாயகமான தாது கொழுப்பு. இவை உருவான பின்புதான் எலும்பு என்ற உறுதியான ஆழ்ந்த தாது உருவாகிறது.

தாதுக்கள் அனைத்தும் நாம் உண்ணும் உணவு சீரான ஜீரணம் ஆன பிறகு உருவாகக் கூடியவை. எந்த வகை பான உணவு அதிகமாக உட்கொள்கிறோமோ அதற்கு இணையான குணம் கொண்ட தாதுக்கள் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, கொழுப்பை உணவாக அல்லது கொழுப்புக்கு ஒத்த குணமுடைய உணவை சாப்பிட்டால் கொழுப்பு என்ற தாது அதிகரிக்கும். அப்படி அது அதிகரித்து அவற்றால் ஏற்படுகிற அறிகுறிகள் சிலவற்றைத்
தெரிந்துகொள்வோம்.

புட்டம், மார்பு, வயிறு போன்ற உறுப்புகள் பெருத்து தொங்கும் அளவிற்குச் செல்லுதல். சிறிய வேலை செய்தால்கூட மூச்சு வாங்கும். சுறுசுறுப்பின்மை, அஜீரணம், உடல் பளு, உடல் தளர்ச்சி, அதிக உறக்கம், நீரிழிவு நோயின் முன் அறிகுறி (நீரிழிவு நோயும் வரையறுக்கப்பட்ட அளவைவிட மிகுந்து கொழுப்பும் நெருங்கிய நண்பர்கள் போன்றவர்கள்) கொழுப்பு அதிகரித்தால் அது வர காத்திருப்பது நீரிழிவு நோய். இது 2000 ஆண்டுகளுக்கு ஆயுர்வேத கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.) இதே கொழுப்பு குறைந்தால் பின்வரும் அறிகுறிகளை தோற்றுவிக்கும்.

மூட்டுகளில் தளர்ச்சி, நரம்புகள் தளர்ச்சி, இடுப்பில் வலி, உடலில் வறட்சி, இளைத்துப் போதல், சோர்வு, புட்டம், மார்பு சுருங்கி போதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அளவுக்கு மிகுந்த கொழுப்பும், அளவுக்கு குறைந்த கொழுப்பால் கொடுமைதான் என்பது மேற்கண்ட அறிகுறிகள் மூலம் தெரிய வரும்.

எனவே, அளவான கொழுப்பை பெற கீழ்க்கண்ட உணவு முறைகள், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பூண்டு பால்

20 கிராம் பூண்டை 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் கலந்துகொள்ள வேண்டும். இது 100 மில்லி பால் வரை வற்ற வைத்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் அளவான கொழுப்பைப் பெற முடியும்.

கொடும் புளி

நாம் தற்போது பயன்படுத்தும் புளிக்குப் பதில் கொடும் புளி உணவில் சேர்த்துக்கொண்டால் கெட்ட கொழுப்பை போக்கி, நல்ல கொழுப்பை அதிகரித்து சீரான அளவில் பராமரிக்கலாம்.

கொள்ளு

அதிகரித்த கொழுப்பை குறைப்பதில் கொள்ளு தானியத்தின் பணி இன்றியமையாதது. இந்த தானியத்தை துவையலாக சுண்டலாக, ரசமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், மிளகு, இஞ்சி, சுக்கு, தனியா, இதேபோல சமையலில் சேர்மானமாக சேர்க்கப்படும் லவங்கம், லவங்கப்பட்டை, அன்னாசிப்பூ போன்றவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்த மோர் சேர்த்துக் கொள்வதும் நல்ல பலன் தரும்.

பெருஞ்சீரகம்

சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் உணவை ஜீரணம் செய்வதில் மிகச்சிறந்தது. அனுதினமும் உணவில் பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் கொழுப்பு ரத்தத்தில் சேர்வது தடுக்கப்படும்.சிறிது வறுத்த சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினாலோ
அல்லது கருங்காலிக் கட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினாலோ அளவான கொழுப்பிற்கு வழி கோலும். மதிய நேரத்தில் மட்டும் அதுவும் சூடான உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் சிறுதுளி நெய் சேர்க்கக் கூடாத உணவுகள் அளவான கொழுப்பிற்கு வழிகோலும்.

அதிக கொழுப்பை ஏற்படுத்தும் தவறுகள்

எண்ணெய் பலகாரம் எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகள், தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்ளுதல், காலையும், இரவும் அஜீரணம்
இருக்கும்போது உட்கொள்ளப்படும் நெய் அதிக கொலஸ்ட்ராலுக்கு வழிகோலும். அஜீரணம் இருக்கும்போது எளிதில் ஜீரணமாகாத உணவை உட்கொள்ளுதல் அளவான கொழுப்பிற்கு செய்ய வேண்டியவை.

தினமும் உடற்பயிற்சி, தன் வேலையை தானே செய்தல், முடிந்த அளவிற்கு சுகபோக வாழ்க்கையை தவிர்த்தல், நடைபயிற்சி, இயற்கை வேகங்களை அடக்காமல் இருக்க வேண்டும். நல்ல கொழுப்பை வேண்டுபவர்கள் செய்யக் கூடாதவை.பகல் உறக்கம், இரவில் கண் விழித்தல், எல்லா வேலைக்கும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்தல், உண்டவுடன் உறக்கம் மேற்கொள்ளக்கூடாது.

மன உளைச்சல், கோபம் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமனுக்கு ஆயுர்வேத மருத்துவத்துறையில் ‘உத்வர்த்தனம்’ என்ற சிகிச்சை உதவும். திரிபலா சூர்ணம், குக்குலு என்ற மூலிகையையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்!

- விஜயகுமார்