ட்ரக்கியாஸ்டமி எதற்காக செய்யப்படுகிறது?!



சிகிச்சை

மூச்சுக்குழாய்த் தொற்று, சுவாசப்பிரச்னை அல்லது தலையில் ஏற்படும் விபத்து காரணங்களால் மேற்கொள்ளப்படும் அவசர சிகிச்சைகளில், தொண்டையில் துளையிடும் Tracheostomy எனப்படும் அறுவைசிகிச்சையைப் பற்றி அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதைப்பற்றி அறிய தீவிர சிகிச்சை நிபுணர் அரவிந்திடம் பேசினோம்…

ட்ரக்கியாஸ்டமி என்றால் என்ன?

ட்ரக்கியாஸ்டமி(Tracheostomy) என்பது தற்காலிகமான அல்லது நிரந்தரமாக, ஒரு நபரின் முன் கழுத்துப் பகுதியில், ஒரு துளையிடப்பட்டு அங்கு ஒரு குழாயை வைப்பதன் மூலம் மூச்சுக்குழாயை இணைக்கும் ஒரு மருத்துவ நடைமுறை. முக்கியமாக, ஒருவருக்கு சுவாசக்குழாயில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ அல்லது வழக்கமாக காற்றை சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ தொண்டையின் குரல் வளைக்கு கீழ் துளை போடுவதன் மூலம், Tracheo எனப்படும் சுவாசக்குழாய் வழியாக, நுரையீரல்களுக்கு தடையில்லாத சுவாசத்தை வழங்கப்படுகிறது.

ட்ரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை யாருக்கெல்லாம் தேவை?

மூச்சுக்குழாயின் மேல் பாகத்தில் உள்ள அடைப்பை நீக்கவும், மூச்சுக்குழாயில் படியும் அசுத்தங்களை நீக்கி சுத்தம் செய்யவும் மிக எளிதாகவும், பாதுகாப்பாகவும், நுரையீரல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க’ என இந்த மூன்று முக்கிய காரணங்களுக்காக ‘ட்ரக்கியாஸ்டமி’ சிகிச்சையை மேற்கொள்வோம். அதேசமயம் நீண்ட நாட்களுக்கு வென்ட்டிலேட்டர் வைத்து ஆக்சிஜன் வழங்க தேவைப்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு எளிதாக சுவாசிப்பதற்காகவும், விபத்தில் தலையில் அடிபட்டு மூச்சுவிட முடியாமல் மரணத்தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்கும் இந்த அறுவை சிகிச்சையை செய்கிறோம்.

எந்த மாதிரியான சூழல்களில் ட்ரக்கியாஸ்டமி செய்யப்படுகிறது?

1. ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மேல், நீண்ட காலத்திற்காக வென்ட்டிலேட்டர் வைக்கப்படும் நோயாளிகளுக்கு நெஞ்சில் சேரும் கபத்தை நேரடியாக உறிஞ்ச வேண்டிய நிலை.

2. குரல்வளை பக்கவாதம் (Vocal card paralysis) அல்லது தொண்டை புற்றுநோயினால் மூச்சுக்குழாயில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்பட்டுள்ள நிலை.

3. நரம்பியல் பிரச்னைகள், பக்கவாதம் அல்லது பிற நிலைகளால் தொண்டையில் உண்டாகும் கபத்தை இருமல் மூலம் வெளிக்கொண்டுவர சிரமப்படும் நோயாளிகளின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை நேரடியாக உறிஞ்சுவதற்குமான தேவை.

4. தலை மற்றும் கழுத்துப்பகுதி கடினமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாக சுவாசிப்பது கடினம், மேலும் அதற்கான அறுவைசிகிச்சை நேரமும் அதிகம் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் சுவாச மீட்பை தயார் படுத்தும் சூழல்.

5. விபத்து போன்ற அபாயமான நேரங்களில் நோயாளியின் மூச்சுக்குழாயில் தடை ஏற்படும், அப்போது வாயினுள் அல்லது மூச்சுக்குழாய்க்கு நேரடியாக டியூப் செருகி ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய கட்டாயமான சூழல். இந்த 5 காரணங்களின் அடிப்படையில் ட்ரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை மூலம் கழுத்தில் துளையிட்டு டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்துகிறோம்.

இந்த துளையின் வழியாக டியூப் செருகி உணவுக்குழாய் மூலம் உணவு நேரடியாக கொடுப்பதனால் நோயாளிக்கு உடலில் தேவையான ஆற்றல் கிடைத்து விரைவில் குணமடையவும் பயன்படுகிறது.

ட்ரக்கியாஸ்டமி செய்வதால் பேசுவதில் தடை ஏற்படுமா?!

முன்பெல்லாம் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச்செல்ல இந்தத் துளையில் உலோக பைப்பினை செருகுவோம். அதனால் நோயாளிக்கு உறுத்தல் இருக்கும். குரல்வளை வழியாக காற்று வெளியேறாமல் அதற்கு முன்பே துளைவழியாக காற்று வெளியேறி, பேசமுடியாத சூழல் இருந்தது. இப்போது ஃபைபரால் ஆன மிகவும் மெல்லிய மேம்படுத்தப்பட்ட குழாய்கள் பொருத்தப்படுகின்றன. இந்தக் குழாய்கள் இருக்கும்போதே நோயாளியால் பேச முடியும்.

பக்கவாதம், புற்றுநோய் அல்லது விபத்துக்களால் தீவிர சிகிச்சைப்பிரிவில் நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு இரும முடியாது, எச்சில் விழுங்க முடியாது, சாப்பிடும்போது புரையேறி நுரையீரலில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருந்தன. ட்ரக்கியாஸ்டமி மூலம் துளையிடப்படும் சிகிச்சையில் இந்தப் பிரச்னைகள் வெகுவாக குறைந்துள்ளன. புரையேறினாலும் நுரையீரலுக்குச் செல்லாமல் தடுத்துவிடும். இவர்களுக்கு நுரையீரலில் சேரும் சளி, கபம் போன்றவற்றை இந்த ட்யூபின் மூலம் எளிதில் வெளியேற்றிவிட முடிகிறது.

புற்றுநோயாளிகளுக்கு சுவாசக்குழாயில் அடைப்பு இருக்கும். குரல்வளைக்கு மேலே புற்றுநோய் கட்டி இருப்பவர்களுக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை நல்ல தீர்வு. அதேநேரத்தில் குரல்வளைக்கு கீழ் நிலையில் உள்ள புற்றுநோய்க்கு ட்ரக்கியாஸ்டமி செய்வது கடினம். ட்ரக்கியாஸ்டமி செய்வதாலேயே எல்லாம் சரியாகிவிடும் என்றும் சொல்லிவிட முடியாது. இது மூச்சு விடுவதை எளிமைப்படுத்துவதற்கும், நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வேண்டுமானால் உதவும்.

எவ்வளவு காலம் வரையில் வைத்துக் கொள்ள வேண்டும்?

Tracheostomy மூலம் வைக்கப்படும் ட்யூபை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தேவைப்படும் காலம் வரை வைத்துக் கொள்ளலாம். நரம்பு பாதிக்கப்பட்டவர்கள் குணமாவதற்கு 6 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை மருத்துவமனையிலேயே வைத்திருக்க முடியாது. ட்ரக்கியாஸ்டமி வைத்திருக்கும்போதே வீட்டிற்கு அனுப்பப்படும் நோயாளிகளுக்கு, அதை வைப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்கான பயிற்சியை, அவரைக் கண்காணிப்பவருக்கு கொடுத்துதான் அனுப்புவோம். இதனால் அவருக்கு உணவு அளிப்பது, மூச்சுவிடுவது போன்றவை எளிதாக இருக்கும்.

மருத்துவமனையிலும் இதற்காக பிரத்யேக பயிற்சிபெற்ற செவிலியரைத்தான் அமர்த்துவோம். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி வாய்வழி செருகும் ட்யூபையெல்லாம் நீண்ட நாள் வைத்திருக்க முடியாது. ட்யூபை சக்‌ஷன் போடுவது, சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பராமரிப்புகளை பயிற்சி பெற்றவர்களால்தான் செய்ய முடியும்.

இது ஒரு எளிமையான அறுவை சிகிச்சைதான். ஐ.சி.யூவிலேயே வைத்து மயக்கம் கொடுத்து செய்துவிடுவோம்.  இப்போதெல்லாம் ஊசி மூலம் டியூப்பை செருகும் வகையில் ஒரு கிட் வந்திருக்கிறது. மயக்க மருந்து மருத்துவர்களோ (Anesthesiologist) அல்லது தீவிர சிகிச்சை மருத்துவர்களோ கூட இந்த கிட்டை வைத்து ட்ரக்கியாஸ்டமி செய்துவிட முடியும். சுவாசப்பிரச்னை இருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் இதை செய்துகொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஏற்கனவே இருக்கும் நோய்களை விரைவில் குணமடையச் செய்வதற்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்பதால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய அவசியமில்லை. குரல்வளைக்குக் கீழ் செய்வதால் குரல்வளைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

வீட்டிற்கு வந்தபின் செய்ய வேண்டிய பராமரிப்புகள் என்னென்ன?

ட்யூபை நீக்கிய ஒரு வாரத்திலேயே பழைய குரலை பெற முடியும். ஏற்கனவே சொன்னபடி, தொண்டைப்புற்று, பக்கவாதம் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நோய் குணமாக 2 மாத காலம் ஆனாலும், ட்ரக்கியாஸ்டமி செய்து கொள்வதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கோ, சளி, கபம் கட்டுவதற்கான வாய்ப்புகளே ஏற்படாது.

முன்பெல்லாம் இதற்காக ஆபரேஷன் தியேட்டரில் வைத்து மயக்க மருந்து கொடுத்து, ஒரு பெரிய அறுவை சிகிச்சைபோல செய்யப்பட்டது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளா்ந்துவிட்டது. சின்னதாக ஒரு ஒயர் மூலமே சிறு துளை போட்டு, ட்யூபை சுவாசக் குழாயில் செலுத்திவிட முடிகிறது. மெட்டல் ட்யூபிலிருந்து, ப்ளாஸ்டிக் ட்யூப் மாறியபின் நோயிலிருந்து மிக விரைவாக எளிதில் மீண்டுவிட முடிகிறது.  

என்னதான், மயக்க மருந்து மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் இந்த ட்ரக்கியாஸ்டமியை செய்தாலும் கூட, கடைசி நேரத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு, சுவாசக்குழாய்க்கு ஏற்படக்கூடிய சேதம் போன்ற எதிர்பாராத சங்கடங்களைத் தவிர்க்க, காது, மூக்கு, தொண்டை நிபுணர் கண்காணிப்பில் செய்வது மிக நல்லது.

- உஷா நாராயணன்