குழந்தைகளால் ஆயுள் நீளும் !ஆராய்ச்சி

‘‘குழந்தைகள் நமக்கு அளவற்ற மகிழ்வைத் தருகிறவர்கள் மட்டுமே அல்ல. அவர்களால் பெற்றோரின் வாழ்நாளும் அதிகரிக்கிறது’’ என்கிறது ஸ்வீடனில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழான Journal of epidemiology & Community health.

பெற்றோரால் குழந்தைகளுக்கு எல்லாவிதங்களிலும் நன்மைதான். ஆனால், பெற்றோருக்கு அதனால் என்ன நன்மை என்று திடீரென யோசித்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி தீவிரமான ஆய்வு ஒன்றில் இறங்கியபோதுதான் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. இதற்காக, ஸ்வீடனில் கடந்த 1911-ம் ஆண்டு முதல் 1925-ம் ஆண்டு வரையில் வாழ்ந்த 7 லட்சம் தம்பதிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

குழந்தைகள் எதுவும் இல்லாத பெற்றோரைவிட, குறைந்தபட்சம் ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோர்  கூடுதலாக 2 வருடம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அம்மாக்களைவிட அப்பாக்களுக்குத்தான் ஆதாயம் அதிகம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆமாம்...
அப்பாக்களின் ஆயுள் இன்னும் 6 மாதங்கள் அதிகம்.

‘‘குழந்தைகள் தங்களுடைய மழலைப் பருவத்தில் பெற்றோருக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தருகிறார்கள். அவர்கள் கல்வி கற்று, திருமணம் முடித்து, வேலைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய மனிதராகும்போது அவர்களின் மாற்றங்களைக் கண்டு ரசிக்கும் பெற்றோருக்கு அதுவே பேரானந்தமாகிவிடுகிறது.

அவர்கள் பெற்றோருக்கு உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் இது பெற்றோருக்கே இருக்கும் மகத்தான பண்பு. அவர்களின் பிரதிபலன் எதிர்பாராத அன்பு அவர்களின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

- ஜி.ஸ்ரீவித்யா