ஆயுளைத் தீர்மானிக்கும் மெட்டபாலிசம்அறிந்து கொள்வோம்

மருத்துவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று மெட்டபாலிசம். அதிலும் எடை குறைப்பு பற்றி பேசும்போதெல்லாம் மெட்டபாலிசம் என்ற வார்த்தையைக் கட்டாயம் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். நம் ஆரோக்கியத்தில் அதன் முக்கியத்துவம் என்ன என்று உணவியல் நிபுணர் லஷ்மியிடம் கேட்டோம்…

* மெட்டபாலிசம் என்றால் என்ன?

‘‘நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். உடலின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல; நாம் சிந்திக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது.

தாவரம், விலங்கிலிருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை சேமித்து, தேவைப்படும்போது வெளிப்படுத்தும் மெட்டபாலிசம் தேவை. மெட்டபாலிச நடவடிக்கை நின்றால் உயிர்களின் மூச்சும் நின்றுவிடும். நாம் 2 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்தாலும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலை உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும்.’’

* மெட்டபாலிசத்தின் பணிகள் என்ன?

‘‘மெட்டபாலிச செயல்முறையில் ஒரே நேரத்தில் அனபாலிசம் (Anabolism) மற்றும் கேட்டபாலிசம்  (Catabolism) என இரண்டுவகையான சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. அவற்றில் ஒன்று உடல்திசுக்களை கட்டமைத்து ஆற்றலைச் சேமிப்பது (Anabolism), மற்றொன்று கட்டமைத்த உடல்திசுக்களையும், சேமித்த ஆற்றலையும் உடைத்து உடல் செயல்பாடுகளுக்கு எரிபொருளாக மாற்றித்தருவது(Catabolism).

நாளமில்லா சுரப்பி அமைப்பில் இருக்கும் பல ஹார்மோன்கள் மெட்டபாலிச மாற்ற விகிதத்தையும், அது செயல்பட வேண்டிய திசையையும் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது தைராக்சின்(Thyroxine) ஹார்மோன்.

தைராய்டு சுரப்பி மூலமாக வெளிவரும் இந்த ஹார்மோன் ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தின் வேதியியல் எதிர்வினைகளை மெதுவாகவோ அல்லது விரைவாகவோ செயல்புரிவதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்றொரு சுரப்பியான கணையமானது உடலில் ஆற்றலை சேமிக்க அல்லது உடைக்கும் நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது.’’

மெட்டபாலிச விகிதம் என்றால் என்ன?

‘‘எவ்வளவு ஆற்றல் அல்லது கலோரியை நம்முடைய உடல் தினசரி செலவழிக்கிறது என்பதை, ‘மெட்டபாலிச விகிதம்’ என்கிறோம். எவ்வளவு கலோரி அல்லது ஆற்றலை செலவழிக்கிறோமோ அதைப் பொறுத்து, நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும்.

எனவேதான், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மெட்டபாலிச விகிதம் மிகவும் முக்கியம். அதிக கலோரியை எரித்தால், உடல் எடை குறையும். மிகக் குறைவான கலோரியை எரித்தால், எடை குறையாது; அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால்தான் உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும்போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்று சொல்வார்கள். மெட்டபாலிச விகிதம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள், செரிமானம் தாமதமடையும்.’’

* மெட்டபாலிச விகிதத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

‘‘பாரம்பரிய மரபணுக்கள் மூலமாக ஒருவரின் மெட்டபாலிச விகிதம் அமைகிறது. பெரும்பாலானவர்களில் மெட்டபாலிச விகிதம் எந்தவிதமான முயற்சியுமின்றி தானாகவே நன்றாக வேலை செய்கிறது. ஆனால், சிலநேரங்களில் மெட்டபாலிச குறைபாட்டால் மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்தக்கூடும். பலரும் இதனை சாதாரணமாக நினைக்கிறார்கள்.

உடலில் உள்ள செல்களில் அசாதாரண ரசாயன எதிர்வினைகளால் மெட்டபாலிச குறைபாடு ஒருவருக்கு ஏற்படுகிறது. ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, டைப்-1 நீரிழிவு  மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை இந்த மெட்டபாலிச குறைபாட்டால் வரும் நோய்
களுக்கு எடுத்துக் காட்டாக சொல்லலாம். இவற்றுக்கு மூலகாரணம் மெட்டபாலிச விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே!

மெட்டபாலிச விகிதம் ஒருவருக்கு அதிகமாகும்போது தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்து ஹைப்போ தைராய்டு நோயும், இதன் விகிதம் குறையும் போது ஹைப்பர் தைராய்டு நோயும் ஏற்படுகிறது. அதேபோல் மெட்டபாலிச விகிதம் அதிகரிக்கும் போது இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. உடல் எடையைப் பராமரிப்பதிலும் மெட்டபாலிச விகிதத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதும் முக்கியம்.’’

* மெட்டபாலிச விகிதம் எதனால் பாதிப்படைகிறது?
‘‘துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றைத் தொடர்ந்து உண்ணும்போது உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதுடன், செரிமானத்தை சீர்குலைத்து உடலின் மெட்டபாலிசத்தை குறைத்துவிடும்.

உடலில் கால்சியம் மற்றும் புரதப் பற்றாக்குறை ஏற்பட்டாலும்  மெட்டபாலிசம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிடுவதும், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நினைத்து உணவினை சாப்பிடாமல் இருப்பதும் மெட்டபாலிச விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கலோரி அளவுகளை பார்த்து சாப்பிட வேண்டும்.

தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்வதால் உடலின் மெட்டபாலிச விகிதம் ஒரே சீரான அளவில் இருக்கும். உடலுக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்றாலும் மெட்டபாலிச விகிதம் குறையும். போதுமான நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று அடிக்கடி சோதித்துப் பார்க்க வேண்டும்.

அதேபோல மதுப்பழக்கமும் மெட்டபாலிசத்தை சீர்குலைக்கக் கூடியது. உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக இருப்பது கார்போஹைட்ரேட் உணவுகள் தான். இன்று பலர் அரிசியில் கார்போஹைட் அதிகம் என்பதால் அரிசியைத் தவிர்க்கிறார்கள். கார்போஹைட்ரேட் குறைந்தாலும் மெட்டபாலிசம் குறையும்.

இதனால் சோம்பலாக உணர்வீர்கள். பகலில் அடிக்கடி தூக்கம் வரும், உடல் உழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள். உணவைப்போலவே சீரான உடற்பயிற்சியும் முக்கியம். அதிகபட்சமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அது உங்களின் மெட்டபாலிசத்தை குறைக்கும். ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, போதுமான ஓய்வின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவையும் மெட்டபாலிசத்தை பாதிப்பவை.

முக்கியமாக, இன்றைய அவசர உலகத்தில பலரும் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள். இரவு உணவுக்கும், காலை உணவிற்குமே நீண்ட இடைவெளி. அதில் காலை உணவு சாப்பிடாதவர்களின் மெட்டபாலிச விகிதம் குறைந்துவிடும்.’’

* மெட்டபாலிச விகிதத்தை குறைக்கும் மற்றும் அதிகரிக்கும் காரணிகள்...‘‘உடல்பருமன், உயரம் குறைவு, முதுமை மற்றும் தைராய்டு செயல்பாடு குறைவு போன்றவை மெட்டபாலிசம் குறையக் காரணங்கள். பெண்களுக்கு இயல்பாகவே மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். உடல் மெலிவு, அதிக உயரம், இளம் வயது, தைராய்டு செயல்திறன் அதிகமாக இருப்பது, பெண்கள் கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலத்தில் இருப்பது போன்றவை மெட்டபாலிசத்தை அதிகரிப்பவை. ஆண்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும்.’’

- இந்துமதி