பயணம் போவதால் இத்தனை பலனா?!



Centre Spread Special

ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்வது மட்டுமே பயணம் அல்ல. அது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக்குகிற ஒரு மருத்துவ விஷயமும் கூட. ஒரு தனிமனிதரின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், மனநலன், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை மேம்
படுத்துவதில் பயணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

‘‘பயணத்தைத் தீர்மானிப்பது, அதற்காகத் திட்டமிடுவது, குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருப்பது, அறிமுகமில்லாத மனிதர்களோடு பயணிப்பது, புதிய இடங்கள், புதிய காட்சிகள், புதுவகை நறுமணங்கள், வித்தியாசமான ஒலிகள் போன்றவை மகிழ்வைத் தந்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது’’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல உளவியலாளரும், பயணம் தொடர்பாக ஆய்வை மேற்கொண்டவருமான ஆடம் காலின்ஸ்கி.

பயணம் ஒருவரின் மூளையின் ஆற்றலை மட்டுமல்ல; இதயத்தையும் வலுவடையச்செய்கிறது. பல ஆண்டுகளாக விடுமுறையோ, பயணங்களோ மேற்கொள்ளாதவர்கள் வருடந்தோறும் பயணித்தவர்களை விட அதிகமான மாரடைப்புகளால் பாதிக்கப்படுவதாக Framingham Heart Study கண்டுபிடித்துள்ளது. ஏனெனில், கடுமையான பணிகளுக்கு நடுவே பயணம் மேற்கொள்பவர்கள் மனச்சோர்விலிருந்து விடுபடுவதால் இதயத்தின் அழுத்தத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.

‘சுற்றிப் பார்ப்பது, ஷாப்பிங் செய்வது, மலையேறுவது, சத்தம் போட்டு சிரிப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் மூளையும், உடலும்
அதிகப்படியாக இயங்குகிறது. இதனால் உடலெங்கும் புது ரத்தம் பாய்கிறது. இயற்கையான இடங்களுக்கு செல்லும்போது சுத்தமான காற்றை சுவாசிக்க
முடிகிறது என்பதும் முக்கிய காரணம்’ என்று இதனை வழிமொழிகிறது 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட Cornell research study.

எனவே, நீண்ட நெடுந்தூரப் பயணமோ, அருகாமையில் இருக்கும் இடமோ... எதுவாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயணம் போகத் தவறாதீர்கள். அது  உங்கள் வழக்கமான வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விடுதலை அளித்து, மனதுக்கும் உடலுக்கும் நிச்சயம் புத்துணர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

- என்.ஹரிஹரன்