எல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே...



பில்கேட்ஸின் மறுபக்கம்
 
கம்ப்யூட்டர் ஜாம்பவான், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் என்று பில்கேட்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த பிரபல அடையாளங்களைத் தாண்டி பில்கேட்ஸிடம் இருக்கும் மற்றோர் முகம் சுகாதாரம் தொடர்பான அவரது ஆர்வம்.

மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த பிறகு, தனது பெரும்பாலான நேரத்தை மருத்துவம் சார்ந்த சேவைகளிலும், நிகழ்வுகளிலுமே செலவிட்டுக் கொண்டிருக்கிறார் பில்கேட்ஸ். அவரது மனைவி மெலிண்டாவுக்கும் மருத்துவ சேவைகளில் ஆர்வம் அதிகம் என்பதால் இருவரும் இணைந்தே பல சமூக செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக The Bill and Melinda Gates Foundation என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் எச்.ஐ.வி, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் மூலம் தன் வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற செயல்களுக்கு செலவழித்து வருகிறார்.

இதில் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்ற ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பில்கேட்ஸ் தம்பதி வரும்போதெல்லாம் கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மக்களை நேரில் சந்தித்து கல்வி மற்றும் சுகாதார உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

சமீபகாலமாக தன்னுடைய கவனத்தை அல்ஸைமர் நோயாளிகளின் மீது திருப்பியுள்ளனர் பில்கேட்ஸ் தம்பதியினர். அவர்களுக்காக 10 கோடி டாலர் மதிப்பிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். இந்த தொகையில் பாதி, ஆராய்ச்சிகளுக்கு கவனம் செலுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. நோயின் ஆரம்ப கட்ட ஆய்வுகளுக்காகவும், மீதி அல்ஸைமர் நோயாளிகளின் பதிவேட்டில் பதியப்பட்டவர்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் குழு அமைப்புக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

‘‘நாளுக்கு நாள் அல்ஸைமர் நோயாளிகள் பெருகிக்கொண்டே வருவது மிகவும் கவலையளிக்கிறது. இன்னும் 10, 15 வருடங்களில் இவர்களுக்கான மருந்துகளின் தேவை பல மடங்கு உயரும் அபாயம் இருக்கிறது. அந்நிலையை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தயார்படுத்திக் கொள்வதும் நம் கடமை.

அதேநேரத்தில் அல்ஸைமர் எதனால் வருகிறது? அதை முன்கூட்டியே அறிவதால் நோயின் பாதிப்பை குறைக்க முடியுமா? அல்ஸைமருக்கு எதிரான போராட்டத்தில் நம்மை வலுப்படுத்துவதில் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற கோணங்களில் நம் ஆய்வுகளையும் துரிதப்படுத்த வேண்டும்’’ என்று சொல்லும் பில்கேட்ஸ், இந்த மாற்றத்துக்கு சமீபத்தில் அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையே காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பில்கேட்ஸின் சமூக சேவைகள் சந்தேகத்துக்குரியவை, அவர் மருத்துவ சேவை என்ற பெயரில் மனிதர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார் என்று இதுதொடர்பாக சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. குற்றம் சொல்கிறவர்கள் எல்லாவற்றுக்கும் சொல்லத்தான் செய்வார்கள். அவர்களுக்கும் ஏதாவது வேலை வேண்டாமா என்று அதை மறுக்கும் பில்கேட்ஸ், ‘‘பணத்தால் எந்த நன்மையும் இல்லை.

அதை மற்றவருக்காகப் பயன்படுத்தும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான் மிகப்பெரிய நன்மை’’ என்றும் தன்னுடைய செயல்பாடுகளுக்கான காரணத்தை விளக்குகிறார். சம்பாதித்தோம், செட்டிலானோம் என்று இல்லாமல் சமூக சேவைகளுக்காக எல்லா கோடீஸ்வரர்களும் தங்களது பங்களிப்பினை இப்படி செய்தால் சமூக மாற்றம் நிச்சயம்தான்!

- இந்துமதி