செயற்கை கண்



தெரியுமா?!
 
கண் மருத்துவ சிகிச்சையில் எத்தனையோ வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், பலரும் அவ்வளவாக அறிந்திராத ஒன்று செயற்கைக் கண் சிகிச்சைமுறை. ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லன் தன்னுடைய கண்விழியைக் கழற்றி சுத்தம் செய்து, மீண்டும் மாட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா?! அதுதான் செயற்கைக்கண். 

இந்த செயற்கைக் கண் எதற்காக, யாருக்குப் பொருத்தப்படுகிறது என்று கண் மருத்துவர் திரிவேணியிடம் கேட்டோம்…‘‘ஒரு கண் விழி முழுவதும் நீக்கப்பட்ட நபரின் மற்றொரு கண்ணைப் போன்றே தயார் செய்து பொருத்துவதை Customized eye என்கிறோம். இதன் மூலம் தனிநபர் ஒருவருடைய கண் அமைப்பு, முக அமைப்பு போன்றவற்றுக்கு ஏற்ப கண்களை தயார் செய்து பொருத்த முடியும்.

இந்த செயற்கைக் கண் Acrylic என்கிற ஒரு வகை பிளாஸ்டிக் பொருளால் தயார் செய்யப்படுகிறது. எனவே, இதை செயற்கைக் கண்(Artificial eye) என்று அழைக்கிறோம். இதில் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட நிலையில் உள்ள கண்களை Ready made eye என்ற வகையும் உண்டு. இது ஒரு குறிப்பிட்ட அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஒருசிலருக்கு மட்டுமே பொருத்த முடியும். எல்லோருக்கும் பொருந்தாது.’’

செயற்கைக் கண் யாருக்குப் பொருத்துவார்கள்?

‘‘கண்களில் ஏற்படும் விபத்துகளால் கண்விழிகளில் தீவிரமான பாதிப்பு ஏற்படுதல் அல்லது கண்விழி சிதைந்தோ, கிழிந்தோ முழுவதும் வெளியே வந்துவிடுதல், கண்களில் புற்றுநோய் ஏற்படுதல், கண் அழுத்த நோய் தீவிரமாகி கண்பார்வை பறிபோதல், கண்களில் ஏற்படும் கிருமி பாதிப்பு தீவிரமடைதல் போன்ற காரணங்களால் கண்பார்வை முழுவதும் பறிபோன நபருடைய பாதிக்கப்பட்ட கண்விழியை முழுவதும் வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்படி கண்விழியை முழுவதும் அகற்றிய வர்களின் முகத்தில் கண் இருந்த இடம் சுருங்கி சிறிதாகவோ அல்லது குழி விழுந்த தோற்றமோ ஏற்படுகிறது. இப்படி கண்விழியை நீக்கியவரின் முகத்தோற்றம் முன்னர் இருந்தது போன்று இருப்பதற்காகவே செயற்கைக்கண் பொருத்தப்படுகிறது. அதாவது, இந்த செயற்கைக் கண் என்பது வெறும் வெளிப்புறத் தோற்றத்துக்காகவே பொருத்தப்படுகிறது. இதனால், கண்ணில் பார்வை தெரியாது. இதன் மூலம் கண்பார்வை பிரச்னைக்கு தீர்வும் கிடைக்காது.

ஒரு நபரின் முகத்தில் கண்விழி இல்லாமல் குழிபோன்று இருந்தால் பார்ப்பதற்கு விகாரமாக இருக்கும். யாரும் தன் முக அமைப்பு அப்படி இருப்பதை விரும்ப மாட்டார்கள். செயற்கைக் கண்கள் பார்ப்பதற்கு உண்மையான கண்களைப் போன்றே கண் அசைவுகளை உடையதாக இருக்கிறது.

இதனால் உண்மையான கண் இருப்பது போன்ற ஒரு தோற்றம் மற்றவர் மத்தியில் உண்டாகிறது. வித்தியாசம் ஒன்றும் தோன்றாது. முகத்தோற்றம் சீராக இருப்பது, பாதிக்கப்பட்டவரின் உளவியல் சார்ந்த குறையை நீக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காகவே செயற்கைக் கண் பொருத்தப்படுகிறது.’’

- கௌதம்