டியர் டாக்டர்
*சொரியாஸிஸ் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தியிருந்தார் சரும நல மருத்துவர் வானதி. சொரியாசிஸ் குறித்த தவறான நம்பிக்கைகளையும், மோசடி விளம்பரங்கள் குறித்தும் எச்சரித்திருந்தது பாராட்டுக்குரியது.
- சி.கோபாலகிருஷ்ணன், காங்கேயம்.

*குழந்தை பெறப் போகும் பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றி டாக்டர் கு.கணேசன் சொல்லி இருந்த விதம் கர்ப்பிணிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் பயன்படும் வகையில் இருந்தது.
- தமிழ்ச்செல்வம், செம்பாக்கம்.

*பழங்களைப் பற்றிய ஒரு முழுமையான கட்டுரையை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்! பழங்களின் சத்துக்கள், யார் யார் சாப்பிட வேண்டும், எந்த அளவு, பருவ கால பழங்கள் என ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் போல் இருந்தது. படித்துப் பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.
- கோ.உத்திராடம், வண்டலூர்.

*கருஞ்சீரகத்துக்கு இத்தனை மருத்துவ மகிமைகள் இருக்கிறதா என்று வியக்க வைத்தது சர்வரோக நிவாரணி கட்டுரை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*‘ஆபரணங்கள் வெறுமனே அழகுக்காக மட்டுமே அல்ல. அவற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு’ என்பதைப் படித்ததும் நம் முன்னோருடைய அறிவியல் பார்வையை சிந்தித்து வியந்து மகிழ்ந்துபோனேன். நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை அலட்சியப்படுத்தும் இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
- பார்த்தசாரதி, சென்னை - 34.

*ரத்த சோகை என்பது என்ன? எப்படி போக்குவது? அதற்கான உணவுகள் என்ன? எப்படி செய்வது? என எல்லாவற்றுக்குமே சிறப்பான பதில் கொடுத்திருந்தது டயட் டைரி. உணவு வகைகளின் செய்முறையை விளக்கமாக வண்ணப் படங்களோடு வெளியிட்டிருந்தது அருமை.
- ராஜசேகர், மடுவின்கரை.

*கிழங்கு வகைகள் பற்றி நீண்டநாட்களாகவே குழம்பி வந்த என்னைப் போன்றோருக்குத் தெளிவைத் தந்திருந்தார் உணவியல் நிபுணர் கோமதி கௌதமன். ‘மத்திய பட்ஜெட்டால் மருத்துவத்துக்கு என்ன லாபம்’ என்ற அலசல் கட்டுரை பட்ஜெட்டை இன்னும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவியது. 
- விஜயலட்சுமி, ஈரோடு.