மண்ணீரலுக்கு உடலில் என்ன வேலை?!



டாக்டர் எனக்கொரு டவுட்டு

உடலில் கல்லீரலின் முக்கியத்துவம் பற்றி
அடிக்கடி பேசுகிறோம். ஆனால்,
மண்ணீரல் பற்றி அதிகம் கேள்விப்
படுவதில்லையே..? உடலுக்கு மண்ணீரல் மிகவும் அவசியமான உறுப்பா?
- வரதராஜன், திருவண்ணாமலை

சந்தேகம் தீர்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதா கிருஷ்ணன்.‘‘மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அந்த வேலைகள் தடையின்றி நடந்தால்தான் உடலை உயிருடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் மண்ணீரலும் தன் பங்குக்கு சிறப்பான பணிகளைச் செய்கிறது.

மண்ணீரல் அடிவயிற்றின் இடது மேல் திசையில் அமைந்துள்ள உறுப்பாகும். சுமார் 7 சென்டிமீட்டர் வரை  இருக்கும். பிறந்து 5 வயது வரை ரத்த உற்பத்தி பணியை தீவிரமாக பார்க்கிறது. இதனால் குழந்தைகளை வயிற்றில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இயங்குதல் தன்மையை ஊக்குவிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை தூண்டுகிறது. ரத்தத்தின் மூலமாக வருகிற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.கல்லீரல், இரைப்பை பித்தப்பை, சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மண்ணீரல் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதி அடிபட்டாலும் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும். மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அதனை அகற்றிவிடுவார்கள்.

இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. மண்ணீரல் பார்த்த பணியை கல்லீரல் பார்க்கத் தொடங்கிவிடும். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் எடை அதிகரிக்கும், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாகும், வாந்தி ஏற்படும். கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம் போன்ற உணவுகள் மண்ணீரலுக்கேற்ற உணவுகள் ஆகும்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்