ஆண்கள் மோசம்... பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் !



மகிழ்ச்சி

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. ‘என்னதான் கஷ்டம், கவலை, கண்ணீர் என்று வாழ்க்கை நகர்ந்தாலும் எத்தகைய சூழலையும் சமாளித்து வெற்றி காண்கிற திறன் பெண்களுக்கே அதிகம்’ என்பதை உளவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல்ரீதியான வலிமை கொண்டவர்கள், உள்ளத்திலும் தைரியம் மிக்கவர்கள் என்று கருதப்படுகிற ஆண்கள் இந்த விஷயத்தில் இரண்டாம் இடத்தையே பிடிக்கிறார்கள்.

ஆமாம்... மன அழுத்தம் ஆண்/பெண் என்ற பாரபட்சமில்லாமல் எல்லோரையும் ஆட்டிப்படைத்தாலும், பெண்கள் அந்த மன அழுத்தத்தை நேர்த்தியாகக் கையாள்கிறார்களாம்.டென்னிஸ் விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் இந்த சுவாரஸ்யமான உண்மை தெரிய வந்துள்ளது.

இஸ்ரேலின் பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 8 ஆயிரம் டென்னிஸ் விளையாட்டு வீரர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். டென்னிஸ் களத்தில் சிக்கலான சூழலில் ஓர் ஆண் விளையாட்டு வீரர் எப்படி அதை கையாள்கிறார், பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர் எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து உள்ளனர்.

 மிகவும் சிறப்பாக செயலாற்றக் கூடிய ஆண் மற்றும் பெண் டென்னிஸ் வீரர்களையே இதில் நுட்பமாக கவனித்தனர். இரு தரப்பினரையும் ஒப்பிடுகையில், விளையாட்டின் பதற்றமான சூழ்நிலைகளில் பெரும்பாலான ஆண் வீரர்கள் மன அழுத்தத்தில் மாட்டிக் கொண்டதும், அதில் இருந்து வெளிவர இயலாமல் தவித்ததும் தெரிய வந்தது.

இருப்பினும் இந்த ஆய்வானது விளையாட்டு சூழலில் போட்டியிடும் ஆண் மற்றும் பெண்களின் செயல்திறமைகள் எவ்வாறு மன அழுத்தத்தைக் கையாள்கிறது என்பது மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த ஆய்வு பற்றி செயின் கெல்லன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் அலெக்ஸ் க்ரூமர், சமீபத்திய தனது பேட்டியில் ஆய்வு முடிவுகளை விளக்கியிருந்தார்.

‘‘2010-ம் ஆண்டில் நடந்த பிரெஞ்ச், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளின் முதல் கட்ட தொகுப்பில் செயல் திறமைகளை தனித்தனியாக பிரித்துப் பார்த்தபோது, விளையாட்டின் முக்கியமான தருணங்களில் ஆண்களின் செயல்திறமைகள் பெண்களை விட மிக மோசமாக இருந்தது. காரணம், அவர்களுடைய மன அழுத்த மேலாண்மை.

மன அழுத்தத்தின்போது உடலில் சுரக்கும் கார்டிசால் ஹார்மோனின் இலக்கணத்தைப் பார்த்தால், பெண்களைவிட ஆண்களுக்கே அதிகளவு வேகமாக அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதற்கு ஆண், பெண் இருவருக்கும் இடையிலான மூளை அமைப்பு, அவர்கள் வளரும் விதம், பிரச்னைகளை வெளிப்படுத்துகிற தன்மை போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

ஆண்கள் அதிகம் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, மாரடைப்பால் பாதிக்கப்படுவது போன்றவற்றையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்வில் ஆண்கள் தங்களது நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

- எம்.வசந்தி