ஃபிட்டாதான் இருக்கீங்களா? # Simple Check List



ஒருவரின் அடிப்படை ஆரோக்கியத்தை பல வரையறைகளின் அடிப்படையில் மருத்துவ உலகம் முடிவு செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சராசரியாக 120-140 mg/dl வரை, இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 72 bpm என்பதிலிருந்து பி.எம்.ஐ இத்தனை இருக்க வேண்டும், கொலஸ்ட்ரால் இவ்வளவு இருக்கக் கூடாது என்பது வரை பல இலக்கணங்களைக் கொண்டு ஒருவருடைய ஃபிட்னஸ் முடிவு செய்யப்படுகிறது. இவையெல்லாம் மருத்துவ ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது நாம் தெரிந்துகொள்ள முடிகிற தகவல்கள்.

இவைகள் தவிர்த்து, சாதாரண வாழ்விலேயே நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேனா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எளிமையான வழிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கான ஆலோசனைகளைச் சொல்கிறார் உடற்பயிற்சி நிபுணரான அரசு.

அன்றாட வாழ்வில் நீங்கள் சொல்வதை உங்கள் உடல் கேட்டாலே நீங்கள் ஃபிட்டாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிரமமில்லாமல் தினசரி செய்யும் வேலைகள் மற்றும் நடைமுறை பழக்கங்களே உங்கள் உடல் உறுப்புகளின் வலிமை, நெகிழ்வுத்தன்மை, சமநிலை, தசைகளின் நீட்சி போன்றவற்றை நிரூபிக்கும் அறிகுறிகள். அதை சோதித்துத் தெரிந்து கொள்வதற்கான செக் லிஸ்ட் இதோ... பின்வரும் வினாக்களுக்கு உங்கள் பதில்கள் ஆம் என்றால், நீங்கள் நினைப்பதைவிடவும் ஃபிட்டான நபர்தான் நீங்கள்... வாட்டர் கேனைத் தூக்க முடிகிறதா?

ஜிம்முக்குச் சென்று கிலோக்கணக்கில் வெயிட் தூக்கினால்தான் நீங்கள் வலுவானவர் என்று அர்த்தம் இல்லை. லஞ்ச் பேக், லேப்டாப், வீட்டுக்கு வாங்கும் பொருட்கள் என அன்றாட வாழ்க்கையின் சாதாரண சுமைகளை வீட்டிலிருந்து ஆஃபீஸ், அங்கிருந்து பஸ் ஸ்டாப், திரும்பவும் வீடு, ஆஃபீஸ் படிக்கட்டுகள் என சுமக்க முடிகிறதா?

அதைத் தூக்கிக்கொண்டே பஸ்ஸுக்காகவும், லிஃப்ட்டுக்காகவும் காத்திருக்க முடிகிறதா? 8 கிலோ எடையுள்ள குழந்தையையும்
அம்மாக்களால் இடுப்பிலும், அப்பாக் களால் தோளிலும் சுமக்க முடிகிறதா?

ஆம் எனில், நீங்கள் ஃபிட்டானவர்தான். இடுப்பில் குழந்தை, தலையில் தண்ணீர் குடம் எடுத்துக் கொண்டு போகும் ஒரு கிராமத்துப் பெண்ணும், கேன் வாட்டர், சிலிண்டர்களை தூக்கும் ஆண்களும் பளுதூக்கும் வீரர்களுக்கு இணையானவர்களே!

ஷேர் ஆட்டோவில் பயணிக்க முடிகிறதா?

ஷேர் ஆட்டோவில் ஏறி, இறங்கி, வளைந்து நெளிந்து உட்கார்ந்து 10 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஆஃபீஸுக்கு தினமும் போய் வருகிறீர்களா?
ஆம் எனில், நீங்கள் ஃபிட்டானவர்தான். ஷேர் ஆட்டோவில் முழங்காலை மடக்கி ஏறி, நீட்டி இறங்குவதே, ஜிம்மில் மாங்கு மாங்கென்று Deep Squat பயிற்சி செய்வதற்கு இணையானதுதான். முழங்கால் வலுவில்லையென்றால் உங்களால் இந்த கடினமான பயணத்தை மேற்
கொள்ளவே முடியாது.

10 நிமிடங்கள் நிற்க முடிகிறதா?

ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட், தியேட்டர் வாசல், மால்களில் ஃப்ரண்ட்ஸுக்காக நீண்டநேரம் காத்துக் கொண்டு நிற்கும்போது எதன் மீதும் சாயாமல், கால்களை மாற்றிக் கொள்ளாமல் நிற்க முடிகிறதா? குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது உட்காராமல் நிற்க முடிகிறதா?

ஆம் எனில்... நீண்ட நேரம் அமர்ந்து கொண்டோ அல்லது நின்றுகொண்டோ வேலை செய்பவர்களுக்கு எலும்புகள் இறுகி முதுகுவலி, இடுப்புவலி வரும். இவர்களால் பிடிமானம் இல்லாமல் நேராக சிறிது நேரம்கூட நிற்க முடியாது. உங்களால் முடியும் என்றால் உங்கள் உடல் நெகிழ்வுத்தன்மையை(Flexibility) இழக்கவில்லை என்று சந்தோஷப்படலாம்.பொருட்களை நகர்த்த முடிகிறதா?

வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ், பீரோ போன்ற பொருட்களை எளிதாக மூச்சு வாங்காமல் உங்களால் நகர்த்த முடிகிறதா?

ஆம் எனில், உங்களின் தசைகள் மற்றும் இதயம் வலிமையாக இருக்கிறது என்றே அர்த்தம். வலுவற்ற தசைகளோ, இதயமோ கொண்டவராக நீங்கள் இருந்தால் மூச்சு வாங்கும், முதுகு, இடுப்பு தசைகளும் பிடித்துக் கொள்ளும்.

விழாமல் இருக்கிறீர்களா?

குறுகலான சமையலறை, நிறைய பொருட்கள், குறுக்கே ஓடும் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகள். இத்தனைக்கும் நடுவே சிந்தாமல், சிதறாமல், சமைக்கும் பதார்த்தம் தீய்ந்து போகாமல் அல்லது நீங்கள் விழாமல் சாதாரணமாகவே சமையலறையில் வேலைகளை செய்கிறீர்களா?

ஆம் எனில், உங்கள் உடல் உறுப்புகள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
படிகளில் நடக்கிறீர்களா?

இரண்டு கைகளால் எடைமிகுந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி, இறங்க முடியுமா?

ஆம் எனில்,இரண்டு கைகளால் எடையை தூக்கிக்கொண்டு மாடிப்படிக்கட்டுகளில் ஏறிவிட முடியும். அதுவே, கட்டுப்பாடான வேகத்தில் இறங்குவது கடினம். கையில் அதிக எடை இருக்கும்போது கடைசி படிக்கட்டை பார்க்க முடியாது.

சீரான வேகத்தில் இறங்க முடியாமல் பேலன்ஸ் தவறக்கூடும். இளமையில் இது சாத்தியம். 40 வயதுக்குமேல் மிகவும் கடினம். இந்த வேலையை எளிதாக செய்வீர்கள் என்றால், உங்கள் உடலின் சரியான சமநிலைத்தன்மையை சரியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.விளையாட முடிகிறதா?

உங்கள் குழந்தைகளோடு பார்க்கில் சறுக்கு மரம் ஏறுவது, See-Saw, Monkey bar விளையாடுவது, அவர்களுக்கு இணையாக ஓடுவது, பீச்சில் ஓடியாடி பந்து விளையாட முடிகிறதா?

ஆம் எனில், உங்கள் இதயம் நன்றாக வேலை செய்கிறது. நீங்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்யத் தேவையே இல்லை என்று அர்த்தம்.

- என்.ஹரிஹரன்