வண்ணம் தீட்டும் மனசுல தென்றல் வீசும்



ரிலாக்ஸ்
 
க்ரயான்ஸ், ஸ்கெட்ச், பெயிண்ட்டிங்ஸ் எல்லாவற்றையும் பள்ளிப் பருவத்தோடு மறந்திருப்போம். ஆணால், இப்போது பெரியவர்களுக்காகவும் பிரத்யேகமான கலர்புக் மீண்டும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. எதற்காக என்கிறீர்களா?

அதன் பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, ‘கலரிங் செய்வதால் பலவிதமான மனக்குழப்பங்களில் இருக்கும் நம் மனதுக்கு தியானம் செய்வதைப் போன்ற அமைதியைப் பெற முடிகிறது’ என்கின்றனர் உளவியலாளர்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நிறத்துக்கு உள்ள தொடர்பைப் பற்றிய ஆய்வுகள் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றன. அதில்
‘மனச்சோர்வு, மனப்பதற்றங்களை போக்கும் வலிமை வண்ணம் தீட்டும் கலைக்கு உண்டு’ என்ற உண்மை நிறம் தொடர்பான உலகின் பல்வேறு புவி மண்டலங்களில் 2005-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘வண்ணங்களை கலந்து தீட்டும்போது தர்க்க ரீதியோடு(Logical reasoning) சம்பந்தப்பட்ட இடது மூளை மற்றும் படைப்பாற்றலுக்கான (Creativity) வலது மூளை என மூளையின் இருவேறுபட்ட கோளங்களும் ஈடுபடுகிறது. இது பார்வையோடு தொடர்புடைய பெருமூளைப் பகுதியையும், மூளையின் அறிவுசார் மோட்டார் திறனையும் ஒருங்கிணைக்கிறது.

மனஅழுத்தத்தை தூண்டக்கூடிய அமிக்டாலா என்னும் மூளைப்பகுதியின்
செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது’ என்கிறார் க்ளோரியா மெர்டினஸ் அயாலா என்ற ஐரோப்பா உளவியலாளர்.

‘ஒரு நாளில், ஒரு மனிதனின் மனதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணச் சுழற்சிகள் நிகழ்கின்றன. இவற்றிலிருந்து திசை திருப்பி, தற்காலிக விடுதலையைப் பெற்றுத் தருவதோடு, நிகழ்காலக் கவலைகளிலிருந்து விடுவித்து, எந்த கஷ்டமும் இல்லாத குழந்தைகளின் உலகத்துக்கு மீண்டும் கொண்டு சென்று மூளைக்கு அமைதியையும், ஓய்வையும் கொடுக்கிறது வண்ணம் தீட்டும் கலை.

கலரிங் செய்யும்போது, எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, சுற்றியுள்ள அனைத்து தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு ஒரு தியான நிலைக்குச் செல்ல முடியும்’ என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.அதனால், உங்கள் குழந்தையோடு குழந்தையாக நீங்களும் சேர்ந்து கலரிங் செய்யலாமே...

- என்.ஹரிஹரன்