தங்க உருளைக்கிழங்கு



அமெரிக்காவின் ஒஹியோ மாகாண பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து புதிய உருளைக் கிழங்கு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். ஜெனிட்டிக் என்ஜினியரிங் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த உருளைக்கிழங்கை வெட்டிப் பார்த்தால் பொன் நிறத்தில் இருக்கும் என்பதால் இதனை தங்க உருளைக்கிழங்கு என்றே அழைக்கிறார்கள்.

‘இதில் புரோ வைட்டமின் ஏ சத்து செறிவாக இருக்கும்வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் உடல் செரிமானம் செய்து வைட்டமின் ஏ சத்தாக மாற்றிக் கொள்கிறது. இந்த சத்தானது இளம் வயதில் கண்பார்வை பறிபோவதை தடுக்க உதவுவதோடு, உடலுக்கு தொற்றுகளை எதிர்க்கும் சக்தியையும் கொடுக்கும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைபெற்றெடுப்பதற்கு அவசியமான வைட்டமின் ஏ இந்த கிழங்கில் நிறைவாக உள்ளது. மேலும் இதிலுள்ள வைட்டமின் இ சத்தானது நரம்புகளுக்கும், தசைகளுக்கும் வலுவைத் தர உதவுகிறது’ என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ சத்து குறைபாட்டால் பலர் உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்னைகளைத் தடுக்க இந்த பொன்னிற உருளைக்கிழங்கை பயன்றபடுத்தலாமா என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

- கௌதம்