வயதில் மூத்தவர்களை விரும்புவது ஏன்?



கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

‘‘காமம் வாள் வீசத் துவங்கினால் மனிதர்கள் வரைந்து வைத்திருக்கும் அத்தனை எல்லைக் கோடுகளும் இடம் காணாமல் போய்விடுகிறது. அந்த அம்புகள் எந்தக் கண்களில் புறப்பட்டு எந்தக் கண்களில் முடியும் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. அப்படி ஒரு முரண்தான் வயதில் மூத்த ஆணையோ, பெண்ணையோ டீன் வயதினர் விரும்புவதும்’’ என்கிறார் உளவியல் மருத்துவரான ரமேஷ் கண்ணா.

யாரிடமும் எந்த அனுமதியும், அபிப்பிராயமும் கேட்காமல் ஒரு சர்வாதிகாரியாய் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது காமம். நம் கட்டுப்பாட்டில் காமம் இல்லாமல், அதன் கட்டுப்பாட்டிலேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உள்ளே பொங்கிப் பெருகும் கடலை அடக்கி வைத்திருப்பதாய் அலைபாய்கிறோம்.

ஹார்மோன்கள் மெல்லத் தலைகாட்டி தன் அந்தரங்கப் போருக்கான ஆயத்தங்களைச் செய்யும்போது ஏற்படும் மனக்குழப்பங்களுக்கு சிறிதும் எல்லை இல்லை. பருவமடைதலுக்குப் பின் உடலும் மனமும் மெருகேறி புதுவிதமாய் மாறும். ஒரு பூஞ்சோலைக்குள் நுழைந்து விட்டதைப் போல மனம் வாசனை உணரும். எதிர்ப்பாலின் மீதான வசீகரம் அதிகமாகும். இதெல்லாம் நடந்தே தீரும்.

பாலியல் தேடலும், எதிர்ப்பால் சீண்டலும் மனதைச் சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் அணைகளைப் பொத்தலிட்டு வடியச் செய்யும். இவனிடம் ஏன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறேன். இவன் தொடும்போது என்னுடல் கூச்சம் அவிழ்த்து மலர்வது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் மனம் வீழ்ந்து கொண்டிருக்கும்.

இதுபோல் சம வயது ஆண், பெண்ணுக்கு தங்களது எதிர்ப்பாலினரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இன்று வயது, உறவு என்று பலவித முரண்பாடுகளையும் உடைத்து துவம்சம் செய்துவிடுகிறது காமம். முன்பு சாலையோரங்களில் ரகசியமாய் விற்கப்பட்ட சரோஜாதேவி கதைகள் முதல் இன்றைய ஆன்லைன் செக்ஸ் கதைகள் வரை அத்தனையும் இந்த முரண்பாடான உறவில் பாலின்பத்தில் திளைப்பது போன்ற அனுபவங்களையே கடை விரிக்கிறது.

இன்றைய ஆணோ பெண்ணோ பாலியல் குறித்துத் தெரிந்துகொள்ள கதைகள், வீடியோக்கள் என்று எதைத் திறந்தாலும் இந்த வயது முரண் உடைப்புகளே அதிகம் காணப்படுகின்றன. இப்படியான உறவுநிலைகளில் பாலியல் இன்பம் அனுபவிப்பதான வெளிப்பாடுகள்தான் சுவாரஸ்யம் போல என்று பதின் பருவத்தில் இருப்பவர்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள். பாலியல் புத்தகங்கள், வீடியோக்கள் போன்ற தவறான கருத்துக்களின் திணிப்பு இதன் முதல் காரணம்; சமூகரீதியிலான காரணம்.

சரி... உளவியல் என்ன சொல்கிறது?

உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃப்ராய்ட் இதற்கு வேறு காரணம் உண்டு என்று முன்பே சொல்லியிருக்கிறார்.‘இது குழந்தைப் பருவத்திலேயே ஒருவரிடம் உருவாகிவிடுகிறது. தாயின் அன்பு முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று ஒரு மகன் முயற்சிப்பதை எடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus complex) என்கிறோம். தந்தையின் அன்பை தனக்கானதாக உரிமை கொண்டாடும் மகளின் அன்புக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்(Electra complex) என்று பெயர். அன்பின் காரணமாக குழந்தைப் பருவத்தில் உருவாகும் இந்த ஆழ்மன எண்ணங்கள் புற மனதை அப்போது எட்டுவதில்லை.

அதுவே வளர்கிற பருவத்தில் வயதில் மூத்த அன்பான பெண்ணிடமோ, ஆணிடமோ பழகும்போது அது காமமும் கலந்த அன்பாகிவிடுகிறது.
வயது முதிர்ந்த பெண்ணிடம் கிடைக்கும் தாய்மை கலந்த அன்பை இளம் வயது ஆண்கள் விரும்புகிறார்கள். தன்னுடைய தாயிடம் கிடைத்தது போன்ற ஓர் அன்பு அது என்று நம்புகிறார்கள்.

ஆனால், அந்த அன்பு காதல் கலந்து, கடைசியில் காமமும் கலந்துவிடுகிறது. இளம்பெண்கள் தங்கள் தந்தையிடம் கிடைத்தது போன்ற ஒரு பாதுகாப்புணர்வும், நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்று வயது முதிர்ந்த ஆண்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள். இந்த இரண்டும் எடிபஸ் காம்ப்ளக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளக்ஸின் வேறொரு வடிவம்தான்.

குறிப்பாக, வளர் இளம் பருவக் குழந்தைகளுக்கு அன்பு வீட்டில் கிடைக்காதபோது, படிப்பு, நடத்தை என பருவ மாற்றங்களுக்கான குழப்பங்கள் நிகழ்கிறபோது அந்த அன்புக்கான ஏக்கம் அதிகரிக்கிறது. இந்த அன்பு வெளியிடத்தில் தன்னை மூத்தவர்களிடம் இருந்து கிடைக்கும்போது மனம் அதற்குக் கட்டுப்படுகிறது. ஆழ்மன ஏக்கங்கள் புறச் செயல்களால் தூண்டப்பட்டு பாலுறவு வரை வைத்துக் கொள்வதை இவர்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் ஃபிராய்ட்.

அதாவது ஆணுக்கோ, பெண்ணுக்கோ பொதுவான ஈர்ப்பு விதி உள்ளது. மகன் தாயிடம் பேரன்பு கொள்வதும், மகள் தகப்பனிடம் பிரியம் காட்டுவதும் இயல்பானது. இதன் அடுத்தகட்டமாகவே தன்னை விட வயதில் மூத்த எதிர்ப்பாலினத்தவர் மீது அன்பு காதலாகி பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்துவது வரை இன்று நடக்கிறது. இந்த ஈர்ப்பு பதின் பருவத்தினரிடம் அதிகம் உள்ளது.

பருவம் அடைந்த பெண் குழந்தைகள் தன் தந்தை வயதில் உள்ள ஆசிரியர், ஆட்டோ டிரைவர், டியூஷன் மாஸ்டர் என அதிகம் பழகும் நபர்களுடன் காதல் வயப்பட்டு அவர்களைத் திருமணம் செய்து கொள்வது வரை நடக்கிறது. தன்னை விட 15 வயது மூத்த ஆண் காதலிப்பதாக சொன்னால் கூட அதனை ஏற்றுக் கொண்டு திருமணமும் செய்து கொள்கின்றனர்.

பதின் பருவத்தினரின் விருப்பத்துக்கு ஏற்ப யார் இருக்கிறார்களோ அவர் மீது இனம் புரியாத அன்பு மனதுக்குள் உருவாகிவிடுகிறது. அவர்களும் அன்புக்காக ஏங்கிக் கிடப்பவர்கள் எனில் இளவயதினரிடம் அவருடைய அன்பு பரஸ்பரம் பரிமாறப்படும். வயது குறைந்தவர்களிடம் அன்பு பாராட்டுகிறவர்களின் உளவியல் இது.

அன்பும், ஈர்ப்பும், ஹார்மோன் கலாட்டாக்களும் தனக்கான சூழல் வாய்க்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள மனம் தூண்டும். தூண்டல் தீண்டலாகும். தீண்டலின் இன்பம் திரும்பத் திரும்ப வேண்டும் என்ற வேட்கையை மனதுக்குள் கடைசியில் ஏற்படுத்தும். அன்புக்கான தேவையே இதுபோல் முரண்களைத் தகர்த்து ஈர்ப்பின் ஆதியாகிறது. 

தன்னிடம் அன்பாகப் பேசி தன்னைப் பற்றி விசாரிப்பவர்கள் பக்கமாக மனம் சாய்வதால் இதுபோன்ற உறவுகளை பதின் பருவத்தினர் விரும்புகின்றனர். இன்றைய சூழலில் புதுமணத் தம்பதியர் கூட ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இருவரும் வேலைக்குச் செல்வதும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

அதிலும், தான் முழுத் தகுதியோடு இருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள இதுபோன்ற வயது மூத்தவரிடம் உறவில் ஈடுபட இளவயது ஆண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தன்மேல் அக்கறை எடுத்து அன்பு காட்டும் தன்னை விட வயதில் மூத்த பெண்களிடம் நட்பில் துவங்கி காமம் கடந்து அதிலிருந்து வெளியில் வர முடியாமல் கடைசியில் அடிமையாகிவிடுகின்றனர். இதனால் அவர்கள் ஆண்மைத் தன்மை குறைந்து போகும் என்பதைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருப்பதில்லை. எதிர்காலத்தை அழித்து நிகழ்கால சந்தோஷத்தில் மட்டுமே மகிழ்கின்றனர்.

வயது முதிர்ந்த பெண்களோடு உறவு கொள்வதால் விரைவில் வயதான மனம் மற்றும் உடல் நிலையைப் பெறவும் இது காரணமாகிறது. இதேபோல், வயது மூத்த ஆண்களிடம் உறவு கொள்கிற பெண்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைக்கும் அபாயமும் உள்ளது. சிறு வயதில் மூத்த வயதினருடன் உடலுறவு வைத்துக் கொள்பவர்கள் திருமணத்துக்குப் பின் தன் இணையுடன் தாம்பத்ய உறவில் பல்வேறு சிக்கல்களையும் சந்திக்கின்றனர். முழுமையான மகிழ்வைக் கொண்டாட முடியாத குற்ற உணர்வு உள்ளிட்ட மனக்குழப்பங்களுக்கும் ஆளாகின்றனர்.

அதேபோல பருவ வயது ஆண்கள் தனது ஆசிரியை, பக்கத்துவீட்டு பெண் போன்றவர்களிடம் பாலுறவு வைத்துக் கொள்வதும் நடக்கிறது. ஆனால், இதுபோன்ற முரண் உறவுகளை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. மருத்துவ உலகமும் ஏற்றுக் கொள்வதில்லை.

இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு ஆழ்மன ஆய்வுகள் நடத்தி காரணம் கண்டறிந்து பின் நடத்தை மாற்றத்துக்கான உளவியல் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய அன்பை மனதுக்கு மருந்தாக்கும்போது இதுபோன்ற மனச்சிக்கல்களில் இருந்து விடுவிக்கலாம்.

அதனால், வயதுக்கு மூத்த ஒருவரின் மேல் வரும் ஈர்ப்பும் இயல்பானது அல்ல; பல மடங்கு வயது குறைந்த ஒருவரிடம் வரும் அன்பும் இயல்பானது அல்ல. இரண்டுமே தவிர்க்க வேண்டியவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அதுபோல் மன ஓட்டங்கள் வந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

( Keep in touch... )

எழுத்துவடிவம்: கே.கீதா