மன அழுத்தத்தாலும் உடல்பருமன் வரும்



‘‘உடல்பருமன் என்பது உணவின்காரணமாக ஏற்படுகிறது என்பதே பரவலான எண்ணம். ஆனால், ஒருவருடைய மனநிலை மாற்றங்களும் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் லீனா ஜஸ்டின்.

மனநிலை மாற்றம் உடல் பருமனை எப்படி ஏற்படுத்துகிறது?

‘‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழல்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இந்த மன அழுத்தம் ஏற்பட்டாலே ஒருவருக்கு உடல் பருமன் தோன்றவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழக்கத்துக்கு மாறான உணவுப்பழக்கம் இருக்கும்.

உணவில் குறைந்த அளவு எடுத்துக் கொள்பவராக இருந்தாலும் அடிக்கடி நொறுக்குத்தீனிகள் எதையேனும் அசைபோட்டுக் கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பார். இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தத்தின் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே!’’

மன அழுத்தத்தால் எடை குறையவும் வாய்ப்பு உள்ளதா?

‘‘உடல் பருமன் எவ்வாறு ஏற்படுகிறதோ அதே போல் மன அழுத்தத்தால் உடல் எடை குறையவும் நிச்சயம் வாய்ப்புள்ளது. உணவின் மேல் வெறுப்பு ஏற்படலாம் அல்லது எதையும் உண்ண விரும்பாமல் அதிகளவில் எடை இழப்பு ஏற்படலாம்.மன அழுத்தத்தால் ஒருவருக்கு ஏற்படும் Serotonin ஹார்மோன் சுரப்பானது அதிகரிக்கிறது.

இதனால் உணவின் மேல் அதிக விருப்பமோ அல்லது வெறுப்போ ஏற்படுவதால் உடல் பருமன் ஏற்படவோ அல்லது உடல் எடை குறையவோ வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் இதுபோல் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது அவர் தனது பிரச்னைகளை கலந்தாலோசிக்க யாரும் இல்லாதபோது எந்த நேரமும் சாப்பிடுவது, எதையேனும் அசைபோடுவது போன்ற பழக்கம் தானாகவே வந்துவிடும்.’’

மன அழுத்தத்தால் ஏற்படும் உடல் பருமனை எவ்வாறு குறைப்பது?

‘‘முதலில் உடல் பருமன் என்பது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும். ஒருவர் தனக்குப் பிடித்த உணவுகளை, இனிப்புகளை அதிகமாக உண்ணும்போது உடல் பருமன் ஏற்பட்டால் அது வழக்கமானது. அதனை உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கலாம். இது தவிர்த்து பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் சிறிது இடைவெளிகூட விடாமல் எதையேனும் கொறித்துக் கொண்டே இருப்பது மன அழுத்தத்தின் அறிகுறியே.’’

மன அழுத்தத்திலிருந்து மனதையும் உடலையும் காப்பாற்றுவது எப்படி?

‘‘ஒரு குறிப்பிட்ட வேலையோ அல்லது பணிச்சுமையின் காரணமாகவோ மன அழுத்தம் ஏற்பட்டால் அது சிறிது நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால், அது சரியாகாமல் பணிச்சுமை தொடருமாயின் மன அழுத்தம் தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. எதிலும் கவனம் செலுத்த முடியாமல், ஒரு சிறு பிரச்னைக்குக் கூட தன்னால் ஒரு சரியான முடிவு எடுக்க முடியாமல் இன்னொருவரின் உதவியை நாடும்போதே நம் மன அழுத்தமானது அதிகமாகியுள்ளது என்பதை அறியலாம்.

அந்த நிலையில் அவருக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் தேவைப்படுகிறது. தன் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ இதை கூறி இவற்றிலிருந்து வெளிவர முயற்சிக்கலாம்.

முடியாத பட்சத்தில் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ஒருவர் தொடர்ந்து உணவு கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் சரியான கவனம் செலுத்த முடியாமல் திணறும்போதே அவராலும் அதை உணர முடியும்.’’

வீட்டில் இருக்கும் பெண்களின் சமீபகால உடல் பருமனுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?

‘‘உளவியல்ரீதியாக மட்டுமல்லாமல் பொதுவாகவே பெண்களுக்கு தனிமை ஒரு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் எனில் நண்பர்கள் மற்றும் வெளியாட்களிடம் பழகவும், தனது கருத்தை பரிமாறிக் கொள்ளவும் முடியும். நண்பர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டே ரசித்து உணவு உண்ண முடியும்.

ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள்தான் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தாலும் அதை வெளிப்படுத்தவோ, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவோ அருகில் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்கள் தொலைக்காட்சியுடன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். உணவு உண்ணும்போதும், வீட்டு வேலைகளை கவனிக்கும்போதும் என எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்தபடி இருப்பதால் அவர்களையும் அறியாமல் அளவு தெரியாமல் அதிகமான உணவுகளை உண்ணுகின்றனர்.

நெடுநேரம் கழித்தே அவர்களுக்கு வயிறு நிரம்பியது புரியும். ஆனால், அதற்குள் அவர்கள் அதிகப்படியான உணவை உண்டு முடித்திருப்பார்கள். இதுவும் முக்கியக் காரணமே. இதற்கும் முறையான மருத்துவ ஆலோசனை தேவை.’’குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் பிரச்னை பற்றி?

‘‘இன்றைய கால குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலாக இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் தனக்கு பள்ளியில் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் ஏற்படும் அனைத்து விஷயங்களையும், பிரச்சனைகளையும் சொல்லிக்கொள்ள இடமில்லாத போது அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அப்போது அவர்கள் உணவு விஷயங்களில் அதீத கவனம் செலுத்துகின்றனர். பெற்றோர்களும் நாள் முழுக்க குழந்தையைப் பிரிந்து இருப்பதால் அந்தப் பிரிவின் கடினம் தெரியாமல் இருக்க அவர்கள் விரும்பியதை எந்த உணவாக இருந்தாலும் அதன் நன்மை தீமை பற்றி யோசிக்காமல் வாங்கிக் கொடுக்கின்றனர்.

இந்தப் பிரச்னையானது பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. காரணம், வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்கள் வேலை முடித்து வந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது தாயைப் பிரிந்திருந்த அந்த மன அழுத்தத்தில் வயிறு நிரம்பினாலும் அளவுக்கதிகமாக பால் குடித்துக் கொண்டே இருக்கும். தாயிடம் பால் அருந்தும்போது தான் பாதுகாப்பாக இருப்பதாக உணரும். இது போல் பிறந்த குழந்தைகளுக்கும் கூட மன அழுத்தமானது ஏற்படும்.’’

இதற்கு எளிதான தீர்வு என்ன?

‘‘பதற்றமான மனநிலையில் இருக்கும்போதுதான் நொறுக்குத்தீனிகளையும், ஜங்க் ஃபுட் உணவுகளையும் மனம் விரும்புகிறது. அமைதியான மனநிலையில் இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளே போதும் என்று நினைப்போம். இதுதான் அடிப்படை.

அதனால், மனதைக் கட்டுப்படுத்தினால்தான் உணவைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, யோகா, தியானம், மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பது போன்ற மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அப்போது ஆரோக்கியமான உணவுப்பழக்கம் தானாகவே வந்துவிடும். நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தால் டயட்டீஷியனின் ஆலோசனையைப் போல உளவியல் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை.’’

- மித்ரா