டியர் டாக்டர்
தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையாக இருக்கும் டெங்குவை மையப்படுத்தி, சிறப்புமிக்க இரு வேறு மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் ஒரு தெளிவு தந்திருப்பது மகத்தான மருத்துவப் பணி. ‘நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சைகள்’ கவர் ஸ்டோரி, நம்மிடையே பரவ சில நாட்களாவது ஆகக்கூடியது என்றாலும், நல்லதை உடனே எடுத்துக் கொண்டு அதன் பயன்களை அனுபவிக்க வேண்டும்.

எண்ணெய்க் குளியல், ஆனந்தமான தீபாவளி, தீபாவளி லேகியம்... இந்த மூன்றும் எதிர்பாராமல் நீங்கள் வாசகர்களுக்குக் கொடுத்த தீபாவளி போனஸ்..!
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

ஆங்காங்கு விற்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கும்போது, அந்த இடங்கள் சுத்தமாக, சுகாதாரமாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்கி உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கையை வடகிழக்கு பருவ மழை தலைகாட்டத் துவங்கி இருக்கும் சமயம் பார்த்து சொல்லிய ‘குங்குமம் டாக்டருக்கு’ நன்றிகள் பல!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பாதத்தில் மூன்று வகைகள் இருப்பதையும், அதற்கேற்ற காலணிகள் வாங்க வேண்டும் என்பதையும் தெரிந்து வியந்து போனேன். பொருத்தமில்லாத காலணிகள் ஒரு மனிதரின் Posture-ஐ பாதிக்கும் என்ற தகவலும், எப்படி காலணிகள் வாங்க வேண்டும் என்றும் வழிகாட்டியிருந்தார் எலும்பு மூட்டு மருத்துவர் ராதாகிருஷ்ணன்.
- ஆர்.ராஜசேகர், கிண்டி-32.

உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கேற்ற உணவுகள் கட்டுரை பலருக்கும் பலன் தந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜிம்மில் கடினமான உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு மட்டுமின்றி வாக்கிங் போகிறவர்களுக்கும் உணவுமுறை பற்றி விளக்கியிருந்தது அருமை.
- சி.கோபாலகிருஷ்ணன், தாம்பரம்.

‘குங்குமம் டாக்டர்’ இதழ் வாங்கியதும் நான் படிக்கும் முதல் பகுதி ‘மூலிகை மந்திரம்’தான். நம்மைச் சுற்றி இருக்கும் பல மகத்துவமான மூலிகைகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது தொடர். பல்வேறு மூலிகைகளின் அருமையை விலாவாரியாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்கிறார் சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்.
- தமிழ்ச்செல்வம், செம்பாக்கம்.