ரிவர்ஸ்லயும் போகலாம் ஜாக்கிங் !



மாத்தி யோசி

‘ஜாக்கிங்னா முன்னாடிதான் ஓடணுமா... ரிவர்ஸ்லயும் போலாமே’ என்று மாத்தி யோசித்த ஒரு லேட்டஸ்ட் டிரெயினிங்தான் Backward running.இந்த Backward running முறையை பலநாடுகளில் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பின்னோக்கிய ஓட்டப்பந்தயங்களை மாரத்தான் போட்டிகளாகவே நடத்தி வருகிறார்கள்.

இதுபோல், பின்னோக்கி ஓடுவது வினோதத்துக்காகவோ, வேடிக்கைக்காகவோ அல்ல. ஆரோக்கியரீதியிலும் நிறைய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். உடற்பயிற்சி நிபுணர் அரசுவிடம் பின்னோக்கி ஓடுவது எந்த வகையில் நமக்குப் பலன் அளிக்கும் என்று கேட்டோம்...

‘‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜப்பானியர்கள் கடைபிடித்ததுதான் Backward running என சில வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறது. இதுபற்றி நவீன ஆராய்ச்சிகளும் நிறைய நடத்தியிருக்கிறார்கள்.26 பெண்களை வாரத்தில் 3 நாட்களுக்கு இதுபோல் Backward running முறையில் பின்னோக்கி ஓடவைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

15 முதல் 45 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த பயிற்சி 6 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதில் பலருக்கு அதிகமான உடல் எடை குறைந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இதுபோல் பின்னோக்கி ஓடும்போது முழங்காலுக்குக் குறைவான அழுத்தம் கிடைப்பதால், முழங்காலில் ஏற்படும் காயங்களும் கணிசமான அளவில் குறைவதாகவும் கூறுகின்றனர்.

மாரத்தான் போட்டிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் Backward running, Backward walking போன்றவை உடற்பயிற்சிகளாக நம்மூரிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சாதாரணமாக ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடும்போது ஒவ்வொரு அடியின்போதும் பின்புறம் மற்றும் பின்னங்கால்களின் தசைகளை அதிகமாக உபயோகிக்கிறோம். இதனால் அதிகப்படியான ஆற்றலும், முழு கவனமும் தேவைப்படுகிறது. கவனம் ஒருமுகப்படுவதால் ஒருவிதத்தில் நம்முடைய மன அழுத்தத்தை குறைக்க முடிகிறது.

சிலர் நிமிர்ந்த நிலையில் நேராக நடக்காமல் கூன் விழுந்தது போல் நடப்பார்கள். இதனால் சரியான தோற்றம்(Straight posture) இல்லாமல் இருக்கும். பின்னோக்கி ஓடுவதால், பின்புறம் மற்றும் பின்னங்காலின் தசைகளும், நரம்புகளும் வலுவடைவதால் நிமிர்ந்த நேரான தோற்றத்தையும் பெற முடியும்.

சாதாரணமான ஓட்டப்பயிற்சியின்போது எடை குறைப்பதற்காக நீண்ட தொலைவு ஓட வேண்டியிருக்கும். இதனால் விரைவிலேயே களைப்படைவதோடு ஆர்வமும் குறைய ஆரம்பிக்கும். இதுவே பின்னோக்கிய நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ எதுவாக இருந்தாலும் ஒருவித ஆர்வத்தோடு செய்வோம்.

மற்ற உடற்பயிற்சிகள் செய்வதால் தசைவலி, உடல்வலி ஏற்படும்போது சற்றே தொய்வடைந்து இடையில் நிறுத்திவிடுவோம். அதுபோன்ற நேரங்களில் இந்த பின்னோக்கிய ஓட்டப்பயிற்சியைத் தொடரலாம்.

இதைச் செய்வதால் தசைகளுக்கு எந்த வலியும் ஏற்படாது. இடுப்பு, பின்புறம், பின்னங்கால்கள் மற்றும் தோள்கள் நல்ல திண்மை பெற்று பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது.

இதற்காக கிரவுண்டுக்கோ, வெளியிடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே தோட்டம், மொட்டை மாடி போன்ற இடங்களிலும் செய்வதற்கு எளிதானது. ட்ரெட்மில்லில் இதுபோன்ற பயிற்சிகள் செய்யும்போது கவனமுடன் செய்வது அவசியம். இல்லாவிட்டால் தவறி விழுவதற்கும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார் அரசு.

- இந்துமதி

படம்: பரணி