கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு...



கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிகழ்கிற ஊட்டச்சத்துக் குறைபாடானது, அவளையும் அவளுக்குப் பிறக்கும் குழந்தையையும் பெரிதும் பாதிக்கும். பின்னாளில் குழந்தையிடம் பார்க்கிற பல பிரச்னைகளுக்கும் கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என்பது தெரிய வருகிறபோது காலம் கடந்திருக்கும்.கர்ப்பிணிகளுக்கு அவசியம் தேவைப்படுகிற தாதுக்கள் பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

உடலின் முக்கிய மூலப்பொருட்களில் தாதுக்கள் உள்ளன. சில தாதுக்கள் உடலின் செயல்பாடுகளை சீர்படுத்துபவையாகவும், தூண்டக் கூடியவையாகவும் விளங்குகின்றன.மிகக் குறைந்த அளவில் கிடைக்கக்கூடிய இந்தச் சத்துக்களுள் சில உடலில் அதிகளவில் காணப்படுகின்றன.

மற்றவை பெறப்படுகிற மூலப் பொருட்கள் அல்லது மிகக் குறைந்த ஊட்ட உணவுகள் எனப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், துத்தநாகம், சோடியம் போன்றவையெல்லாம்கூட தாதுப் பொருட்கள்தான். கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், துத்தநாகம், சோடியம் ஆகியவை கர்ப்ப காலத்தில் தேவைப்படும் முக்கியமான தாதுச் சத்துக்கள்.

கால்சியம்

எலும்பு மற்றும் பற்களின் முக்கியப் பகுதிப் பொருள் இது. இயல்பாக ரத்தம் உறைதல், தசையின் பரிணாமத்தை அதிகப்படுத்துதல், இதயத் துடிப்பை ஒழுங்குப்படுத்துதல் போன்ற உடலின் பிற செயல்பாடுகளிலும் இது பயன்படுகிறது.

கர்ப்ப காலத்தின் இறுதியில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு கால்சியம் குழந்தையின் உடலில் சேர்கிறது என்றாலும், பிற்காலத் தேவையை சமாளிப்பதற்காக தாயினுடைய அன்றாட கால்சியத் தேவை கர்ப்ப காலம் முழுவதும் அதிகரிக்கிறது.பனீர், முட்டை, கேழ்வரகு, காய்கறிகள் மற்றும் பால் ஆகியவை கால்சியம் சத்துள்ள மிக முக்கிய உணவுப் பொருட்கள். இரண்டு பெரிய டம்ளர் பாலில் மட்டும் 1200 மில்லி கிராம் கால்சியம் கிடைக்கிறது.

பாஸ்பரஸ்

உடலிலுள்ள எல்லா செல்கள் மற்றும் திசுக்களின் முக்கிய சேர்மானமாக பாஸ்பரஸ் விளங்குகிறது. பாலிலிருந்து அதிகளவு பாஸ்பரஸ் கிடைக்கிறது. இது புரதத்தின் கூட்டுப் பொருளாகவும் இருப்பதால், புரதச் சத்து உணவுகளான மீன், முட்டை, இறைச்சி, சீஸ், ஓட்ஸ், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உண்பதன் மூலம் பாஸ்பரஸ் சத்தைப் பெறலாம்.

இரும்புச்சத்து

ஹீமோகுளோபின் எனப்படும் ரத்தப் புரதத்தின் முதன்மையான கூட்டுப் பொருட்களுள் இரும்புச்சத்தும் ஒன்று. இந்தப் பொருள் ரத்தத்தின் வழியாக செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் பொறுப்பை வகிக்கிறது.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் தாயின் ரத்த சிவப்பணுக்களுக்காக ரத்தப் புரதத்தை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து தேவை. கர்ப்பக் காலத்தின் முதல் இரண்டு மூன்று மாதங்கள் குழந்தைக்கு மிதமான அளவு இரும்புச்சத்து மட்டும் பரிமாற்றம்செய்யப்படுகிறது.

ஆனால், கடைசி மூன்றாவது மாதத்தின் போது குழந்தைக்கு தேவைப்படும் இரும்புச்சத்தின் அளவு சுமார் 10 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே, தாயின் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், வெல்லம், பட்டாணி, பீன்ஸ், நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, சிவப்பு இறைச்சி, முட்டை மற்றும் நண்டு ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமுள்ளது.

அயோடின்

கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் மிகச் சிறிய அளவு அயோடின் மட்டுமே தேவை. இது நிலத்திலிருந்து பெறப்படுகிறது. இந்தியாவிலுள்ள நிலங்கள் அயோடின் சத்துக் குறைந்தவையாக இருப்பதால் இந்த நிலங்களிலிருந்து பெறப்படும் நீரும், அவற்றில் விளையும் காய்கறிகளும் அன்றாடத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதில்லை.அயோடின் கலந்த உப்பை தினமும் உணவில் பயன்படுத்துவது, அயோடின் குறைவால் ஏற்படும் எல்லாவிதமானக் குறைபாடுகளையும் தடுத்து விடுகிறது.

துத்தநாகம்

கர்ப்ப காலத்தின்போது துத்தநாகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. இதை குறைவாகச் சாப்பிட்டால் கருப்பையிலிருக்கும் குழந்தை குறை வளர்ச்சியுடன் பிறக்கக்கூடும். தவிர அதனுடைய வாழ்நாள் குறைந்து போகும் அபாயமும் ஏற்படும்.  பிறவிக் குறைபாடுகள் மற்றும்  நீண்ட நேரம் பிரசவ வலியால் துடித்தல் போன்ற பல்வேறு சிக்கல்களும் உண்டாகின்றன.

பால், மீன், முட்டையின் மஞ்சள் கரு போன்ற புரத உணவுகளில் போதுமான அளவு துத்தநாகச் சத்து உள்ளது. ஆகவே, தினமும் தேவைப்படும் புரதச்சத்து உணவை சாப்பிட்டாலே போதுமான அளவு துத்தநாகச் சத்தும் கிடைத்துவிடும்.

சோடியம்

கர்ப்பகாலத்தில் சோடியத்தின் தேவை மிகவும் அதிகரிப்பதாக பல மருத்துவப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கண்மூடித்தனமான வழியில் உப்புச்சத்தைக் கட்டுப்படுத்துவது சரியானதல்ல. பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்பக் காலத்தின் ஆரம்பக் கட்டத்திலிருக்கும் நோயாளிகளுக்கு, சுவைக்காக, போதுமான அளவில் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை சொல்வார்கள்.

உப்பின் அளவைத் தவிர்க்க வேண்டியவர்களுக்கும் அதற்கேற்ப மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி, உப்பில் கட்டுப்பாட்டைப் பின்பற்றச் சொல்வார்கள்.நீர்மனித உடலில் மூன்றில் ஒரு பங்கு நீரால் நிறைந்துள்ளது.

ஜீரணமாவதற்கு அவசியமான முக்கிய கரை பொருளாகவும்,  செல்களுக்கு ஊட்டச்சத்து கடத்தப்படுவதற்கும், உடலிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தவும் நீர் பயன்படுகிறது. தினமும் சராசரியாக ஆறு முதல் எட்டு டம்ளர் வரை தண்ணீரை குடிக்க வேண்டும். இனிப்பு சேர்க்காத பழச்சாறுகளும் அவசியம்!

- ராஜி