டயாபட்டீஸ் ஸ்பெஷல்



சர்வதேச அளவில் தற்போதைய நிலவரப்படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. அதாவது, 6. 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10. 9 கோடியைத் தாண்டக்கூடும் என்கின்றன பல ஆய்வுகள். அப்படிப் பார்த்தால் நம்மில், 5 ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருப்பார்.

இது நம்முடைய தனிப்பட்ட பிரச்னை மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியையே முடக்கிப்போடும் பிரச்னை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

நீரிழிவு பற்றி எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும் நீரிழிவு நோயாளிகளுக்கான எளிய சோதனைகள், புதிய சிகிச்சைமுறைகள், மருந்துகள் பற்றி இன்னும் போதுமான தெளிவு நம்மிடம் இல்லை. நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ராம்குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்…

‘‘நீரிழிவு நோயாளிகளி–்ல் டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு, மரபியல் நீரிழிவு என பல பிரிவுகள் உண்டு.டைப் 1 நீரிழிவு சிறுவயதினருக்கு வரக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு அறவே இல்லாததால், இவர்களைப் பொறுத்தவரை இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு. மாத்திரைகள் மூலம் இவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது கடினம். இவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், புதுப்புது இன்சுலின் வகைகள் சந்தைக்கு வந்துவிட்டது.

 இதற்கு முன்பு வந்த இன்சுலின் ஊசிகள் போடும்போது மட்டும் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பிருந்தது. ஆனால், இப்போது வந்துள்ள இன்சுலின் ஊசிகள், உணவு உண்ட பிறகு சர்க்கரை கூடும் நேரத்தில் சரியாக வேலை செய்யத் தொடங்கும் வகையில் இருக்கிறது. இன்சுலினில் Insulin lispro, Insulin Aspart, Glulisine என 3 வகைகள் உள்ளன.

1 முதல் 3 மணிகளில் செயல்படத் தொடங்கி 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நீடிக்கும் இடைநிலை செயல்படும் இன்சுலின் (Insulin NPH) ; 1 மணி நேரத்தில் செயல்பட ஆரம்பித்து 20 முதல் 26 மணி நேரம் வரை நீண்ட நேரம் செயல்படக்கூடிய Insulin Glargine, Insulin detemir வகைகள் வந்திருக்கின்றன. இவை முன்பே வந்திருந்தாலும்கூட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் சமீபகாலமாக அதிகம் புழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஒருவரின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்றவாறு மருத்துவர் பரிந்துரைக்கும் இன்சுலின் ஊசிகளையே பயன்படுத்த வேண்டும்.உடலினுள் இன்சுலின் செலுத்துவதற்கும் பேனா, பம்ப் போன்றவை இருக்கிறது.

இன்சுலின் பம்ப் (Insulin Pump) முறை சமீபத்திய முன்னேற்றமாகும். சிறிய அளவில் மொபைல் போன் போல இருக்கும். இன்சுலின் கேட்ரெஜ்ஜை ஒரு பேட்டரியால் இயக்கக்கூடிய குழாய் மற்றும் இன்சுலின் சரியாக செலுத்துவதை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் சிப் ஆகியவற்றால் ஆனதுதான் இந்த இன்சுலின் பம்ப்.

இதன்மூலம் உடலில் எப்போதெல்லாம் இன்சுலின் உற்பத்தி குறைகிறதோ அதற்கேற்றவாறு திட்டமிடப்பட்ட நிலையான விகிதத்தில் உடலினுள் இன்சுலின் செலுத்தப்படுகிறது. அடிக்கடி சர்க்ரை ஏற்றத்தாழ்வு இருப்பவர்கள், கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவே முடியாதவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

டைப் 2 நீரிழிவைப் பொறுத்தவரை மாத்திரைகள், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் எடைகுறைப்பு போன்ற வாழ்வியல் மாற்றங்களிலேயே சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இவர்களுக்கு கணையத்தின் மீது செயல்படக்கூடிய, இன்சுலின் சுரப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் Sulphpnylureas போன்ற  மருந்துகள், கல்லீரலிலிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் அளவை குறைத்து உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தும் Metformin மருந்துகள், இன்சுலினுக்கு தசை, கொழுப்பு செல்கள் உணர்வை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய Thiazolidinediones வகையைச் சார்ந்த Avandia and Actos மருந்துகளை Metformin மற்றும் Sulphpnylureas மருந்துகளோடும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து, கார்போஹைட்ரேட்டை குளுக்கோசாக உடைக்கும் Alpha Glucosidas மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் சாப்பிட்டபிறகு அதிகரிக்கும் உயர் குளுக்கோஸ் அளவை தடுக்கப்படுகிறது. 2006 முதல் Gliptin அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைப்பதோடு, உடல் எடை கூடாமலும் தடுக்க 5 வகையான Gliptin மருந்துகள் பரிந்துரைக்கிறோம்.

சமீபத்தில் SGLT 2 Inhibitors (Sodium Glucose Cotransporter 2(Gliflozins) மருந்துகள் மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக வேலை செய்பவை. அதாவது மற்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் அல்லது வேலை செய்ய வைக்கும். ஆனால், இது உடலில் அதிகரிக்கும் குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். உடல் பருமனாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது.

டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு தவிர, மரபியல் ரீதியான நீரிழிவு நோயும் உண்டு. இதை கவனிக்காமல் சில குழந்தைகளுக்கு தவறுதலாக டைப் 1 நீரிழிவு சிகிச்சைக்காக கொடுக்கப்படும் இன்சுலின் ஊசியை தொடர்ந்து செலுத்தி வருபவர்கள் உண்டு. முறையாக கண்டறிந்து, மாத்திரை மூலமாகவே இவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.’’

இன்சுலின் ஊசி அல்லது வாய்வழி மாத்திரைகள் இரண்டில் எது பாதுகாப்பானது?

‘‘டைப் 1 டயாபட்டீஸுக்கு இன்சுலின் ஊசி மட்டும்தான் தீர்வு. அதில் சந்தேகமே இல்லை. இன்சுலின் ஊசியைப் பற்றிய பலவிதமான சந்தேகங்களும், பயமும் அனைவருக்கும் இருக்கிறது.

ஊசி போட்டுக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடுவோமோ, வாழ்நாள் முழுவதும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்குமோ என்று பயந்து மாத்திரைகளையே சாப்பிட்டு ரத்த சர்க்கரை அதிகமாகி கோமா வரை போனவர்களும் உண்டு.

ஊசி போட்டுக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும் பயப்படுகிறார்கள். தற்போது உடல் எடையை கூட்டாது, சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய மருந்துகள் வந்துவிட்டன. அதேபோல், எடுத்தவுடன் எல்லோருக்கும் இன்சுலின் ஊசியை மருத்துவர் பரிந்துரைக்க மாட்டார். 4 வகையான காரணங்களுக்காக இன்சுலின் ஊசி போடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

முதலாவதாக கட்டுப்பாடே இல்லாமல் ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகும்போது, சில நேரங்களில் 2, 3 மாத்திரைகள் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்போதும் இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அந்த தருணங்களில் ஒரு இரண்டு வார காலத்துக்கு இன்சுலின் ஊசி எடுத்துக் கொண்டு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்பு, மீண்டும் மாத்திரைகளைத் தொடரலாம். பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவதாக, ஒருவருக்கு நிமோனியா போன்ற ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும்போது, ரத்த சர்க்கரை அளவை உடனடியாக இன்சுலின் ஊசிபோட்டு குறைத்துவிட்டு நோய்த்தொற்று குறைந்தபிறகு மீண்டும் மாத்திரைக்கு மாறலாம்.

மூன்றாவதாக, ஏதேனும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் உணவு எடுத்துக்கொள்ள முடியாதபட்சத்தில், மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்கு இன்சுலின் ஊசி கட்டாயமாகிறது.

நான்காவதாக, நீண்ட வருடங்களாக டைப் 2 நீரிழிவு நோய் இருந்து, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாத்திரைகள் வேலை செய்யாமல் சர்க்கரை அளவு கட்டுப்படாது. ஆரம்பத்தில் மாத்திரைகள் நன்றாக சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் தோன்றினாலும், போகப்போக அதிகரிக்கும்.

இன்சுலின் சுரப்பே முழுவதுமாக நின்றுவிட்டால், இன்சுலின் ஊசிக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது கருவில் உள்ள சிசுவுக்கும் பரவ வாய்ப்புண்டு. இவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர, மற்ற நேரங்களில் இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை.

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் வீட்டிலேயே அவ்வப்போது சர்க்கரை அளவை சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி துளையிட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே தற்போது சுகர் மானிட்டர் (Continuous Sugar Monitor) வந்துவிட்டது.

ஒரு ரூபாய் காயின் அளவிற்கு இருக்கும் இதை உடலில் பொருத்திக் கொண்டால், எப்போதும் பதிவாகிக்கொண்டே இருக்கும். யாருக்கெல்லாம் சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்குமோ அவர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

இதன்மூலம் தாங்கள் எந்தெந்த உணவை, எந்த அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கூடுகிறது என்பதை கண்காணித்து, தங்கள் உடலைப் பற்றிய முழு புரிதலுக்கு வர உதவும். இதையும் மருத்துவரின் அறிவுரைப்படியே உபயோகப்படுத்த வேண்டும்.

இருப்பதிலேயே சிறந்ததும் எளியதுமான இன்சுலின் பம்ப் சிகிச்சை செலவு கூடுதல் என்பதால், சில மாநிலங்களில் அரசாங்கமே டைப் 1 டயாபட்டீஸ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக அளித்து வருகிறது. நம் தமிழ்நாட்டிலும் இந்த சிகிச்சையை இலவசமாக தரும்பட்சத்தில் ஏழைமக்களும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை !’’

- உஷா நாராயணன்