டெங்கு காய்ச்சலுக்கு மருந்து !‘‘சமீபகாலமாக நகரம், கிராமம் என எந்தவித வேறுபாடு இல்லாமலும் டெங்கு தனது கொடிய கரங்களைக் கொண்டு, பச்சிளம் குழந்தை தொடங்கி முதியோர்கள் வரை எண்ணற்ற உயிர்களைப் பறித்தவண்ணம் உள்ளது.

இந்த டெங்கு காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. அதற்குரிய மருந்துகள் வந்துவிட்டது’’ என்கிறார் டெங்கு காய்ச்சலுக்கான மருந்து தயாரிப்பு ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தவரான டாக்டர் மணிவண்ணன்.அவரிடம் டெங்கு காய்ச்சல் பற்றியும், மருந்துகள் பற்றியும் கேட்டோம்...

‘‘15 வருடங்களுக்கு முன்னால், கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுபட பல வகையான சுருள்களைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர், இரவு நேரங்களில் கொசுக்களை விரட்ட மேட்(Mat), க்ரீம், லிக்யூட் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக உபயோகத்துக்கு வந்தன. ஆனாலும், கொசுக்களின் தொல்லை ஒழிந்தபாடில்லை.

அதற்கு மாறாக, நாளுக்குநாள் கொசுக்களின் கூட்டம் அழிக்க முடியாத அளவிற்கு வீரியம் பெற்று, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக புடைசூழ உலா வரத் தொடங்கியது.

இந்த நிலையில் டெங்கு நோயைக் குணப்படுத்துவதற்கான சிரப் மற்றும் டேப்லெட் தயாரிக்கும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் பலனாக Juram NV, Juram-D ஆகிய சிரப் மற்றும் டேப்லெட் தயாரித்திருக்கிறோம். நிலவேம்பு, பப்பாளி இலை கலந்து செய்யப்பட்ட மருந்து இது.

பொதுவாக மருந்துகள் கசக்கும் என்று சிறுவர், சிறுமியர் உண்ண மாட்டார்கள். அதை கருத்தில் கொண்டு குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் தேன் கலந்து உள்ளோம். இந்த சிரப்பை 2 டீஸ்பூன் அளவுக்கு சிறுவர், சிறுமியருக்கு கொடுக்கலாம்.

பெரியவர்கள் 3 வேளை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். உணவு வேளைக்குப் பின்னர், 5 முதல் 7 நாட்கள் உண்ண வேண்டும். பல நாட்கள் இவற்றை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது’’ என்கிறார்.

டெங்கு - சில குறிப்புகள்

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் எஜிப்தி கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை.

ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண் வலி, வாந்தி, களைப்பு, இருமல் ஆகிய மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். மூட்டுவலி அதிகமாகும்.

டெங்கு ஐ.ஜி.எம், எலிசா, பி.சி.ஆர் ஆகிய பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உள்ளது தெரிய வரும். இந்த பரிசோதனைகளைச் செய்வதற்கு வசதி இல்லாத ஊர்களில் குழந்தையின் ரத்தத்தில் தட்டணுக்களின் அளவைத் தெரிந்துகொண்டு இந்த நோயை மறைமுகமாகக் கண்டுபிடிக்க முடியும்.

டெங்கு ஓர் உயிர்க்கொல்லி அல்ல. நூறில் 96 பேருக்கு நோய் சரியாகிவிடும். சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆகவே, டெங்குவுக்கு பயப்படத் தேவையில்லை.கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரை மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது.

- விஜயகுமார்