தொற்றுநோய்களுக்கு முடிவு கட்டுவோம்



முதியவர்களைத் தாக்கும் நோய்த்தொற்றுகளும், அதற்கான தீர்வுகளும் என்னென்ன என தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்...‘‘பெரும்பாலான முதியவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னையாக நிமோனியா காய்ச்சல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வயதாகும்போது உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறைந்துபோவதுதான்.

இரண்டாவது பிரச்னை சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று. இதற்கு முக்கிய காரணம், ஆண்களின் விரைப்பகுதியில் அமைந்திருக்கும். ப்ராஸ்டேட் என்ற உறுப்பு வயதாகும்போது அளவு பெரிதாவதுதான். அதனால், சிறுநீர் வரும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீர் வழிப்பாதையில் தடை ஏற்பட்டு கிருமிகள் தாக்கத்துக்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

பெண்களைப் பொறுத்தவரையில் வயதாகும்போது மாதவிடாய் நின்றுபோவதாலும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோனின் எதிர்ப்புசக்தி இல்லாமல் போய்விடுவதாலும் சிறுநீரகவழிப்பாதை சுருங்குவதாலும் சிறுநீரகத்தில் நோய்க்கிருமி தாக்குகிறது. மூன்றாவது பன்றிக்காய்ச்சல் தொற்றினாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். நான்காவது அக்கி அம்மை பிரச்னை. இதனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அதன் வலி மற்றும் வேதனையை முதியவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள்.

ஐந்தாவது பிரச்னையாக தற்போதைய காலங்களில் Antibiotic Resistant Bacteria கிருமிகள் அதிகமாக முதியவர்களிடத்தில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முதியவர்கள் ஒரு சில மருத்துவ காரணங்களால் மருத்துவமனைகளில் அடிக்கடி அனுமதிக்கப்படுவதாலும், ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உபயோகப்படுத்துவதாலும் இந்த ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் கிருமிகள் முதியவர்களைத் தாக்குகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவற்கு மருந்துகள் மட்டுமே உள்ளன.

மேற்கண்ட ஐந்து பிரச்னைகளையும் தடுப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, தடுப்பூசிகள். நிமோனியா காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் மற்றும் அக்கி நோய்களுக்கு நல்ல தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை முன்னரே எடுத்துக் கொண்டால் நோய்த் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தேவையில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதையும் குறைத்துக் கொண்டால் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் தாக்கத்தில் இருந்து அவதிப்படாமல் தடு்க்கலாம். முக்கியமாக, வயதானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் வந்தபின் அவதிப்படுவதைவிட நோய் வரும்முன் காப்பதே சிறந்தது’’.

- தோ.திருத்துவராஜ்
படம்: ஜெகன்