மருத்துவர்கள் போராடுவது நியாயம்தானா?



நாட்டு நடப்பு

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை என்ன ஆகும் என்பதைப் புரிய வைத்திருக்கிறது சமீபத்திய அனுபவம். முதலில் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு, அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் புறக்கணிப்பு என்று நாளுக்கு நாள் வேறுவேறு சிக்கலுக்குச் சென்ற மருத்துவர்களின் வேலை நிறுத்தம் 17 நாட்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரை அச்சுக்குச் செல்லும் நேரத்திலும் சில இடங்களில் மருத்துவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் நடந்துவருவதாகவே தெரிகிறது. ‘மருத்துவர்கள் தொழிலாளர்கள் அல்ல; அவர்கள் கடவுள் போல’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது போல, உயிர்காக்கும் கடவுளே மக்களின் உயிரோடு விளையாடலாமா என்றுதான் பலரது மனதிலும் கேள்விகள் எழுந்தது.

மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பொது மருத்துவருமான ரவீந்திரநாத்திடம் நோயாளிகளைத் தவிக்க விட்டு மருத்துவர்கள் போராடலாமா என்று கேட்டோம்...

‘‘தமிழ்நாட்டில் கடந்த 28 வருடங்களாக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்து வந்தது. இதனால் தற்போது தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிசெய்ய மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையும் இதன் காரணமாகக் கிடைத்து வருகிறது.

அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்கள் மீண்டும் அரசு மருத்துவமனைகளிலேயே ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதால் அரசு மருத்துவமனைகளின் சேவைத்தரம் உயரும். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பு மருத்துவர்களுடைய சேவை இலவசமாகக் கிடைத்து வருகிறது.

எனவே, முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மாநிலங்கள் அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்ற வகையிலும் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் எழுந்துள்ள இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு NEET நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டங்களைக் கொண்டு வருவதும் அவசியம். இதற்காகத்தான் போராடி வருகிறோம்.

எங்களுடைய போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் வரக்கூடாது என்பதற்காக, சுழற்சி முறையில் அனைவரும் போராடி வருகிறோம். மருத்துவர்களுக்கும் உணர்வுகளும், உரிமைகளும் உண்டு!’’ என்கிறார் ரவீந்திரநாத்.

- க.கதிரவன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்