எலும்பு பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு!



கவர் ஸ்டோரி

‘‘ஆண்,பெண் இருவரும் வயதாக வயதாக குறைவாக சாப்பிட தொடங்கு வார்கள். உடல் எடை அதிகரிக்க கூடாது என்பதற்காக, கால்சியம் அதிகம் உள்ள சத்தான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், யோகாசனம், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். இது போன்ற காரணங்களால் முதுமைப் பருவத்தில் எலும்புகள் பலவீனமடைந்துவிடும். பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாகவும் பலவீனமடையும்.

இதனால் 50 வயதுக்கு மேலே எலும்புகள் தேய்தல், மூட்டு, தோள்பட்டை மற்றும் இடும்பு எலும்பு பிசகுதல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும். நடக்கும்போதும், மாடிப்படி ஏறும்போதும், கழிவறைக்குச் செல்லும்போதும் பேலன்ஸ் தவறி கீழே விழுவார்கள். கண் பார்வை குறைபாடும் இதற்கு முக்கிய காரணம்.

எனவே, வீட்டில் முதியவர்கள் நடந்து செல்கிற வழிகளில் வழுக்குகிற மாதிரியான தரை விரிப்புகள் போன்ற பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவறை மற்றும் மாடி படிக்கட்டுகளில் பத்திரமாக அவர்கள் சென்றுவர தேவையான இடங்களில் கைப்பிடிகள் பொருத்துவது அவசியம். ஏனெனில், பேலன்ஸ் இல்லாமல் கீழே விழும் முதியவர்களால் உடனடியாக சுதாரித்து கொண்டு எழுந்திரிக்க முடியாது. இதனால் காயத்தின் பாதிப்பு அதிகமாகக் கூடும்.

எலும்பு முறிவு போன்ற காயங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிற ‘கீழே விழுதல்’ பற்றி முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். பெரும்பாலான முதியவர்கள் தூக்கமின்மைக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த மாத்திரையின் பாதிப்பு விடிந்த பிறகும் உடலில் காணப்படும். எனவே, தலைசுற்றல், மயக்கம் காரணமாகவும் கீழே விழ நேரிடும். மேலும் வயோதிகக் காலத்தில் குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவார்கள். இதனாலும் முதியவர்கள் கீழே விழுந்து அடிபட வாய்ப்புகள் அதிகம்.

எனவே, முதலில் கீழே விழாமல் இருக்க எப்படி பேலன்ஸ் பண்ணி நடக்க வேண்டும் என்பது பற்றி மருத்துவரிடம் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்பாராமல் கீழே விழுந்துவிட்டால் எலும்புகள் பாதிப்பு அடையாமல் பார்த்து க்கொள்ளும் வகையில் பேலன்ஸ் செய்யவும் மருத்துவர்கள் கற்றுத் தருவார்கள். நடைப்பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட எளிமையான யோகாசனங்கள், சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் செய்வதோடு உணவில் கால்சியம், வைட்டமின்-டி மற்றும் சி சேர்த்துக் கொள்வதால் வயோதிக காலத்தில் எலும்பின் நலனைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக மணிக்கட்டு, முதுகு, இடுப்பு, தோள்பட்டை ஆகிய இடங்களில்தான் காயம் அல்லது முறிவு ஏற்படும். அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை உண்டு. பெல்ட் போடுவது முதல் அறுவை சிகிச்சை வரை ஏதேனும் ஒரு முறையில் சரி செய்ய முடியும். அதன் பின்னர் பழைய மாதிரி நடக்க முடியும்!’’

பற்களைப் பாதுகாப்போம்!

பல் மருத்துவர் ராகேஷ்

‘‘பற்களில் ஏற்படுகிற பாதிப்புகளை முதியவர் பிரச்னை என்று எளிதாக ஒதுக்கி விட முடியாது. சிறுவயதில் இருந்தே பற்கள் பராமரிப்பு என்பது முக்கியம். மேலை நாடுகளில் பள்ளிப்பருவத்தில் இருந்தே பல் பராமரிப்பு பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வலி வந்தால்தான் பல் மருத்துவரிடம் போகிறார்கள். அதுவும் தாங்க முடியாத வலி ஏற்பட்ட பிறகு, பல்லைப் பிடுங்குவதற்குதான் அவரிடம் செல்கிறார்கள்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பற்களை சுத்தம் செய்து கொள்வது அவசியம். அப்போதுதான் ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். 20 வருடங்களுக்கு முன்பு சொத்தைப் பல்லை அகற்றிவிட்டு, புதிய பல் பொருத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. தற்போது சொத்தைப் பல்லை அகற்றாமலே குணப்படுத்த வேர்க் குழாய் சிகிச்சை(Root Canal Treatment) வசதி உள்ளது. இதில் பல் சொத்தைக்கு ஏற்றவாறு ஃபில்லிங் பண்ணும் முறையும் உண்டு. அதனால், பல் சொத்தை ஆரம்பிக்கும்போதே மருத்துவரிடம் சென்றுவிட்டால் வலி மற்றும் சீழ் வந்து அவதிப்படுவதைத் தடுக்கலாம்.’’

- விஜயகுமார்
படம்: ஆர்.கோபால்