முழுமை... பெருமை... இனிமை...



கவர் ஸ்டோரி

பிறைநிலவாகத் தொடங்குகிற வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையடைந்து மலரும் காலம் முதுமைதான். வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தைப்பருவம், வேகம் மட்டுமே கொண்டிருக்கும் இளமைப்பருவம், குழப்பத்திலும், சுமையிலும் கடக்கிற நடுத்தர வயது என்பதையெல்லாம் விட பெருமை மிக்கது முதுமைப் பருவமேதான்.

எல்லாம் கொண்டிருந்தும் மௌனம் காக்கும் நூலகம்போல வணங்கத்தக்கது முதுமைப்பருவம். மற்றவர் நலன் குறித்து அன்பு, அக்கறை பெருக்கெடுக்கும் இனிமையான காலமும் முதுமைதான். ஆமாம்... முதுமை என்பது சாபமல்ல... முதுமை என்பது வரம்.... தவம்!

வயதாகிவிட்டது என்று மனரீதியாகத் தாழ்வு மனப்பான்மை கொள்வதும், தளர்ந்துவிடுவதும் மட்டுமே நாம் செய்கிற மிகப்பெரிய தவறு. நம்பிக்கையோடும், பெருமிதத்தோடும் ஓர் இனிய சவாலாக முதுமையை எதிர்கொண்டால் நாம் முதுமையில் முழுமையாக முடியும்.

இது முதியோருக்கான கட்டுரை தொகுப்பு மட்டுமே அல்ல; வீட்டில் இருக்கும் முதியோர் பற்றிய புரிதலை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவதற்காகவும்தான்.நிபுணர்களின் ஆலோசனைகளோடு கற்றுக் கொள்வோம்... வாருங்கள்!

நரம்பியல் தொடர்பாக வயதானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும், அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் பற்றியும் ஆலோசனை அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் நாகராஜன்.‘‘வயதாவதையோ அதனால் ஏற்படும் விளைவுகளையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வதாலும், சின்னச் சின்ன ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை பின்பற்றி வருவதன் மூலமும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

பக்கவாதம், டிமென்ஷியா என்கிற மறதிநோய், நடுக்குவாதம்(Parkinson) என மூன்று பிரதான நோய்களே முதியோர்களை நரம்பியல் ரீதியாக அதிகம் தாக்குகின்றன. இந்த மூன்று பிரச்னைகளும் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.

பக்கவாதம்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதது போன்ற காரணிகளால் பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்தநாளங்களின் அடைப்பாலும், ரத்தநாளங்கள் வெடிப்பதனால் உண்டாகும் ரத்தக்கசிவாலும் பக்கவாதம் வரலாம்.
திடீரென்று கை கால்கள் ஒரு பக்கம் இழுத்துக் கொள்ளுதல், பேச முடியாத நிலை, கண் பார்வை பாதிப்பு போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள்.
 
குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பை ஊசி மூலம் அகற்றி கட்டுப்படுத்த முடியும். சிறிய அடைப்புகளினால் பக்கவாதம் ஏற்பட்டால் பிஸியோதெரபி பயிற்சி மூலம் ஒன்றிரண்டு மாதங்களில் இயங்க வைக்க முடியும். பெரிய அளவு அடைப்பு ஏற்பட்டால் அதைத் தீவிரமாக கவனிக்க வேண்டும். அதனால் ரத்த அழுத்தம், ரத்தக்கொழுப்பு, சர்க்கரை இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே பக்கவாத அரக்கனிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

டிமென்ஷியா

பழைய நினைவுகள் அனைத்தும் சரியாக இருக்கும். தற்போது நடந்தது, பேசியது, பார்த்தது அனைத்தையும் டிமென்ஷியா பிரச்னை கொண்டவர்கள் மறந்து விடுவார்கள். எந்தப் பொருளை எங்கு வைத்தோம் என்பதை மறந்து விடுவதோடு அதனை தேடிக் கொண்டே இருப்பார்கள். பேச்சில் தடுமாற்றம் இருக்கும். பழக்கப்பட்ட இடங்களுக்கே எப்படி போய்த் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள். வீட்டின் உள்ளேயே சமையலறை, பூஜை அறை, படுக்கை அறைகளைக் கூட மறந்து தடுமாறுவார்கள். டிமென்ஷியாவால் பெரும்பாலானவர்களுக்கு உளவியல் ரீதியிலான சிக்கலும் ஏற்படும். சிலருக்கு இது தூக்கமின்மையை அதிகரிக்கும்.

இதேபோல் டிமென்ஷியாவின் அடுத்தகட்டமான அல்ஸைமர் நோய்க்கு பிரதான காரணமாக அமிலோட் என்னும் புரதம் இருக்கிறது. இந்த புரதம் நரம்புப் பகுதிகளில் படிந்து, ஞாபக நரம்புகளைத் தாக்கி பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவும். டிமென்ஷியா அறிகுறிகளைப் போலவே பேச்சுத் திறன் குறைவு, வழிகள் பற்றிய தடுமாற்றம், பழக்கப்பட்ட விஷயங்களை மறப்பது போன்றவை வெளிப்படும்.

டிமென்ஷியா வராமல் தடுப்பதற்கு மூளையின் ஆற்றலை எப்போதும் அதிகரித்துக் கொள்ளும் வழிவகைகளைக் கையாள வேண்டும். மூளைக்கு வேலை தரும் சுடோகு அல்லது குறுக்கெழுத்துப் போட்டிகளை செய்து பார்க்க வேண்டும். புத்தகம் வாசித்தலை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடுக்குவாதம் (Parkinson)

கை அல்லது கை விரல்கள் நடுக்கம், உடல் இறுக்கம், பேச்சில், நடையில் தடுமாற்றம் போன்றவை நடுக்குவாத நோய்க்கான அறிகுறிகள். கை மற்றும் கால்களின் ஒரு பக்கத்தில் மட்டும் இயக்கம் குறைந்து, நடக்கவோ, கைகுலுக்கவோ சிரமப்படும் நிலை ஏற்படும். இதனால் நடக்கும்போது சமநிலை கிடைக்காமல் மெதுவாக நடப்பார்கள். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். எழுதுதல். சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும். மலச்சிக்கல் பிரச்னையும் அதிகமாகும்.

ஒருவருக்கு, பார்க்கின்சன் நோய் இருப்பது தெரிய வந்தால் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அளித்து குணமாகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருந்துகள் மூலமாகவே 70  சதவிகிதத்தினர் பார்க்கின்ஸன் நோயில் இருந்து விடுபடுகிறார்கள். மீதம் உள்ள 30 சதவிகிதத்தினருக்குத்தான் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

வாழ்வியல் மாற்றங்களுக்கான ஆலோசனைகள்...
வயதாகும் அைனவருக்கும் முதலில் ஏற்படும் பொதுவான பிரச்னை செரிமானக்குறைவு. எதை சாப்பிட்டாலும் செரிப்பதில்லை என்று சொல்லிக்கொண்டு ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதுவே அனைத்து சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. காய்கறிகள், பழங்கள் என எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது, புதிதாக மொழி, இசைக்கருவிகள் போன்று எதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வது என எப்போதும் மூளையை பிஸியாக வைத்துக் கொள்ளலாம். எப்போதும் வீட்டுக்குள் தனிமையில் இருக்காமல் தங்களுக்கென்று நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு இணைந்து இருப்பதால் மனச்சோர்வை தவிர்க்கலாம். எளிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

தூக்கமின்மைக்கான தீர்வுகள்

உடல் இயக்கங்கள் குறைவதாலும், பகல் நேரங்களில் தூங்குவதாலும் முதியோருக்கு 5 மணி நேர தூக்கமே போதுமானது. இதை உணராமல் ‘சரியான தூக்கம் இல்லை. எனக்கு தூக்க மாத்திரை வேண்டும்’ என்று கேட்பார்கள். இது தவறு. தூக்க மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இரவு உணவுக்குப் பிறகு வீ்ட்டுக்குள்ளேயோ தெருமுனை வரையோ சிறிது நேரம் நடந்து விட்டு வந்தால் தூக்கம் வரும். வயதானவர்கள், முதுமையில் வரும் மாற்றங்களை எதிர்கொண்டு, அதற்கேற்ற வகையில் தன் வாழ்க்கை முறையையும், உணவுமுறையும் மாற்றிக்கொள்வதன் மூலம் முதுமையை சொர்க்கமாக்கலாம்.

தெளிவான பார்வைத் திறனுக்கு கண் அறுவை சிகிச்சை மருத்துவர் கௌசிக் வழங்கும் ஆலோசனைகள்

‘‘பார்வை குறைபாடுகள் 40 வயதிலேயே தொடங்கிவிடுகிறது. பிற நோயின் தாக்கத்தினாலும் பார்வை குறைபாடுகள் மற்றும் கண்களில் மாற்றங்கள் பல ஏற்படுகிறது. இதில் வெள்ளெழுத்து மாற்றம் 40 வயதை கடந்த அனைவருக்கும் தோன்றுவதாகும். படிக்கக் கூடிய எழுத்துகள் சரியாகத் தெரியாது. இது மருத்துவரை அணுகி முறையான பரிசோதனைக்கு பிறகு கண்ணாடி அணிந்தால் போதும். கண்புரை நோயை குணப்படுத்த லேஸர் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய பிரச்னையால் ஏற்படுகிற Retinopathy பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் கண்ணுக்குள் ஊசி, லேஸர் மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிட முடியும். Glaucoma என்கிற கண்நீர் அழுத்த நோய் பாதிப்பை சொட்டு மருந்தின் மூலமே சரி செய்து விடலாம்.

40 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கண் மருத்துவரை சந்தித்து கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய பிரச்னை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவரின் வழிகாட்டுதலின்படி கண்களில் சொட்டு மருந்து இடுவது, மாத்திரைகள் சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது போன்றவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். அன்றாட உணவில் கேரட், கீரை வகைகள், மீன் உணவுகள் போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் எளிமையான உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் முதுமை வந்தாலும் தெளிவான பார்வையோடு நீங்கள் இருக்கலாம்.’’

- உஷா நாராயணன்,

 க.இளஞ்சேரன்
படங்கள்:ஏ.டி.தமிழ்வாணன்