புற்றுநோயை வென்ற 5ம் வருடம் !



நம்பிக்கை

விளம்பரம், ஃபேஷன் ஷோ, படப்பிடிப்பு, எப்போதும் மொய்க்கும் கேமரா கண்கள், கால்ஷீட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் மனிஷா கொய்ராலா. ஒரு நாள் அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தபின் சற்று நிலைகுலைந்துதான் போனார் மனிஷா.

ஆனால், அதையெல்லாம் தாண்டி வரவேண்டும் என்ற மன உறுதியோடு ஒரு கட்டத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டும் வந்திருக்கிறார். இப்போது அந்த வெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு ஐந்து வயது. ‘‘திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லோருமே 10 ஆண்டு சுழற்சியில் ஒரு நாள் தோல்வியை சந்தி–்த்தே ஆக வேண்டும். நம்முடைய புகழ் ஒருநாள் இல்லாமல் போய்விடலாம். ரசிகர்கள் எப்போதும் நம்மை ரசித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள், நம் நடிப்பு அவர்களுக்கு போரடிக்கும், இதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்ததுதான்.

அதனால் பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. பாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அப்படித்தான். இதுதான் வாழ்க்கையின் உண்மை. இந்த விஷயங்களை தனிப்பட்ட முறையில் நான் எடுத்துக் கொள்ளவில்லை, ஏற்ற, இறக்கம் இருப்பதுதான் வாழ்க்கையின் தீர்ப்பு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

ஆனால், கேன்ஸரோடு போராடிய வாழ்க்கையின் கடினமான இந்த 5 வருடங்கள் கற்றுக் கொடுத்திருப்பது ஏராளம். நோயுற்ற நாட்களில் நாம் ஒதுக்கப்படுவது மிகவும் கொடுமையானது, வலிமிகுந்தது. முதலில் பக்குவமற்ற நிலையில் சற்று வருத்தம் அடைந்ததென்னவோ உண்மை. அதன்பிறகு நடப்பவற்றை அதன்போக்கில் ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டுவிட்டேன். முக்கியமாக, எல்லாவற்றையும் மன்னிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது புற்றுநோய்.

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்தவுடன் பழைய வாழ்க்கையையே இழந்துவிட்டதுபோல் உணர்ந்த தருணத்தின் துயரத்தை வேறு எவற்றோடும் ஒப்பிட முடியாது. துயரமான நாட்கள் நமக்கு அறிவுப் புதையலைப் போன்றவை’’ என்று மனிஷா தான் நோயோடு போராடிய காலங்களை பகிர்ந்து கொள்கிறார்.

பொதுமக்களிடையே புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களையும் இப்போது செய்து வருகிறார். ‘நான்பெற்ற அந்த வலியை யாரும் அனுபவிக்கக்கூடாது என்பதே என் நோக்கம். மக்களை ஊக்குவிப்பதும், வழிகாட்டுவதும் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். இதோ புற்றுநோயில்லாத 5 வருடம் நிறைவடையப் போவதையும் மகிழ்ச்சியோடு கொண்டாடப் போகிறேன்’ என்று அதன் கொண்டாட்டத்துக்கும் தயாராகி வருகிறார்.

தன்னுடைய அபாரமான போராட்ட குணத்தின் காரணமாக இப்போது சஞ்சய்தத்தின் படத்தின் மூலம் சினிமாவிலும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.வாழ்த்துகள் மனிஷா!

- உஷா நாராயணன்