கண் கட்டுதே...



விழியே கதை எழுது
 

நம் எல்லோருக்குமே வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது கண்கட்டிகளால் அவதிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருக்கும். சிலர் அடிக்கடி கண்களில் கட்டிகள் தோன்றி அவதிப்படுவார்கள். சூட்டுக்கட்டி என அவர்களாகவே ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு அப்படியே விட்டுவிடுவார்கள். கட்டி தானாக சரியாகிவிட்டாலும் மீண்டும் வரும். சிலருக்கு அடிக்கடி இந்த கண்கட்டி ஏன் வருகிறது? எப்படி தவிர்ப்பது?

கண் இமையின் ஓரத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தொற்றுக்குள்ளாவதால் ஏற்படுவதே கண்கட்டி. Staphylococcal என்கிற பாக்டீரியாவினால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் Stye என கண்கட்டியை சொல்கிறோம். கண்கட்டியானது கண் இமையின் உட்பக்கத்திலோ அல்லது வெளிப்பக்கத்திலோ பரு மாதிரியான அளவில் தோன்றும். உள்ளே சீழ் பிடித்திருக்கும்.

கண்களில் வலி, சிவந்து போவது மற்றும் வீக்கம் ஆகியவையே இதன் அறிகுறிகள். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றும். ஆனால், அது மட்டுமே இல்லாமல் கண்கட்டி இருக்கும் ஒருவரிடமிருந்து அந்தத் தொற்றானது மிகச் சுலபமாக இன்னொருவருக்குப் பரவலாம்.
 இந்தக் கட்டிக்குக் காரணமான Staphylococcal பாக்டீரியா நம் எல்லோர் உடலிலுமே இருக்கும். எனவே, மற்றவரிடமிருந்து தொற்றாமல் தாமாகவே இந்தக் கட்டிகள் ஒருவருக்கு வரலாம். பெரும்பாலான கண்கட்டிகள் தானாகவே சரியாகிவிடக்கூடியவை என்பதால் பயப்படத் தேவையில்லை. கண்கட்டிகளால் பார்வைத்திறனில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது என்பது ஓர் ஆறுதல் செய்தி.

கண்கட்டிகளில் இரண்டு வகைகள் உண்டு. இமையின் வெளிப்புறத்தில் தோன்றும் கட்டிகள் பெரும்பாலும் தற்காலிகமானவை. தானாக சரியாகி
விடக்கூடியவை. உடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான வலியை ஏற்படுத்தும். இமையின் உள்புறத்தில் கிளம்பும் கட்டியானது கடுமையான வலியைத் தரும். உறுத்திக்கொண்டே இருக்கும்.

இந்தக் கட்டியானது தொற்று முழுவதும் குணமடைந்ததும் முற்றிலும் சரியாகிவிடும். தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து சில உள்கட்டிகள் கண் மருத்துவர்களால் மட்டுமே சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு நீக்கப்பட வேண்டியிருக்கும்.கண் கட்டிகளுடன் சிலருக்கு வேறு சில அறிகுறிகளும் தென்படலாம். அதாவது, கண்களில் கண்ணீர் வழிவது, பார்வை மங்குதல் போன்றவையும் இருக்கலாம். கண்ணுக்குள் ஏதோ புகுந்துவிட்டது போன்ற உணர்வைத் தரலாம். கண் மருத்துவர்கள் இதை Foreign body sensation என்கிறார்கள். உறுத்தல் அதிகமானால் மருத்துவரைப் பார்ப்பதே பாதுகாப்பானது.

இது தவிர கண் கட்டியோ, வீக்கமோ, உறுத்தல் உள்ளிட்ட அறிகுறிகளோ ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும். கண் இமைகளில் ஏற்பட்ட வீக்கமானது பார்வையில் பிரச்னையை ஏற்படுத்தும்போதும் மருத்துவ ஆலோசனை அவசியம். கண்களில் தாங்க முடியாத வலி இருந்தாலும் கண் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

அடிக்கடி கண்களில் கட்டிகள் வருவோர், அதை மிகத் தீவிரமாக அணுக வேண்டும். இப்படி அடிக்கடி வருகிற கண் கட்டிகள் மிக மோசமான சருமத்
தொற்றின் அறிகுறியாகக்கூட இருக்கக்கூடும்.இதற்கான சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொள்வோம்.கண்களில் தோன்றும் கட்டிகளை நாமாகவே உடைக்கவோ, கிள்ளவோ கூடாது. அது தானாகவே உடையும் வரை பொறுமை காக்க வேண்டும். கண்களின் மேல் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சின்னதாக ஒரு நிவாரணம் கிடைக்கலாம்.

கட்டி பழுத்து உடையப் போகிற நிலையில் இருந்தாலும் அதைப் பிதுக்கி உள்ளே உள்ள சீழை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம். தேவைப்பட்டால் மருத்துவரிடம் கேட்டு வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

கட்டியின் அளவு மற்றும் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து தொற்று நீக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பதில் தொடங்கி, மிகச் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்வது வரை தேவையான சிகிச்சையை மருத்துவர் மட்டுமே முடிவு செய்வார்.

கண்கட்டி வராமல் தடுக்க...

அதிகபட்ச சுகாதாரத்தைக் கடைபிடிப்பதன் மூலம்தான் இதிலிருந்து தப்பி இருக்க முடியும். கண்களையும் கைகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அடிக்கடி கண்கட்டிகள் வருவோர் அல்லது அடிக்கடி தொற்றுக்குள்ளாகிறவர்களின் தலையணை, கண்ணாடி, டவல், படுக்கை விரிப்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

(காண்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி

விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்