டியர் டாக்டர்




தங்கள் குழந்தையைப் பற்றிய பெரும்பாலான பெற்றோர்களின் கவலையும், எண்ணமும் ஒன்றுதான்... அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய, அவர்கள் கல்வியில் முன்னணி மாணவராக உருவாக வேண்டும். அவ்வளவுதான்! இதனாலேயே முதல் ரேங்க் எடுக்கும் மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போதும், அதிக ஐ.க்யூ கொண்ட குழந்தைகளைப் பற்றி கேள்விப்படும்போதும் பெருமூச்சு விடுகிறார்கள். அதுபோன்ற பெற்றோருக்கு வழிகாட்டும் விதத்தில் அமைந்திருந்தது அட்டைப்படக் கட்டுரை.
 - ராஜேந்திரன் தனபால், சேலம்.

இன்றைய மருத்துவமனைகளின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது ‘அவசரத்துக்கு உதவாத அவசர சிகிச்சை’ கட்டுரை. அனுபவம் பெறாத மருத்துவர்களால் ஓர் உயிர் பறிபோனதுதான் மிச்சம் என்பது ஈடு கட்ட முடியாத இழப்பு. 24 மணி நேர மருத்துவமனை என்று விளம்பரப்படுத்திக் கொள்கிற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை அப்படியே நம்பிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
- குமரன், ஆதம்பாக்கம்

பெண்களைப் பாதிக்கிற மாரடைப்பு, இதயக்கோளாறு ஆகியவற்றின் அறிகுறிகளைக் கூறியதோடு மட்டுமல்லாமல், உடலில் ஏற்படுகிற மாறுதல்களையும் வைத்து பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்த டாக்டர் நிவேதிதாவுக்கும், வெளியிட்ட உங்களுக்கும் நன்றிகள் பல!
 - ருக்மணி, அகரம்.

பாரம்பரியம் மிக்க மருத்துவப் பொருட்களின் குணங்கள் பற்றி சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் கூறி வருவதைத் தவறாமல் படித்து வருகிறேன். இயல்பு வாழ்க்கையிலேயே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எத்தனை மகத்துவம் இருக்கிறது என்று யோசித்தால் ஆச்சரியம் வராமல் இல்லை!
- சி. கோபாலகிருஷ்ணன், தாம்பரம்.

இரண்டு கைகளும், கால்களும் இல்லாத தன்னம்பிக்கை மனிதர் நிக் உஜிசிக் பற்றிப் படித்ததும் சிலிர்த்துப் போனேன். சின்னச் சின்ன தோல்விகளுக்கே துவண்டு போய் தவறான முடிவு எடுப்பவர்களுக்கு அவர் ஒரு மகத்தான பாடம். சல்யூட்!
- நாகராஜன், திருநெல்வேலி.