காசநோயை குணப்படுத்தலாம்!



நம்பிக்கை

‘‘மனித சமூகத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்களில் முக்கியமானதாக காசநோய் உருவாகி வருகிறது. ஆண்டுதோறும் உலக அளவில் 10 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒரு லட்சத்துக்கும் மேல் உயிரிழக்கின்றனர். இதில் இந்தியாவில் மட்டுமே நான்கில் ஒரு பங்கு அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது’’ என்று எச்சரிக்கிறார் தொற்று நோய் ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான சையத் ஹிஸார்.

‘‘காற்றில் இருக்கக்கூடிய நுண்ணுயிரியான Mycobacterium tuberculosis என்ற பாக்டீரியாவின் தாக்குதலால் வரும் தொற்றுநோயே காசநோய் என்கிறோம்.
காசநோய் உடலில் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் காணப்படலாம். காற்றில் உள்ள பாக்டீரியாவால் பரவக்கூடிய நோய் என்பதால் பெரும்பாலும் நுரையீரலிலேயே காணப்படுகிறது.

போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை காசநோய் பாதிப்பதில்லை. அதுவே, நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது காசநோய் எளிதாகத் தாக்குகிறது. நீரிழிவு, எச்.ஐ.வி பாதிப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதேபோல, இந்நோய் காற்றில் மூலம் பரவுவதால் எளிதில் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே, காசநோயாளிகளைச் சுற்றி இருப்பவர்களும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். வீட்டில் உள்ள ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் எளிதில் பாதிக்கும் அபாயம் உண்டு. எனவே, மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை செய்துகொள்வது மற்றவர்களுக்கும் நல்லது’’ என்றவரிடம், இந்தியாவில் காசநோய் அதிகம் இருப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டோம்.

‘‘இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு என்பதால் காசநோய் இந்தியாவில் பரவுவதற்கான சூழல் அதிகம் உள்ளது. காசநோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக இருப்பதும் முக்கிய காரணம். காசநோய் இருப்பதைக் கண்டறிந்த பிறகு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது அல்லது மருத்துவரை ஆலோசிக்காமலே மருந்து எடுத்துகொள்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணத்தாலும் காசநோய் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது.

தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், பசியின்மை, எடை குறைவு, விட்டுவிட்டு காய்ச்சல் மற்றும் சளியுடன் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகி காசநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது அவசியம். நோய் உறுதியானால் மேற்கொண்டு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’’ என்பவர், காசநோய் பிரச்னைக்கான தீர்வையும் முன்வைக்கிறார்.

‘‘காசநோய்க்கான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலுமே இலவசமாகக் கிடைக்கிறது. எனவே, பொதுமக்கள் அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்த்துக் கொள்ளும்போது காசநோயை வராமல் தவிர்த்துவிட முடியும்.

தற்போது காசநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும், அதை முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய அளவுக்கு வீரியமிக்க மருந்துகளும் வந்திருப்
பதால் காசநோய் வந்துவிட்டாலும் அதைப் பற்றிய அச்சம் தேவையில்லை’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்