வெயிலில் சுற்றுகிறவர்கள் கவனத்துக்கு...



ஹேப்பி சம்மர்

கோடை வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்கிறவர்கள், உடல் உழைப்பாளிகள் மற்றும் பல வகையான தொழிலாளர்கள் இவர்களுடன் வெயிலில் வெளியிடங்களுக்குச் செல்பவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரன். 

வெயிலில் அலையும்போது உடலின் வெப்பநிலை கூடுவதால் அதிகமாக வியர்க்கிறது. இதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து அதிக அளவு வெளியேறுகிறது. அந்த நீர்ச்சத்தோடு சேர்ந்து தாது உப்புக்களும் வெளியேறுகிறது. இதனால் உண்டாகும் Dehydration காரணத்தாலேயே உடலில் வறட்சி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. கோடை வெயிலின் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் தீவிரமடைகிறபோது உயிருக்கே ஆபத்தாகவும் முடிகிறது.

கோடை வெயிலால் வியர்வை துர்நாற்றம், அரிப்பு, மயக்கம், வேனல்கட்டி, நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கற்கள் மற்றும் முகம், கை, கழுத்து போன்ற உடல் பகுதிகளில் நிறமாற்றம் ஏற்பட்டு தோலின் நிறம் கருமையாக மாறுதல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வெயிலில் செல்பவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்து செல்ல வேண்டும். கருப்புநிற குடைகளைத் தவிர்த்து வெளிர்நிற குடைகளைப் பயன்படுத்த வேண்டும். முதியவர்கள் மற்றும் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோயுள்ளவர்கள்மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.

Sheetkari, Sheetthali என்கிற மிக எளிய பிராணாயாமப் பயிற்சிகளை தினமும் காலை, மாலை வேளைகளில் செய்துவந்தால் உடல் குளிர்ச்சியாவதோடு, தாகத்தையும் கட்டுப்படுத்தலாம்.வியர்வையைக் கட்டுப்படுத்த வேதிப்பெருட்கள் கலந்த பவுடர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்த கலவையை தினமும் உடலுக்குத் தேய்த்து குளித்து வந்தால் கிருமிகள் நம்மைஅண்டாது. சரும நோய்களும் நம்மை அண்டாது.

வேப்பிலையை நீரில் கொதிக்கவைத்து ஆறியபிறகு அந்தநீரில் குளித்து வந்தால் தொற்றுநோய், பொடுகு பிரச்னைகளைத் தடுக்கலாம். சோற்றுக் கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு அதன் சோற்றுப் பகுதியை வெட்டி எடுத்து 50 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம். வியர்க்குரு போன்ற சரும பிரச்னைகளுக்கு நுங்கு அல்லது சோற்றுக் கற்றாழையின் உள்பகுதியை எடுத்து அதன்மீது பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இரவு நேரங்களில் சந்தனத்தை அரைத்து கழுத்து, மார்பு, கைகளில் பூசி உறங்குவதால் உடலை நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம். முகம், கை, கால்களை அவ்வப்போது குளிர்ந்த நீரில்கழுவுவது நல்லது!

உடற்பயிற்சி செய்யும் முன்...

வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் கோடைகாலத்தில் என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும்? விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் கோபாலகிருஷ்ணன்.‘‘எந்த வயதினராக இருந்தாலும் காலை அல்லது மாலையில் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்து வருவது போதுமானது. ஆண், பெண் இருபாலருக்குமே இது பொருந்தும். எந்த மாதிரியான உடற்பயிற்சியாக இருந்தாலும், ஒவ்வொரு பயிற்சியையும் 35 விநாடி முதல் 45 விநாடி வரை செய்யலாம். பயிற்சிக்கு இடையே 2 நிமிடங்கள் ரிலாக்ஸ் டைம் எடுப்பது அவசியம். உடற்பயிற்சிக்கு இடையே போதுமான தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

வழக்கமாகவே உடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவில் வியர்வை வெளியேறும். கோடை காலத்தில் வழக்கத்தைவிட இன்னும் ஏராளமாக வியர்வை வெளியேறும். அதனுடன் உப்பு போன்ற தாது சத்துக்கள் வெளியேறுவதால் தசைப் பிடிப்பு ஏற்படும். இதுபோல் தசைப் பிடிப்பால் அவதிப்படுபவரை சாவாசனம் என்ற யோகாசன முறையைச் செய்ய வைத்து, காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பின்னர், நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். இவ்வாறு செய்வதால், உள்ளுறுப்புகளுக்கு ஆக்சிஜன் அதிகளவில் செல்லும்.

அதேபோல், ஒரு சிலருக்கு தசை கிழிதல் போன்ற Muscle Injuries ஏற்படும். அதற்கு முதலில் பிசியோதெரபிஸ்ட்டிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரும் காயம் குணம் ஆகவில்லை என்றால், காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.’’