முதியோர் வாழ்வில் பாலியேட்டிவ் கேர்



வழிகாட்டும் வலிநிவாரண சிகிச்சை

வலி மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர் ரிபப்ளிகா


முதுமை காரணமாகவும் அது உண்டாக்கும் பல்வேறு நோய்கள் காரணமாகவும் முதியவர்கள் வாழ்க்கை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு ஒரே நேரத்தில் நீரிழிவு, இதய நோய், எலும்புத் தேய்மானம், எதிர்ப்பு சக்திக் குறைபாடு, செரிமானக் கோளாறு, ரத்த அழுத்தம் எனப் பல நோய்களும் சேர்ந்து கொள்ளும்.

அரிதாக சிலருக்கு புற்றுநோய் மாதிரியான பாதிப்புகளும் வரலாம். இத்தனையையும் சமாளித்து வாழ்வது என்பது முதியோர்களின் வாழ்க்கையில் பெரிய சாபமாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாலியேட்டிவ் கேர் அவர்களுக்குப் பயன்படுகிறது.

நரம்பு சம்பந்தப்பட்ட Neuro degenerative disorders என்கிற பிரச்னை முதுமையில் வரலாம். வயோதிகத்தின் காரணமாக நரம்புகள் பலவீனமடைந்து நரம்புத் தசைகளின் செயல்களும் குறைய ஆரம்பிக்கும். அதற்கொரு உதாரணம் பார்க்கின்சன்ஸ் பிரச்னை. அதில் பலவகைகள் உள்ளன. உடலின் பேலன்ஸை இழந்திருப்பார்கள். மறதி இருக்கலாம்.

உடல் இயக்கத்தின் வேகம் குறைந்திருக்கும். நடையில் தளர்வு தெரியும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டு, நரம்புகள் மேலும் சேதம் அடையாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால், பலரும் முதுமையில் அப்படித்தான் இருக்கும் என இந்த அறிகுறிகளை எல்லாம் அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

இந்தப் பிரச்னையை சந்திக்கிற முதியவர்களுக்கு நரம்புகளில் கடுமையான வலி இருக்கும். மூச்சு வாங்கும். உடலை பேலன்ஸ் செய்வதில் பிரச்னைகள் இருக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகளை வித்தியாசமாகப் பார்க்கவோ, அவர்களை முறைப்படிப் பராமரிக்கவோ தெரியாது.இந்தப் பாதிப்பு உள்ள முதியவர்கள் சாப்பிடும் வேகத்தில் கூட மாற்றம் இருக்கும்.

ஆனால் அதைக்கூட குடும்பத்தாரால் புரிந்துகொள்ள முடியாது. ‘என்ன குழந்தை மாதிரி மெதுவா, சிந்தி சிந்தி சாப்பிடறீங்க’ எனக் கோபித்துக் கொள்வார்கள். இது அவர்கள் தவறல்ல. கைகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதுதான் காரணம். அதனால்தான் நடப்பதில் பேலன்ஸ் இருக்காது. திடீரென அவர்களால் வேறு திசைக்கு உடலை மாற்ற முடியாது. நடந்துகொண்டே இருப்பார்கள்.

யாராவது கூப்பிட்டால் சட்டென அவர்களால் கூப்பிடும் திசைக்குத் திரும்ப முடியாது. அப்படியே திரும்பினாலும் விழுந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதேபோல உட்கார்ந்து எழுந்திருக்கக் கஷ்டப்படுவார்கள். பார்க்கின்சன் நோயுடன் சிலருக்கு பக்கவாதப் பிரச்னையும் இருக்கும். பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் நரம்புகளின் வலிக்கும், நரம்புகளில் இல்லாமல் போன ரத்த ஓட்டத்துக்கும் மருந்துகள் கொடுக்கப்படும். மயக்கத்துக்கும் மருந்துகள் கொடுப்போம். உடலின் மெட்டபாலிக் அளவு சரியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும்.

 இந்த விஷயத்தில் குடும்பத்தாரின் புரிதலும் ஒத்துழைப்பும் மிக அவசியம். முதியவர்கள் வேண்டுமென்றே இப்படியெல்லாம் நடந்துகொள்ளவில்லை... அவர்களை மீறிய செயல்கள்தான் எல்லாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இன்னும் சில முதியவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு இருக்கும். உடலில் அதிக நீர் சேர்ந்து பாரமாக உணர்வார்கள். வலியையும் உணர்வார்கள்.

கால்களில் நீர் சேர்ந்து மூச்சு முட்டக்கூடும். அந்த அதிகப்படியான நீரை பாலியேட்டிவ் கேர் சிகிச்சை மூலம் எடுக்க வேண்டி யிருக்கும். பாலியேட்டிவ் கேர் தவிர்த்து முதியவர்களின் மற்ற பிரச்னைகளுக்காக மருத்துவர்களை நாடும்போது, குறிப்பிட்ட அந்தந்த நோய்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அந்தளவு மருந்துகள் தேவையா, அவர்களது உடல் அதைத் தாங்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அது பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் மட்டும்தான் கவனிக்கப்படும்.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு அளவுக்கதிமான மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தது. எங்களிடம் பாலியேட்டிவ் கேர் சிகிச்சைக்கு வந்தபோது அந்த மருந்துகளைக் குறைத்து, அதற்குப் பதிலாக நரம்புகளில் ரத்த ஓட்டத்துக்கு வைட்டமின் E மாத்திரைகள் கொடுத்தோம். பேலன்ஸ் இல்லாமல் தடுக்கி விழாமல் இருக்க சில மருந்துகள் கொடுத்தோம். அதன் பிறகு சாப்பிடுவதிலும் நடப்பதிலும் பேலன்ஸ் சரியானதைப் பார்த்தோம். அத்துடன் அவரது தன்னம்பிக்கை அளவும் அதிகரித்ததைப் பார்த்தோம்.

கல்லீரல் செயலிழந்து போன சிலருக்கு அதைக் குணப்படுத்த முடியாத நிலை இருக்கும். அனாவசியமான அதிகப்படியான மருந்துகளைத் தவிர்த்தாக வேண்டும். சிறுநீரக பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற மற்ற நோய்களும் இருக்கலாம். சிலர் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த மருந்துகளைப் பல வருடங்களாக எடுத்துக்கொள்வதே சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. எனவே, அவர்களுக்கு அந்தந்தப் பிரச்னைகளின் தீவிரத்தைப் பொறுத்து குறைக்க வேண்டிய மருந்துகளைப் பார்த்து அதற்கேற்ப மாற்றிக் கொடுக்க வேண்டும். அதாவது, ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகள் கண்டிப்பாகத் தேவை, ஆனால், அந்த நபருக்கு அவை எந்தளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பார்த்து சரியான அளவு கொடுக்க வேண்டியது மிக முக்கியம்.

அதை பாலியேட்டிவ் கேர் சிகிச்சை அளிக்கிற மருத்துவர் மிகச் சரியாகச் செய்வார். நீரிழிவுக்காக பல வருடங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்கிற மருந்து களும் இப்படித்தான். அவ்வப்போது மருத்துவரைப் பார்த்து சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து அதற்கேற்ப கூட்டியோ, குறைத்தோ மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பலரும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்து, மாத்திரைகளையே வருடக் கணக்கில் தொடர்ந்து எடுத்துக்கொள்வார்கள். இது சிறுநீரகப் பாதிப்புக்குக் காரணமாகும்.

கொலஸ்ட்ரால் பிரச்னைக்காக எடுத்துக்கொள்கிற மருந்துகளும் முறைப்படி மருத்துவரின் ஆலோசனை மற்றும் அடிக்கடி செய்கிற பரிசோதனை முடிவு
களுக்கேற்ப மாற்றிக் கொள்ளப்படவேண்டும்.இப்படி எதையுமே பொருட்படுத்தாமல் நீரிழிவுக்கும், இதயப் பாதிப்புகளுக்கும், மற்ற பிரச்னைகளுக்கும் மருத்துவரைப் பார்த்து ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகளை வாங்கித் தருவதோடு உறவினர்களின் வேலை முடிந்து விடுவதாக னைத்துக்கொள்கிறார்கள்.

முதியவர்கள் சந்திக்கிற மற்ற அவதிகளைக் கணக்கில் கொண்டு அதற்கான மூல காரணம் அறிந்து தேவைப்பட்டால் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்கிற விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு முழுமையாக வரவில்லை.பாலியேட்டிவ் கேர் சிகிச்சையை தமிழில் வலி மற்றும் ஆதரவு சிகிச்சை என்கிறோம். பெயருக்கேற்றபடி அது அப்படியொரு ஆதரவான சிகிச்சைதான். எப்படி? தொடர்ந்து பார்ப்போம்.

(தொடர்ந்து பேசுவோம்!)

எழுத்து வடிவம் : எஸ்.மாரிமுத்து