அதிகரிக்கும் வெயில்...இனி நாம் என்ன செய்ய வேண்டும்?



ஹேப்பி சம்மர்

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்தத் துவங்கியுள்ளது. ‘10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், இனிவரும் காலங்களிலும் இந்த அளவு வெயிலின் கொடுமையில் அவதிப்படாமலும் இருக்க இனி நாம் என்ன செய்ய வேண்டும்?சித்த மருத்துவர் அபிராமியிடம் கேட்டோம்...

சுகாதாரச் சுற்றுலா!

கோடை விடுமுறையை குடும்பத்துடன் சென்று கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. இப்படிச் செல்லும் சுற்றுலா சில நேரங்களில் பல அசௌகரியங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. இன்பச்சுற்றுலாவை மனநிறைவாகவும், உடலளவிலும் அனுபவிக்க என்னென்ன முன்னேற்பாடுகளோடு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பொதுநல மருத்துவர் சங்கீதா பதிலளிக்கிறார்.

‘‘வெளியிடங்களில் உள்ள அசுத்த உணவு, நீர், பதற்றம், பயணச்சோர்வு ஆகியவை வயிற்றுப்போக்கை உண்டாக்கும். அதனால் பாதுகாப்பான உணவு, நீர் ஆகியவைகளையே உண்ண வேண்டும். சாப்பிடும் முன் கைகளை மிகச் சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக, வெளியிடங்களில் விற்கப்படும் வெட்டி வைத்த பழங்கள், சாலட்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் முழு பழங்களை வாங்கி கழுவிய பிறகு, ஃப்ரஷ்ஷாக நாமே வெட்டி சாப்பிடலாம்.

முடிந்தவரை கொதிக்கவைத்த தண்ணீரை அருந்தவும். நீர் குறைபாடுக்கான அறிகுறிகள், வறண்ட நாக்கு, காய்ந்த சருமம், கண் சுருக்கம் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம். ஸ்கூபாடைவிங் போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மேற்கொள்வதாக இருந்தால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் முன்னரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்குமிடம், பயணச்சீட்டு போன்றவற்றை இணையதளத்தில் தேடும்போது, சுற்றுலா செல்லும் ஊரில் அருகில் உள்ள மருத்துவமனை, மருந்தகங்கள் பற்றிய விபரங்களையும் தேடி குறித்துக் கொள்ள வேண்டும்.

எற்கெனவே உட்கொள்ளும் மருந்துகளை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். வெளிநாடு சுற்றுலா செல்வதாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் சில மருந்துகள் அந்த நாட்டில் தடைப்படுத்தப் பட்டிருந்தால் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளவும்.

முக்கியமாக எல்லா வயதுடையவர்களும், பயணத்துக்கு முன் நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு ஒருமருத்துவ பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. அப்போதுதான் கோடை விடுமுறைக் கொண்டாட்டம்இன்பமாகவும், ஆரோக்கியமாகவும் அமையும்.’’

‘‘மரங்களும் நீராதாரங்களும் இல்லாத, கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் இடங்களில் வெப்பத்தின் தாக்கம்கூடுதலாகவே இருக்கும். வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. ஆனால், நமது தேவைகளுக்காக இயற்கையை மாசுபடுத்தும் பல்வேறு செயல்களை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். இதன் எதிரொலியாகவே ஒவ்வோர் ஆண்டும் பருவநிலை மாற்ற குழப்பத்தால் புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வாகனப் பெருக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பெருக்கம், காடுகளை அழித்தல் என்று பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் அதிகரிப்பதோடு புவியின் வெப்பநிலையும்அதிகரிக்கிறது. இந்த அபாயங்களில் இருந்து நாம் தப்பிக்க அதிகளவு மரக்கன்றுகளை நடுவதே ஒரே வழி. மரக்கன்றுகளை நடுவதோடு நின்றுவிடாமல் அவை பெரிய மரங்களாக வளர்வதற்குத் தேவைப்படும் அளவு 2 வருடங்களாவது  தேவையான நீருற்றி நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.

வேப்பமரம், ஆலமரம், அரசமரம், அத்திமரம், புங்கமரம், புளியமரம், மாமரம் போன்ற நமது தமிழக பாரம்பரியம்மிக்க மரங்களைவிட மிகப் பெரிய சுற்றுச்சூழலுக்கானகவசம் வேறு எதுவும் இல்லை. அதனால், நாம் ஒவ்வொருவரும் குடியிருக்கும் வீட்டினைச் சுற்றி மரங்களை வளர்த்து பசுமையாக வைக்க வேண்டியதுநம்முடைய கடமை. காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் மருத்துவப் பயனுள்ள தாவரங்களை வளர்ப்பதில்
ஆர்வம் செலுத்த வேண்டும்.

வீட்டின் முன்புறம் மா, வேம்பு, தென்னை, கொன்றை, சரகொன்றை போன்ற மரங்களையும், வீட்டின் பின்புறம் கொய்யா, சீத்தா மற்றும் முருங்கை, கறிவேப்பிலை, வாழை போன்றவற்றையும் வளர்க்கலாம். கண்டிப்பாக வீட்டுக்கொரு வேப்பமரம் வளர்க்க வேண்டும். அது வீட்டை குளிர்ச்சியாக வைப்பதோடு, நோய்க் கிருமிகளிடமிருந்து நம் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வேப்பிலை கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் மற்றும் வெப்பமிகுதியால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.

இயற்கையான முறையில் சுகாதாரமான குடிநீர் கிடைக்கச் செய்வது, இயற்கையை பாழ்படுத்தாத மின் உற்பத்திமுறை மற்றும் வாகனப் பயன்பாட்டுமுறையை கொண்டுவருவது, தனிநபர் போக்குவரத்துகளை குறைத்துக் கொண்டு பொது போக்குவரத்தினை அனைவரும் பயன்படுத்தும்படி செய்வது, வாகனம் மற்றும் தொழிற்சாலைப் புகைகளை சட்டப்படி கட்டுப்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசுபாடுகளை உண்டாக்கும் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்குதல் போன்றவற்றுக்கு நீண்டகாலத் தீர்வாக அமையும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. செயற்கையோடு இணைந்து அதற்கு அடிமையாவதைத் தவிர்த்து, இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ முயற்சிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் புவி வெப்பமயமாதலைக் குறைத்து, நாம் நோய் நொடிகளின்றி சுகாதாரமாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும்!’’

-  குங்குமம் டாக்டர் டீம்