சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுப்பது எப்படி?



வழிகாட்டி

நம் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள் முன்பைவிட தற்போது அதிகரித்துவிட்டது. வெப்பமண்டல சூழலாலும், நம்முடைய தவறான உணவுப் பழக்க வழக்கத்தினாலும் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவது அதிகரித்துவருவதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர். இது குறித்து சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் முத்துவீரமணியிடம் கேட்டோம்...

சிறுநீரகக் கற்கள் பற்றி...‘‘நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரியா என்று பலவிதமான தாது உப்புக்கள் உள்ளன. உணவு செரிக்கும்போது இவை எல்லாமே சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

இவற்றின் அளவு சராசரியாக இருக்கும்போது பிரச்னை இல்லை. அதுவே அதிகரிக்கும்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம்போல் படிந்து, கல்லாக உருவாகிவிடுகிறது. இதையே சிறுநீரகக் கல் என்கிறோம். இந்த சிறுநீரகக் கல்லின் அளவு 3 மில்லிமீட்டர் முதல் 7 செ.மீ வரையிலும் கூட இருக்கிறது.’’சீறுநீரகக் கற்கள் எதனால் உருவாகிறது?

‘‘20 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலினத்தவருக்கும் சிறுநீரகக் கற்கள் பாதிப்பு வருகிறது. அதிலும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிக சிறுநீரகக்கல் வருகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, தவறான உணவுமுறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உண்டாவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீரை அடக்குவது, பேராதைராய்டு ஹார்மோன்(Parathyroid) மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன் போன்ற காரணங்களால் சிறுநீரகக் கல் உருவாகிறது.’’

சிறுநீரகக் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

‘‘சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல், குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு ஏற்படும். முதுகு மற்றும் விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரென வலி உண்டாகி முன் வயிற்றுக்கு வலி பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகிற புறவழித் துவாரம் வரை பரவும். இத்துடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.’’

சிறுநீரகக் கல்லால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
‘‘சிறுநீரகப் பாதையில் உருவாகிற கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து விடும் அபாயமும் உண்டு.’’

சிறுநீரகக் கல்லை கண்டுபிடிக்க என்னென்ன பரிசோதனைகள் இருக்கின்றன?
‘‘சிறுநீரகக்கல்லைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன், ஐ.வி.பி(Intravenous Pyelogram) முதலிய பரிசோதனைகளால் சிறுநீரகத்தில் கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, என்ன வகையான கல், சிறுநீரகத்தில் பாதிப்பிருக்கிறதா என தெரிந்துகொள்ள முடியும்.’’

சிகிச்சை முறைகள்...‘‘சிறுநீரகத்தில் இருக்கும் கல்லின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம். 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை Shock wave lithotripsy எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்து கற்களை வெளியேற்றி விடலாம்.
 
சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை Ureteroscopy எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய் போன்ற ஒரு
கருவியை சிறுநீர் புறவழி வழியாக உள்ளே செலுத்தி கற்களை நசுக்கியும் லேஸர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம்.  2 செ.மீ.க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை Nephrolithotomy எனும் முறையில் முதுகில் சிறிய துளைபோட்டு அறுவைசிகிச்சை செய்து அகற்றி விடலாம்.
தற்போது அதிநவீன முறையில் லேஸர் முறையில் கற்களை அகற்றும் சிகிச்சை முறையும் கையாளப்படுகிறது.’’

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
‘‘தினமும் மூன்று முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்படி இந்த அளவை பின்பற்ற வேண்டும். அத்துடன் சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவதும் நல்லது. நீர் சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஒருவருக்கு தினமும் 2.5 கிராம் அளவு உப்பு போதும்.

சமையல் உப்பு என்பது வேதிப் பண்பின்படி சோடியம் குளோரைடு. இந்த சோடியம் உடலில் அதிகமானால் அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்ஸலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும்.

மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றிலும் உப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது. மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டில் பாஸ்பேட் மிகுந்துள்ளது என்பதாலும் தவிர்ப்பது அவசியம்.’’என்னென்ன உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்?

‘‘திரவ உணவுகளான இளநீர், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி
சாப்பிட வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும் சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’

- க.இளஞ்சேரன்
படம் : ஆர்.கோபால்